Published:Updated:

சயின்ஸ் ஃபிக்‌ஷன்களில் பார்த்த `சஸ்பெண்டட் அனிமேஷன்' சிகிச்சை நிஜமாகிறதா? மருத்துவ உலகின் புது பாய்ச்சல்

Brain
Brain

சாதாரணமான உடல் சூட்டில், மூளையால் ஆக்ஸிஜன் இல்லாமல் 5 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாது. ஆனால் இம்முறையில், மூளையின் திசுக்கள் பாதுகாக்கப்படுவதால், மூளை செயலிழப்பு அடையாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் பலர் சாலை விபத்துகளைச் சந்திக்கின்றனர். அதில் சிலருக்கு, சிறிய காயங்கள் ஏற்படுகிறது. சிலர் பலத்த காயங்களுடன் உயிரிழக்கின்றனர். இதற்குக் காரணம், பலத்த காயங்கள் அவர்களுக்கு ஏற்படுத்தும் ரத்த இழப்பே. அவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களுக்குக் கிடைக்கும் நேர அவகாசம் மிக மிகக் குறைவே. மிகுந்த ரத்த இழப்போடு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும் அவர்கள், ஐந்து பத்து நிமிடங்களிலேயே உயிரிழக்க நேரிடும். இதற்கு மாற்று வழியே இல்லையா என தோன்றலாம்.

Accident
Accident

இந்தப் பிரச்னைக்கு, அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தினர், 'சஸ்பெண்டட் அனிமேஷன்' என்ற தீர்வை நோக்கி முன்னேறியிருக்கின்றனர். இதுவரை பன்றிகளுக்கு செயல்படுத்திப் பார்க்கப்பட்ட இந்த சிகிச்சையை, முதன்முறையாக மனிதர்கள்மூலம் சோதித்துப்பார்த்து வெற்றிகண்டுள்ளனர். எனினும், இந்த ஆய்வுகுறித்த முழுமையான அறிக்கை 2020-ன் இறுதியிலேயே வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

காயம்பட்ட மனிதனை சஸ்பெண்டட் அனிமேஷன் (Suspended Animation) நிலைக்குக் கொண்டுசெல்வதன் மூலம், மருத்துவர்களுக்கு அவரைக் காப்பாற்ற கூடுதல் அவகாசம் கிடைக்கும். இதன்மூலம் பல உயிர்களைக் காக்கலாம்.

`துப்பாக்கிச்சூடு, இதயச் செயலிழப்பு, தீவிர சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை இம்முறை மூலம் குறைக்கலாம், தடுக்கலாம்’ என்கிறார், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாமுவேல் டிஷர்மேன்.

Accident
Accident

மனிதனின் உடல் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தோ அல்லது மெதுவாக செயல்படச் செய்தோ சிகிச்சை மேற்கொள்வதே சஸ்பெண்டட் அனிமேஷன். இதை நாம் Demolition, Idiocracy, Realive, Foreign young உள்ளிட்ட பல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் பார்த்திருப்போம். அது, இப்போது நிஜத்திலும் சாத்தியமாக உள்ளது என்கிறது மருத்துவ உலகம்.

எமர்ஜென்சி பிரிசர்வேஷன் அண்ட் ரிசஸிடேஷன் (Emergency Preservation and Resuscitation - EPR) எனப்படும் இம்முறையில், உயிருக்குப் போராடுபவரின் உடம்பிலுள்ள ரத்தம், ஐஸ் கோல்டு சலைன் (Ice - cold Saline) மூலம் ரீப்ளேஸ் செய்யப்படும். இதன் மூலம், அவரின் மூளை 10 முதல் 15 டிகிரி குளிர்ச்சியில் இருக்கும். மேலும், இந்த சலைன் நேரடியாக இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை எடுத்துவரும் முதன்மை ரத்த நாளத்திலும் ஏற்றப்படும்.

Heart
Heart

சாதாரணமான உடல் சூட்டில், மூளையால் ஆக்ஸிஜன் இல்லாமல் 5 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாது. ஆனால், இம்முறையில் மூளையின் திசுக்கள் பாதுகாக்கப்படுவதால், மூளை செயலிழப்பு அடையாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், நோயாளிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஒரு மணி நேரம் அதிகமாகக் கிடைக்கும். சிகிச்சை முடிந்த பிறகு சிகிச்சைக்குள்ளானவரின் உடல் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படும்.

இதுகுறித்து யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டனைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர் கெவின் ஃபாங், ''பலத்த காயமடைந்து ரத்தம் அதிகம் வெளியேறி, இதயம் செயலிழந்து, வாழ்வா சாவா என உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு இது, உயிரைக் காப்பாற்றித் தரும் வரமாக அமையும்.

Accident
Accident

வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், அவசரகால மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு, இது Game changer ஆகும்" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவசரகால சிகிச்சை நிபுணர் டாக்டர். தவபழனியிடம் கேட்டோம். ''வென்ரிகுலார் ஃபிப்ரிலேஷன் (ventricular fibrillation) முறையால் இதயச் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு உடல் வெப்பத்தைக் குறைத்து, அவர்களைக் காப்பாற்றும் முறை இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. உடலைக் குளிர்ச்சியாக வைப்பதன் மூலம், மூளைக்கு ஆக்ஸிஜன் குறைவால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படுகிறது.

அவசரகால சிகிச்சை நிபுணர் டாக்டர். தவபழனி
அவசரகால சிகிச்சை நிபுணர் டாக்டர். தவபழனி

ஆனால் இம்முறை, விபத்தில் சிக்கிய நோயாளிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படவில்லை. விபத்தில் சிக்கிய நோயாளியின் உடம்பில் ஏற்பட்ட ரத்தப்போக்கை நிறுத்துவது மிக முக்கியம். ரத்தம் ஏற்ற, ரத்தம் தயாராக இருக்க வேண்டும். அந்த ஏற்பாட்டுக்கான நேர அவகாசம் தேவைப்படுகிறது. இந்த சஸ்பெண்டட் அனிமேஷன் சிகிச்சை, விபத்துக்குள்ளான நோயாளிகளுக்கும் மேற்கொள்ளப்படும் காலம் வந்தால், பல உயிர்களைக் காப்பாற்றலாம்" என்றார்.

வருகிறது செயற்கை சிறுநீரகம்? மருத்துவ உலகின் அடுத்த புரட்சி!
அடுத்த கட்டுரைக்கு