Published:Updated:

கழுத்து வலி, முதுகு வலி குறைக்க எளிய யோகாசனங்கள்!

தனுராசனம்
தனுராசனம் ( விகடன் )

முறையாக யோகா செய்தால் முதுகு வலி, கழுத்து வலியிலிருந்து நிவாரணம்!

இன்று உடல்நலப் பிரச்னைகள் குறித்து நாம் எல்லோருமே அதீதமாகக் கவலை கொள்கிறோம். சாதாரண தலைவலியில் தொடங்கி கழுத்து வலி, முதுகு வலி உள்ளிட்ட நலக்குறைவுகள் பெரும்பாலானோரை சோர்வடையச் செய்துகொண்டிருக்கின்றன.

வக்ராசனம்
வக்ராசனம்
விகடன்

தலையைக் குனிந்து கீழே கிடக்கும் பொருளை எடுக்கவிடாமல் தடுக்கும் தொப்பை, காலையில் மேக்கப் செய்யும்போது கொத்து கொத்தாக உதிர்ந்து விழும் முடி, சொட்டை போன்றவை பலரை வருத்தப்பட வைக்கிறது. இதனால் அன்றைய தினம் கவலையுடன் தொடங்கி கவலையுடனேயே முடிகிறது. உடல் வலியுடன் மனச்சோர்வும் நம்மை பாடாகப் படுத்துகிறது. இவற்றிலிருந்து வெளியே வர யோகா பயிற்சிகள் நமக்கு பெரும் துணையாக இருக்கும். எளிமையாகவும், வீட்டிலிருந்தபடியும் இந்த யோகா பயிற்சிகளைச் செய்யலாம்.

கழுத்துவலி வராமலிருக்கவும், வந்தபின் அதைச் சரிசெய்யவும் கழுத்துக்கென சில பயிற்சிகள் உள்ளன. கழுத்தை மேலும் கீழுமாக அசைத்தல், வலது பக்கம் மற்றும் இடது பக்கம் திரும்பிப் பார்ப்பது உள்ளிட்ட சில பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும். இதுபோன்று கழுத்துத் தசைகளை தளர்வாக வைக்கவும் இந்தப் பயிற்சிகள் உதவும். கழுத்துவலி மட்டுமன்றி தோள்பட்டை வலிகள் வராமலிருக்கவும் யோகா பயிற்சிகள் உதவியாக இருக்கும்.

முறையான யோகா பயிற்சிகளைச் செய்தால், முதுகு வலியைத் தடுக்கலாம்.
மருத்துவர் அகில் ஷர்மிளா
Vikatan

நீண்டநேரம் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வதால் பலரையும் பதம் பார்ப்பது முதுகு வலி. இதுமட்டுமன்றி சிலருக்கு முதுகில் ஒருவித இறுக்கம் ஏற்படும். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டியிருக்கும். இதுபோன்றதொரு நிலை ஏற்படாமலிருக்க முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற யோகா உதவும். முறையான யோகா பயிற்சிகளைச் செய்தால், முதுகு வலி வராமல் தடுக்கமுடியும்.

புஜங்காசனம், சவாசனம், மகராசனம் போன்ற பயிற்சிகள் முதுகு வலியிலிருந்து நிவாரணம் தருவதுடன், பிற்காலத்தில் வலி எதுவும் வராமல் தடுக்கவும் உதவும். முதுகுத் தசைகள் வலுப்பெற பாவணமுக்தாசனம், வக்ராசனம், வஜ்ராசனம், தனுராசனம், சக்ராசனம் போன்ற பயிற்சிகள் உதவும்.

சக்ராசனம்
சக்ராசனம்
விகடன்

இன்று பலரையும் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாக்கி இருப்பது தொப்பை. இதைக் குறைக்க யோகா பயிற்சிகள் பெரும் உதவியாக இருக்கும். யோகா செய்வதைப் பொறுத்து மெள்ள மெள்ளத்தான் தொப்பை குறையும். தினமும் சூர்யநமஸ்காரம் செய்வது தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே, தினமும் 20 முறை சூர்ய நமஸ்காரம் செய்வது நல்லது. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கவும் சூர்ய நமஸ்காரம் மிக உதவியாக இருக்கும். இது ஆண், பெண்ணுக்கு ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளை சரி செய்ய உதவும்.

குறிப்பாக மாதவிடாய்க் குறைபாடு உள்ள பெண்கள் மற்றும் தைராய்டு குறைபாடு இருப்பவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்தால் பலன் கிடைக்கும். இவைதவிர மனதை நிம்மதியாகவும், அமைதியாகவும் வைக்க இந்த யோகா பயிற்சிகள் உதவும். மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானப் பயிற்சிகள் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக தொடங்க உதவியாக இருக்கும்.

யோகா செய்வதற்கு காலை நேரம்தான் சரியானது.
மருத்துவர் அகில் ஷர்மிளா
இந்தியர்களில் 64% பேர் உடற்பயிற்சி செய்வதேயில்லை!- அதிர்ச்சி தரும் சர்வே ரிசல்ட்

யோகா இத்தனை பயன்களைத் தரக்கூடியதாக இருந்தாலும், தொடர்ந்து யோகா பயிற்சிகள் செய்தால்தான் அது பெருமளவில் உதவும். ஒவ்வொருநாள் காலையும் தேவையான யோகா பயிற்சிகளைச் செய்துவிட்டு அன்றைய நாளை தொடங்குவது நல்லது. காலையில் செய்யவேண்டிய பயிற்சியை மாலையில் செய்துகொள்ளலாம் என்று ஒதுக்கி வைக்காதீர்கள். அலுவலக வேலையால் மனநிலை மாறுபடவோ, உடல்நிலையில் ஏதும் மாற்றமோ நேர்ந்தால் மாலையில் யோகா செய்வது சாத்தியப்படாது. அதனால் யோகா செய்வதற்கு காலை நேரம்தான் சரியானது.

யோகாவைப் பொறுத்தவரை, தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்யும்போது அதன் பயன்கள் நமக்குக் கிடைக்கும். ஒருநாள் செய்ததும் பலன் கிடைக்கவில்லை என்று நிறுத்திவிடுபவர்கள் பலர் உள்ளனர். அது மட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் எங்கேயாவது ஒருநாள் யோகா பயிற்சி செய்திருப்பார்கள். அதை வைத்துக்கொண்டு நான் யோகா கற்றுக்கொண்டேன், எனக்கு எல்லாம் தெரியும் என்பார்கள். ஆனால் யோகா செய்ய நேரம் இல்லை என்பார்கள். தினமும் 30 நிமிடங்கள் உங்களுக்காகவும், உங்கள் உடல்நலனுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்.

புஜங்காசனம்
புஜங்காசனம்
விகடன்

ஒரே பயிற்சியைத் தொடர்ந்து செய்வதால் மனச்சோர்வு ஏற்படத் தோன்றும். அப்படியில்லாமல், மூன்று நாள் நடைப்பயிற்சி, மூன்று நாள் யோகா பயிற்சி என செய்வது ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.

அடுத்த கட்டுரைக்கு