Published:Updated:

மருந்துகளைவிட முக்கியம் சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும்... சர்க்கரை நோயாளிகளுக்கான ஆயுசு நூறு டிப்ஸ்!

அதில் 90 வயதுக்கு மேல் வாழ்பவர்கள் தொடர்ச்சியாக ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதால், 50 - 60 வயதுக்குட்பட்ட நோயாளிகளைக் காட்டிலும் கண்களில் பாதிப்பு, சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை குறைவாகக் காணப்படுகின்றன.

100 ஆண்டுகள்
100 ஆண்டுகள் ( Pixabay )

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய் என்றால், அது சர்க்கரை நோயாகத்தான் இருக்கும். உலகத்தில் 41.5 கோடி பேர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சர்க்கரைநோய் பாதித்தாலும் 100 ஆண்டுகள்வரை ஆரோக்கியமாக வாழ முடியும் என ஆதாரபூர்வமாக உலகுக்குத் தெரிவித்திருக்கிறார், பிரபல சர்க்கரை நோய் மருத்துவர் வி.மோகன்.

சர்க்கரைநோய்
சர்க்கரைநோய்

இதுதொடர்பாக அவர் மேற்கொண்ட ஆய்வில்... ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, உணவுக் கட்டுப்பாடு, தொடர்ந்து சிகிச்சை பெறுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்த அவரின் நோயாளிகளில் 325 பேர் 90 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் முதல் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகுறித்து டாக்டர் வி.மோகன் பேசியது:

இந்தியாவில், 2019-ம் ஆண்டு நிலவரப்படி 7.7 கோடி பேருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளது. இது, 2030-ம் ஆண்டில் 10.1 கோடியாகவும், 2045-ம் ஆண்டில் 13.4 கோடியாகவும் அதிகரிக்கும் என்று சமீபத்தில் கொரியாவில் நடைபெற்ற சர்க்கரைநோய் சர்வதேச மாநாட்டில் கணிப்பு வெளியிடப்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 25 சதவிகிதம் பேருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோயாளிகள் உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவதற்கு 24.7 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

Dr.Mohan
Dr.Mohan

அதற்கு அடுத்தபடியாக கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்கள் வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டு நிலவரப்படி, ஆரோக்கியமான ஓர் ஆணின் ஆயுட்காலம் சராசரியாக 67 ஆண்டுகள், பெண்ணின் ஆயுள்காலம் சராசரியாக 69 ஆண்டுகள். ஒட்டுமொத்தமான சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகள். ஆனால், அமெரிக்காவில் 78.6 ஆகவும் சீனாவில் 76 ஆண்டுகளாகவும் உள்ளன.

2019-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 90 வயதுக்கு மேல் வாழ்பவர்கள் 0.001 சதவிகிதம். அதாவது, ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே 90 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார். அப்படிப் பார்த்தால்கூட இந்தியாவில் 13.7 லட்சம் பேர் 90 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றனர். சராசரி விகிதமே ஒன்றுக்கும் குறைவாக இருக்கும்போது, சர்க்கரை நோயாளிகள் 100 ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

சர்க்கரைநோயாளிகளுக்கு மருந்தைவிட சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகவும் அவசியம். வாழ்க்கைமுறை, உணவு என அனைத்தையும் சரியாக நிர்வகித்தால், சர்க்கரை நோயாளிகளால் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ முடியும்.
சர்க்கரை நோய் மருத்துவர் வி.மோகன்

சரியான பாதையைப் பின்பற்றிச் சென்றால், சர்க்கரை நோயாளிகளும் 100 ஆண்டுகள்வரை வாழ முடியும். சர்க்கரைநோயுடன் 100 ஆண்டுகளைக் கடந்த நோயாளிகளும் உள்ளனர். இருக்கின்றனர். என் நோயாளிகளில் 325 பேர் 90 வயதுக்கு மேல் வாழ்ந்துவருகின்றனர். இது தொடர்பான ஆய்வறிக்கையும் சமர்ப்பித்திருக்கிறேன். உலகிலேயே டைப் 2 சர்க்கரைநோயாளிகளின் ஆயுட்காலம் தொடர்பாக வெளியான ஒரே ஆய்வறிக்கை இதுதான்.

இதற்கு அடுத்தபடியாக, 90 ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை நோயுடன் வாழ்ந்துவருபவர்களின் உடல்நலனையும் 50 முதல் 60 வயது சர்க்கரை நோயாளிகளின் உடல்நலனையும் ஆராய்ந்தோம். அதில், 90 வயதுக்கு மேல் வாழ்பவர்கள் தொடர்ச்சியாக ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதால், 50 - 60 வயதுக்குட்பட்ட நோயாளிகளைக் காட்டிலும் கண்களில் பாதிப்பு, சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை குறைவாகக் காணப்படுகின்றன. வயது மூப்பின் காரணமாக நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் மட்டுமே 90 வயதைக் கடந்தவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.

Long life
Long life

சர்க்கரை நோயுடன் 100 ஆண்டுகள் வாழ்வதற்கான 4 தாரக மந்திரங்கள் இவைதான்:

1. வெகு சீக்கிரமாகவே சர்க்கரை நோயைக் கண்டுபிடித்துவிட வேண்டும். 30 வயதுக்கு மேல் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டும். இந்த நோய், நேரத்தை அடிப்படையாகக்கொண்டது. காலம் கடத்தினால் பிரச்னை அதிகரிக்கும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றையும் எப்போதும் சரியான அளவில் வைத்திருக்க வேண்டும்.

3. சர்க்கரைநோய் பாதித்த முதல் 10 ஆண்டுகள் மிகவும் முக்கியம். முதல் 10 ஆண்டுகளில் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அந்த 10 ஆண்டுகாலத்தில் உடலில் நடைபெறவேண்டிய சேதங்கள் அனைத்தும் நடந்து முடிந்துவிடும். அதற்குப் பிறகு உடலைப் பழைய நிலைக்கு மீட்பது சிரமம்.

4. மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை, உடற்பயிற்சி, சத்துள்ள உணவு ஆகிய மூன்றும் அவசியம். மனஅழுத்தமில்லாத வாழ்க்கைக்கு தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி, 15 நிமிடம் தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.

Exercise
Exercise

உணவுக் கட்டுப்பாடு

அரிசி உணவுதான் சர்க்கரைநோயின் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. நமது உணவுப் பழக்கத்தில் சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர் என்று ஒவ்வோர் உணவுக்கும் கொஞ்சம் கொஞ்சம் என அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுவோம். அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி வயிற்றில் படிகிறது. பிறகு கல்லீரல், ரத்தக்குழாய் அனைத்திலும் படிகிறது.

அதனால் சாதத்தை அளவோடு சாப்பிட வேண்டும். புரதச்சத்து அதிகமிருக்கும் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காளான், சோயா, பன்னீர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். கால்சியம் சத்துக்காகப் பால், இரும்புச்சத்தைப் பெற கீரைகள் சாப்பிடலாம். அசைவ உணவைப் பொறுத்தவரை மீன், சிக்கன், முட்டை எடுத்துக்கொள்ளலாம். மட்டன் போன்ற சிவப்பு இறைச்சியைத் தவிர்த்துவிட வேண்டும்.

Eating
Eating

சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தைவிட சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகவும் அவசியம். வாழ்க்கைமுறை, உணவு என அனைத்தையும் சரியாக நிர்வகித்தால், சர்க்கரை நோயாளிகளால் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ முடியும்" என்கிறார் டாக்டர் வி.மோகன்.

மனஅழுத்தம்... வேலையிலிருந்து `பிரேக்' எடுத்துக்கொள்வது நல்லதா? #ExpertOpinion