Published:Updated:

`குழந்தைகளுக்கு ஃபுளு தடுப்பூசி போட வேண்டிய காலமிது!' - அறிவுறுத்தும் மருத்துவர்

தடுப்பூசி
தடுப்பூசி

இந்தக் கொரோனா காலத்தில், குழந்தைகளுக்கு எந்தக் காய்ச்சல், சளி அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பதே அறிவுரை என்கிறார் மருத்துவர்.

வெயில் தணிந்து, பருவநிலை மாற ஆரம்பித்திருக்கிறது. இனி வரும் குளிர்காலத்தில் குழந்தைகள் ஃபுளூ காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்நேரத்தில், கொரோனா தொற்றால் ஏற்படும் காய்ச்சலுக்கும், சாதாரண ஃப்ளூ காய்ச்சலுக்கும் வேறுபாடு காண்பது குறித்து விளக்குகிறார், பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் S.ராதாகிருஷ்ணன்.

பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் S. ராதாகிருஷ்ணன்.
பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் S. ராதாகிருஷ்ணன்.

``பொதுவாக, சளி என்பது அடினோ வைரஸ் (Adenovirus), ரைனோ வைரஸ் (Rhinovirus) தொற்றால் ஏற்படக்கூடியது. அதேபோல, கொரோனா வைரஸ் தொற்றும் சளியை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கிறோம். எனவே, சளி அறிகுறிகளை மட்டுமே வைத்து அது இன்ஃபுளுயென்ஸா வைரஸ் தொற்றா, கொரோனா வைரஸ் தொற்றா என்று வேறுபடுத்த முடியாது. ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மை குறைதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகள் மட்டுமல்ல, ஆஸ்துமா, நிமோனியா போன்ற நோய்களிலும் இவை வெளிப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நிமோனியா, கொரோனா வைரஸ் மட்டுமன்றி இன்ஃபுளுயன்ஸா A, ஸ்வைன் ஆகிய வைரஸ்களாலும் வரலாம். எந்த வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலிலும் அதிக டெம்பரேச்சர் இருக்கும். வைரஸ் தொற்றிலிருந்து பாக்டீரியா தொற்றை வேறுபடுத்தலாமே தவிர, ஒரு வைரஸ் தொற்றையும் மற்றொரு வைரஸ் தொற்றையும் அறிகுறிகளை வைத்து மட்டும் வேறுபடுத்த முடியாது.

flu
flu
pixabay

எனவே, இந்தக் கொரோனா காலத்தில், குழந்தைகளுக்கு எந்தக் காய்ச்சல், சளி அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பதே அறிவுரை. அறிகுறிகள் தெரியும்பட்சத்தில், அது கொரோனாவா இல்லையா என்ற தெளிவைப் பெற ஆர்டி பிசிஆர் (RT - PCR) பரிசோதனை அவசியம். ரத்தத்தில் சில அளவீடுகளை வைத்தும் அது கொரோனா தொற்றா என்று யூகிக்கலாம். அதாவது, சி- ரியாக்டிவ் புரோட்டின் (CRP) அளவை ரத்தத்தில் பரிசோதிக்கும்போது, கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு அது அதிகம் இருக்கும். மற்ற வைரஸ் தொற்றில் இது அதிகரிக்காது. அப்போதும்கூட இந்தப் பரிசோதனை முடிவை வைத்து நாம் யூகிக்கலாமே தவிர, கொரோனா தொற்றை உறுதிப்படுத்த முடியாது. அதற்கு RT - PCR பரிசோதனை அவசியம்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தக் காலத்தில், குழந்தைகளின் பாதுகாப்பு மிக மிக அவசியம். குழந்தைகளைத் தேவையில்லாமல் வெளியில் அழைத்துச் செல்லக் கூடாது. வீட்டிலிருக்கும் பெரியவர்கள் வெளியில் சென்று வரும் சூழலில், மாஸ்க், தனிமனித இடைவெளி, வீட்டுக்குள் வந்ததும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், வீட்டுக்குள் வந்ததும் குளிக்காமல், குறைந்தபட்சம் கைகளைக் கழுவாமல் குழந்தைகளை நெருங்கவோ தொடவோ கூடாது.

vaccine
vaccine
pixabay
"தாயின் வயிற்றுக்குள்ளிருந்து வெளியே வந்த பிஞ்சுக்கை..." அனுபவம் பகிரும் டாக்டர் தமிழிசை #DoctorsDay

அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குத் தவறாமல் போட வேண்டும். நுரையீரலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தடுப்பூசிகளான நிமோனோகாக்கல் கான்ஜுகேட் (Pneumococcal conjugate), இன்ஃபுளுயென்ஸா வேக்ஸின் (Influenza vaccine) ஆகியன அவசியம். அக்டோபர் மாதத்தில் வரும் ஃபுளூ காய்ச்சலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, ஃபுளூவுக்கான தடுப்பூசி போட ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்கள் உகந்தவை. MMR தடுப்பூசி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அதை நிரூபிக்க மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது அவசியம்" என்று கூறினார் டாக்டர்.

அடுத்த கட்டுரைக்கு