Published:Updated:

இந்த உணவுப் பழக்கங்கள் இருந்தால் முதுமையிலும் ஆரோக்கியம் நிச்சயம்! #InternationalDayForOlderPersons

முதியோர்
முதியோர்

தினமும் உணவில் ஒரு பகுதியாகப் பழங்கள் இருக்க வேண்டியது முக்கியம். ஆனால் மாம்பழம், சப்போட்டா பழங்களை பேரன், பேத்திகள் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்தப்படுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

முதியவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

  • முதுமையில் உணவுத் தேவை மாறுபடும். எதையும் அளவோடு சாப்பிட வேண்டிய காலம் வயோதிகக் காலம். பசியின்மை, மலச்சிக்கல் எனப் பல பிரச்னைகள் படையெடுக்கும்.

  • வயோதிகத்தில் உடலின் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கும். இளமைக் காலத்தைவிட 10% குறைவாக இருக்கும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும்.

  • உயர் ரத்த அழுத்தத்துக்கு, சர்க்கரை நோய்க்கு, மலச்சிக்கலுக்கு, இதயநோய்க்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் நீர் இழப்பு ஏற்படும். சிலருக்குத் தலையில் மட்டும் வியர்க்கும். சிலருக்கு உடல் நடுக்கம் வரும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால் இதைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியம் தரும் உணவுகள்
ஆரோக்கியம் தரும் உணவுகள்
freepik
  • செல்களுக்கு இடையில் தங்கி உடலில் வயோதிக மாற்றத்தை வேகமாகத் தூண்டுவது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals). அவற்றை இயற்கையாகவே கொண்டிருக்கும் க்ரீன் டீ, பப்பாளி, மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் எதிர்கொள்ளலாம்.

  • முதுமையில் பழங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. மலச்சிக்கலைப் போக்க கரையா நார்களையும், இதய ரத்தக்குழாய்களின் கொழுப்பை அகற்ற கரையும் நார்களையும், செல் அழிவைப் போக்க பாலிபினால்களையும், ஆற்றலை நீடித்துத்தர `காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’டையும் தருபவை பழங்களே.

  • தினமும் உணவில் ஒரு பகுதியாக பழங்கள் இருக்க வேண்டியது முக்கியம். ஆனால் மாம்பழம், சப்போட்டா பழங்களை பேரன், பேத்திகள் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்தப்படுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  • அதிக வைட்டமின் சத்துக்கு, வைட்டமின் பி 6-ம், புரதச் செறிவு அதிகம் உள்ள பாசிப்பருப்பு போட்டுச் செய்த கீரைக் கூட்டு, பீன்ஸ் பொரியல் மற்றும் வைட்டமின் பி12 அதிகம் உள்ள கோழி ஈரல் கறி ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிடலாம்.

  • முதுமையில் கொழுப்புள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும். முழுமையாகத் தவிர்ப்பதும் நல்லதல்ல. நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் கலவையைக் கொஞ்சமாகப் பயன்படுத்துவது நல்லது.

  • முதுமையில் எலும்புத் தசைகளின் குறைவால், புரதச் சேமிப்பு குறைந்து உடல் மெலியும். அதை ஈடுகட்ட முளைகட்டிய பாசிப்பயறு, முட்டையின் வெள்ளைக்கரு, சத்துமாவு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

முதியோர்
முதியோர்
Representational Image
  • மூட்டுவலியும் தசைவலிகளும் வயோதிகத்தின் அடையாளங்கள். இவை வராமல் இருக்க, வற்றல் குழம்பு, புளியோதரை போன்ற அமில உணவுகளுக்கு முதியோர் ஆசைப்படவே கூடாது. கடுக்காய், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற எளிய காயகற்ப மூலிகைகள் வயோதிகத்தின் வரப்பிரசாதங்கள்.

  • காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் சாப்பிடுவது வயோதிகத்தில் நோய் வராமல் காக்கும் மத்திரம்’ என்கிறது சித்த மருத்துவம். இதையும் பின்பற்றலாம்.

  • மருந்தோடு உன்னதமான உணவு, உற்சாகமான மனம் இவற்றோடு உரசல் இல்லாத உறவும் இருந்தால் மட்டுமே வயோதிக நோய்களை ஜெயிக்க முடியும். இதை வீட்டின் `வருங்கால வயோதிகர்’கள் உணர வேண்டியதும் அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு