Published:Updated:

தனது கல்லீரலைத் தானமளித்துத் தந்தையைக் காப்பாற்றிய மகன்... நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மு.செல்வராஜ், அஜய் குல்சன்
மு.செல்வராஜ், அஜய் குல்சன் ( அறுவை சிகிச்சைக்குப் பின்பு... )

"பரிசோதனையின் முடிவில், எனது தாயின் கல்லீரல் மறுவளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும், அப்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் இருவரது உயிருக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது."

தேனி அருகிலுள்ள பழனிசெட்டிபட்டியில் அலைபேசி உதிரிபாகங்கள் விற்பனையுடன் நகலகம் (Mobile Spares and Xerox) ஒன்றையும் சேர்த்து நடத்தி வருபவர் மு.செல்வராஜ். இவருடைய கல்லீரலின் பெரும்பகுதி பாதிப்படைந்து, கல்லீரலின் செயல்பாடுகள் அனைத்தும் குறைந்து கொண்டிருந்த நிலையில், அந்தக் கல்லீரலை அகற்றிவிட்டு, கல்லீரலைத் தானமாகப் பெற்றுக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால் மட்டுமே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பி.எஸ்சி நர்சிங் படித்து, சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த அவரது 22 வயது மகன் அஜய் குல்சன், தனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாகத் தந்து 52 வயது தந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கும் நிகழ்வு தேனியில் நடந்திருக்கிறது.

இது குறித்துத் தந்தைக்குக் கல்லீரல் தானமளித்துத் தந்தையின் உயிரைக் காப்பாற்றிய அஜய் குல்சனிடம் கேட்டபோது, “எனது தந்தைக்குக் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென்று இரு கால்களும் வீக்கமாகத் தொடங்கின. இந்த வீக்கத்திற்கு உள்ளூரில் சில மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் சரியாகாததால், மேல் சிகிச்சைக்காக அவரைக் கோயம்புத்தூரிலுள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தோம். அங்கு, அவருக்குக் கல்லீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதுடன் அவருடைய கல்லீரல் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

அஜய் குல்சன், மு.செல்வராஜ் (பழைய படம்)
அஜய் குல்சன், மு.செல்வராஜ் (பழைய படம்)

மதுப்பழக்கம் உடையவர்களுக்கு அதிகமாக வரக்கூடிய கல்லீரல் பாதிப்பு நோய், மது உள்ளிட்ட எந்தத் தீயப் பழக்கமுமில்லாத என் தந்தைக்கு எப்படி வந்தது என்று பரிசோதித்துப் பார்த்தபோது, அவருக்கு ஏதாவதொரு நோய்க்கு முன்பு சாப்பிட்ட மருந்து மாத்திரைகளின் பின் விளைவுகளாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. என் தந்தைக்கு இருபத்தைந்து வயதிற்குள்ளாக மூன்று முறை டைபாய்டு காய்ச்சல் வந்திருக்கிறது என்றும், அப்போதுதான் தான் அதிக அளவிலான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். சிறிய வயதில் சாப்பிட்ட மருந்து மாத்திரைகள் இப்படியொரு பின் விளைவை ஏற்படுத்தியிருக்கும் வேதனையை என்னவென்று சொல்வது?

என் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் 50 சதவிகிதக் கல்லீரல் பாதிப்பிலிருந்து அவரை விடுவிக்க மருத்துவர்கள் சில மருந்துகளைப் பரிந்துரைத்து, மூன்று மாதங்கள் அதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தனர். எனது தந்தையும் மூன்று மாதங்கள் அந்த மருந்து மாத்திரைகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தார். ஆனால், மூன்று மாதங்களுக்குப் பின்பு, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த போது, எனது தந்தைக்கு அந்த மருந்து மாத்திரைகளும் எந்தப் பயனையும் அளிக்கவில்லை. இந்நிலையில், கல்லீரல் பாதிப்பு மேலும் அதிகரித்து 80 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது என்று தெரிந்தபோது, எங்களுக்கு மேலும் அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

என் தந்தையைப் பரிசோதித்த சிறப்பு மருத்துவர் பாரி விஜயராகவன் அவர்கள், இனி கல்லீரல் பாதிப்பிலிருந்து அவரை முழுமையாக மீட்டெடுக்கக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது ஒன்றுதான் மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்று தெரிவித்தார். மேலும், மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து பெறும் கல்லீரல் தானம் அல்லது நோயாளியுடன் இரத்தத் தொடர்புடைய உறவினர்களிடமிருந்து பெறும் கல்லீரல் தானம் என்று இரண்டில் ஒன்றைப் பெற்றுக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன் வரும்படி தெரிவித்தார். மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து பெறும் கல்லீரல் தானத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். அந்த வரிசைப்படி கல்லீரல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுமென்பதால், உங்கள் குடும்பத்தினரில் ஒருவர் கல்லீரல் தானமாகத் தர முன் வந்தால் மட்டுமே அறுவை சிகிச்சையை விரைவாகச் செய்து, தந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றார்.

சிறப்பு மருத்துவர் பாரி விஜயராகவன்
சிறப்பு மருத்துவர் பாரி விஜயராகவன்

அதனைக் கேட்டவுடன், நான் எனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற எனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாகத் தருகிறேன் என்று தெரிவித்தேன். ஆனால், அப்போதைய சூழலில் என் தாய் சந்தனமாரியம்மாள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தானேத் தனது கணவருக்குக் கல்லீரலைத் தானமாகத் தருவதாகத் தெரிவித்தார். உடனே அதற்கான, பல்வேறு சிறப்பு மருத்துவர்களின் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவில், எனது தாயின் கல்லீரல் மறுவளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும், அப்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் இருவரது உயிருக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருடைய கல்லீரல் தானம் மருத்துவரால் நிராகரிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் தந்தையின் உயிரைக் காப்பாற்ற, என் கல்லீரலைத் தானமாகத் தருவதற்கு மீண்டும் நான் முன் வந்தேன். என் அம்மாவினைச் சமாதானம் செய்து, என் கல்லீரல் தானத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டினேன். கடைசியாக அம்மாவும் ஒத்துக்கொண்டார். அதன் பிறகு, எனக்குப் பல்வேறு சிறப்பு மருத்துவர்களின் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவுகள் அனைத்தும் மிகச் சரியாக இருந்ததால், எனது தந்தைக்கான எனது கல்லீரல் தானம், மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன் பிறகு, கல்லீரல் தானத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, தேனியிலுள்ள நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சுல்தான் அவர்களின் முன்பாக, கல்லீரல் தானம் பெறுபவர், தானமளிப்பவர், தானமளிப்பவரைச் சார்ந்திருப்பவர் (என் அம்மா) என்று மூன்று பேரும் கையொப்பமிட்டு, அந்த ஆவணங்கள் அனைத்திலும் வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர், தேனி உள்வட்ட வருவாய் ஆய்வாளர், தேனி வட்டாட்சியர் மற்றும் பெரியகுளம் துணை ஆட்சியர் ஆகியோரின் ஒப்புதல்களையும் பெற்று மருத்துவமனையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிறகு, நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
அதனைத் தொடர்ந்து கடந்த 18-8-2021 அன்று நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் போது, எனது தந்தையின் பாதிக்கப்பட்ட கல்லீரல் முழுவதும் நீக்கப்பட்டது. எனது கல்லீரலின் 60 சதவிகிதம் பகுதி எடுக்கப்பெற்று எனது தந்தைக்குப் பொருத்தப்பட்டது. இந்தக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது, எனது தந்தையும் காப்பாற்றப்பட்டார்.
சைனிக் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விருப்பமா? நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்பு, தற்போது எனது கல்லீரல் 40 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துவிட்டது என்றும், எனது தந்தைக்குப் பொருத்தப்பட்டிருக்கும் கல்லீரலையும் அவருடைய உடல் ஏற்றுக் கொண்டிருப்பதுடன் சிறிது வளர்ச்சியுமடையத் தொடங்கியிருக்கிறது என்றும் தெரிவித்த மருத்துவர்கள் எங்களைக் கோயம்புத்தூரிலிருந்து தேனிக்குச் செல்ல அனுமதித்தனர். தற்போது நாங்களிருவரும் நலமாக எங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டோம்.

மருத்துவர் அருள்ராஜ் இராமகிருஷ்ணன்
மருத்துவர் அருள்ராஜ் இராமகிருஷ்ணன்

எங்கள் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க உதவிய மருத்துவர்கள் பாரி விஜயராகவன் மற்றும் அருள்ராஜ் இராமகிருஷ்ணன் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய அனைத்து மருத்துவக் குழுவினர்களுக்கும், எங்கள் அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான ரத்ததானம் வழங்கி உதவியவர்கள், தேவையான பொருளாதார உதவிகளைச் செய்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எங்கள் அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்து முடிய வேண்டுமென்று பிரார்த்தனைகள் செய்த அனைவருக்கும் இங்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இரத்தத் தொடர்புடைய உறவினர்களுக்கு கல்லீரல் தானம் தேவையிருப்பின், நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் எவ்வித அச்சமுமின்றித் தங்களது கல்லீரலைத் தானமாகச் செய்திட முன்வரவேண்டும் என்பதை இங்கு வேண்டுகோளாகவும் முன் வைக்கிறேன். கல்லீரல் தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும். அதற்கான பரப்புரைகளைச் செய்திடவும் நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு