Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
எடைக்குறைப்பு

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

‘நல்லா வெயிட் குறைஞ்சேன். திடீர்னு மறுபடியும் கடகடன்னு பழைய வெயிட் ஏறிடுச்சு... ஏன்னே தெரியலை’ என்ற புலம்பலை எடைக்குறைப்பு முயற்சிகளில் தோற்கும் பலரிடமும் கேட்கலாம்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

குறைகிற எடை மீண்டும் அதிகரிப்பது ஏன் என்ற கேள்விக்கு அவ்வளவு எளிதாக பதில் சொல்லிவிட முடியாது. புது வருடம் பிறக்கவிருக்கும் நிலையில் கடந்த வருட இலக்காக வைத்துக்கொண்ட எடைக்குறைப்பு ஏன் சாத்தியமாகவில்லை என்ற கேள்வியும் பலருக்கும் வரும். பர்சனல், புரொஃபஷனல், பிட்னஸ், ஆன்மிகம் எனப் பல விஷயங்களிலும் கடந்த வருடம் நிர்ணயித்த இலக்குகளில் நிறைவேறாமல் போனவற்றில் முதலிடத்தில் எடைக்குறைப்பே நிற்கும்.

இயல்பிலேயே ஒல்லியான தோற்றம் கொண்டவர்களைப் பற்றி நாம் பேசப் போவதில்லை. பாடுபட்டுக் குறைத்த எடையை அதே அளவில் தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் திணறுபவர்களைப் பற்றியே பேசப் போகிறோம். எடையைக் குறைத்ததுகூட அவர்களுக்குக் கஷ்டமானதாக இருந்திருக்காது. அதைத் தக்கவைத்துக்கொள்வதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். காரணங்களையும் தீர்வுகளையும் அலசுவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1. செட் பாயின்ட்

ஒவ்வொருவரின் உடலுக்கும் செட் பாயின்ட் ஒன்று இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் உடலின் செட் பாயின்ட் 70 கிலோ என வைத்துக்கொள்வோம். ஆனால், நீங்கள் உங்கள் எடையை 50 கிலோவில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என நினைத்திருப்பீர்கள். அப்படி நிறுத்தினாலும் கொஞ்ச நாள்களில் அது மீண்டும் 60, 70-ல் போய் நிற்கும். 60 கிலோ இருக்க வேண்டிய ஒருவர் 70 கிலோவாகி, அடுத்த இரண்டு வருடங்களில் 100 கிலோவுக்குப் போய்விட்டார் என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு 10 கிலோவுக்கும் செட் பாயின்ட்டும் அதிகரித்துக்கொண்டே போகும். அதனால்தான் 20 வயதில் குறைக்க முடிந்த எடையை 50 வயதில் குறைக்க முடிவதில்லை. இந்த செட் பாயின்ட்டை மாற்ற அசாத்தியமான மன உறுதி வேண்டும். குடும்பப் பின்னணியில் யாருக்காவது நீரிழிவோ, கொலஸ்ட்ராலோ இருக்கலாம். அது நமக்கும் வராமல் பார்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

செட் பாயின்ட்டைத் தீர்மானிக்கும் காரணிகள்

 • பாரம்பர்யம்

 • நடத்தை

 • சுற்றுச்சூழல்

 • ஹார்மோன்கள்

தீர்வு?

நீண்டகால வாழ்வியல் மாற்றங்கள் குறித்த தெளிவான இலக்கும் மனநிலையும் மட்டுமே இந்த செட் பாயின்ட்டிலிருந்து வெளியே வர உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. தவறான உணவுப்பழக்கங்களைப் பின்பற்றுதல்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

வாட்ஸ்அப்பிலோ, செய்திகளிலோ ஒரு தகவல் பரவினால் போதும்... உடனே அதைப் பின்பற்றிப் பார்த்துவிட நினைப்பவர்கள் இங்கே ஏராளம். கீட்டோ, பேலியோ, ஜி.எம் எனப் பலவகையான டயட் முறைகளைப் பல காலமாகப் பின் பற்றி, ஒருகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகள் உண்பதையே மறந்துவிடுவார்கள்.தவிர, கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளவே பயப்படுவார்கள். டயட்டைத் தீவிரமாகப் பின்பற்றும் சிலர், 24 மணி நேரமும் ஆரோக்கியமான உணவு பற்றிய சிந்தனையிலேயே இருப்பார்கள். என்றாவது ஒருநாள் கலோரி அதிகமான உணவில் கொஞ்சூண்டு சாப்பிட்டால்கூட, குற்ற உணர்வில் புழுங்குவார்கள்.

தீர்வு?

இந்த மனநிலையிலிருந்து வெளியேவர மூன்று விஷயங்கள் முக்கியம்.

 • என்ன சாப்பிடுவது...

 • எப்போது சாப்பிடுவது...

 • எடை, உயரம், வாழ்வியல் முறை, பட்ஜெட் போன்றவற்றுக்கேற்ப எவ்வளவு சாப்பிடுவது...

இந்த விஷயங்களில் தெளிவு இருந்தாலே போதும்.

3. ஸ்ட்ரெஸ்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

வாழ்க்கை எதிர்பாராத நிகழ்வுகளைத் தந்துகொண்டே தான் இருக்கும். கொண்டாட் டங்கள், பணியிட மாறுதல்கள், வீடு மாறுதல், அன்புக்குரியவரின் இழப்பு, விவாகரத்து, தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ உடல்நலக் கோளாறுகள், அதன் காரணமாக மருத்துவமனையில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய நிர்பந்தம், வேலையிடத்தில் நெருக்கடி, பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாவது... இத்தகைய சம்பவங்கள் ஏற்படுத்தும் மன அழுத்தத்தால் சிலர் அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள் அல்லது தூங்குவதற்குச் சிரமப்படுவார்கள்.

இதனால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும். அதன் விளைவாக இன்சுலின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். எப்போதும் பசி உணர்வு இருக்கும். இனிப்புச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் அதிகமுள்ள உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.

தீர்வு?

 • உளவியல் ஆலோசகரை நாடுவது.

 • தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வது.

 • இயற்கைவெளிகளில் நேரத்தைச் செலவிடுவது.

 • நடனம், நடை, விளையாட்டு என ஏதேனும் ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுவது.

 • நம்பிக்கை இருந்தால், ஆன்மிகம் தொடர்பான செயல்களில் ஈடுபடுவது.

4. தூக்கம்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

போதுமான அளவு நல்ல தூக்கத்தைத் தவிர்ப்பவர்களுக்கு எடை அதிகரிப்பு இருக்கும். குழந்தை களுக்கு போர்டு எக்ஸாமோ, நுழைவுத் தேர்வுகளோ நெருங் கும் நேரத்தில் அவர்களின் அம்மாக்கள் எடை கூடுவதைப் பார்க்கலாம். தாமதமாக வீடு திரும்பும் கணவருக்காகக் காத்திருந்து, அவருக்கு இரவு உணவு கொடுத்துவிட்டு, தாமதமாகத் தூங்கச் செல்லும் மனைவிக்கு நல்ல தூக்கம் தடைபடும். படிப்பு, அதற்குத் தேவைப்படுகிற செமினார், இரவுநேர ஆன்லைன் பயிற்சிகள் போன்றவற்றால் சிலர் தூக்கமிழக்க நேரலாம். தூக்கம் தவிர்த்த இந்த உழைப்பு சிலரின் எதிர்காலத்துக்கு முக்கியமானதாக இருக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, சர்க்கரை சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த முடியாதது, உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை (டி.வி, சினிமா, இன்டர்நெட்டில் உட்கார்ந்த இடத்திலேயே நேரத்தைக் கழிப்பது) போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் ஹார்மோன் மாற்றங்களால் ஒருவருக்கு இனிப்பு, மசாலா மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளின் மீதும் ஜங்க் உணவுகளின் மீதும் ஈர்ப்பு அதிகரிக்கும். இத்தகைய உணவுகளைச் சாப்பிடும்போது மனதளவில் நல்லதோர் உணர்வு ஏற்படும். சுவையாகவும் உணர்வார்கள். இந்த இரண்டும் அத்தகைய உணவுகளை மீண்டும் மீண்டும் நாடவைக்கும். ஒருகட்டத்தில் அது அந்த உணவுகளின்மீது அடிமைத்தனத்தை ஏற்படுத்திவிடும்

5. கண்டறியப்படாத உடல்நலக் கோளாறுகள்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

எடை அதிகரிப்பின் பின்னணியில் உடல்நலக் கோளாறுகள் ஏதேனும் காரணமாக இருக்குமா என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உறுதி படுத்திக்கொள்வது சிறப்பு. மன அழுத்தம், பதற்றம், உளவியல் பிரச்னைகள், `குஷிங்ஸ் சிண்ட்ரோம்' எனப்படும் ஹார்மோன் பாதிப்பு, பிசிஓஎஸ் போன்றவைகூட எடை அதிகரிப்பின் காரணங்களாகலாம். குறிப்பிட்ட டயட்டையோ, உடற்பயிற்சிகளையோ தொடங்குவதற்கு முன் மருத்துவ ஆலோசனை அவசியம். எடைக் குறைப்புக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர் சந்தேகிக்கும் விஷயங்களுக்கான டெஸ்ட்டுகளையும் தவறாமல் எடுக்க வேண்டும்.

6. உங்களைப் புரிந்துகொள்ளுங்கள்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
 • உங்களுக்கு எது பிடிக்கிறது? (நடனம், ஸ்போர்ட்ஸ், யோகா, நீண்டதூர நடை. ட்ரெக்கிங் இப்படி...)

 • பிடித்த செயலாக இருந்தாலும் அதை ஒருநாளைக்கு எத்தனை மணி நேரத்துக்குச் செய்ய முடியும்?

 • உங்களுடைய வேலை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி உங்களை ஃபிட்டாக வைத்திருக்க முடியும்?

 • அந்த உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி?

 • உடற்பயிற்சிகள் செய்வதை அன்றாட வழக்கமாக்குவது எப்படி? (பல் துலக்குவது, குளிப்பது போன்று)

 • உண்ணும் உணவின் அளவை எப்படி கண்காணிப்பது? (அளவுக் கோப்பைகள், ஸ்பூன், டம்ளர் போன்றவற்றைப் பயன்படுத்துவது, பெரிய தட்டிலிருந்து சிறிய தட்டுக்கு மாறுவது)

 • உண்பதைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிவது எப்படி? (வருத்தம், கோபம், பீரியட்ஸ், மது அருந்தும்போது, பயணத்தின்போது, வார இறுதி நாள்களில்.... இப்படி எந்த நேரத்தில் அதிகம் உண்ணத் தோன்றுகிறது)

இவற்றுக்குத் தீர்வுகள் உங்களிடமே உள்ளன.

7. யதார்த்தத்தை உணர்ந்துகொள்ளுங்கள்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

வாழ்க்கையில் சில நேரங்களில் சில சம்பவங்கள் நம் கட்டுப்பாட்டை மீறி நிகழும். திடீர் உடல்நலக் கோளாறு, விடுமுறையில் செல்வது, கல்யாணம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஒரே மாதத்தில் டூர் போவது, அடிபடுவது அல்லது காரணமே இல்லாமல் எடைக்குறைப்பு முயற்சியில் ஊக்கம் குறைவது போன்றவை நடக்கலாம். இப்படி ஏதேனும் நடக்கும்போது யதார்த்தம் உணர்ந்து, அதிலிருந்து மீண்டு மறுபடி உங்களைத் தயார்படுத்துங்கள்.

அறிவிப்பின்றி வாழ்க்கையில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களிலிருந்து மீண்டு உடற்பயிற்சிக்கும் உணவுக்கட்டுப்பாட்டுக்கும் எவ்வளவு சீக்கிரத்தில் திரும்புகிறோம் என்பதில்தான் இருக்கிறது வெற்றியே!

இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
 • எடைக்குறைப்பில் வேகம் வேண்டாம். நிதானமான எடைக்குறைப்பே நல்லது.

 • பதப்படுத்திய உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.

 • உண்பது என்பது உடலுக்கு எரிபொருள் ஏற்றுவதுபோல இருக்க வேண்டுமே தவிர, பொழுதுபோக்காக இருக்கக் கூடாது.

 • ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் ஒவ்வொரு மாதிரியானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வயது, எடை, உடலிலுள்ள தசை மற்றும் கொழுப்பு விகிதம், பரம்பரைத்தன்மை (அகலமான நெஞ்சு, பெருத்த இடை, பெரிய தொடைகள்) எனப் பல விஷயங்களைப் பொறுத்து ஒவ்வொருவருக்குமான உடற்பயிற்சிகளும் உணவுக்கட்டுப்பாடும் வேறுபடும்.

 • எடை அதிகரிப்பது எப்படி உடல்நலக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது என உணருங்கள்.

 • சுவைக்கு அடிமையாகாமல் ஆரோக்கியத்தை முக்கியமாகக் கருதுங்கள். அந்தப் பழக்கம் மருத்துவச் செலவுகளை கணிசமாக மிச்சப்படுத்தும். அது மட்டுமா? எப்போதும் சுறுசுறுப்புடனும் இளமைத் துடிப்புடனும் இருக்கலாம். உறவினர்கள் மத்தியில் உங்களின் தோற்றம் கவனிக்கப்பட்டு, பாராட்டுகள் குவியும். அதை உணர்வது அபாரமானது.

டயட் டவுட்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

பலமான விருந்து சாப்பிட்டால் அடுத்த நாளே எடையைச் சரிபார்க்க வேண்டுமா? எத்தனை நாள்களுக்கொரு முறை எடையைச் சரிபார்க்கலாம்?

பலமான விருந்து சாப்பிடும்போது அதிலுள்ள அதிகமான கார்போஹைட்ரேட் உடலில் நீர் சேர்வதை அதிகரிக்கும். இனிப்புகள், பழங்கள் என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் இருக்கும். விருந்துக்கு அடுத்த நாளே எடையைச் சரிபார்ப்பது தவறு. எடையில் ஏற்பட்ட ஏற்றம் அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் குறையும். இதுபோன்ற விசேஷங்கள், விருந்துகள் வரப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொள்வதும், உடற்பயிற்சிகளைத் தவறவிடாமல் இருப்பதும்தான் சரி.

வெளியில் சாப்பிடப்போவது தெரிந்தால் அன்றைய தினம் சற்று அதிகம் வொர்க் அவுட் செய்யலாம். அடுத்த வேளை சாப்பிடும்போது ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல்நாள் இரவு பலமான விருந்து சாப்பிட்டிருந்தால், அடுத்த நாள் காலையில் காபியோ, கிரீன் டீயோ குடித்துவிட்டு, காலை உணவைத் தவிர்த்து விடலாம். கொஞ்சமாக சாதம், பருப்பு மற்றும் காய்கறிகளுடன் நேரடியாக மதிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

15 நாள்களுக்கொரு முறை எடை பார்த்தால் போதும். இன்ச் டேப் பயன்படுத்தி மார்பளவு, இடுப்பு, வயிறு மற்றும் தொடைப்பகுதிகளையும் அளந்து பாருங்கள். நேராகவும் பக்கவாட்டிலும் உங்கள் தோற்றத்தை போட்டோ எடுத்துவையுங்கள்.