Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் அடையாளமாகட்டும்!

ஆரோக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கியம்

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் அடையாளமாகட்டும்!

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

Published:Updated:
ஆரோக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கியம்

‘எங்க வீட்டுல நான் மட்டும்தான் ஹெல்த் கான்ஷியஸ். சாப்பாட்டுலேருந்து எக்சர்சைஸ் வரை நான் மட்டும் ஹெல்த், ஹெல்த்னு பேசிட்டிருக்கேன். பல நேரம் அவங்ககிட்டருந்து நான் மட்டும் தனித்து நிற்கற மாதிரி இருக்கு...’

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் அடையாளமாகட்டும்!

எடைக்குறைப்பு முயற்சிகளை ஆரம்பித்து, அவற்றைத் தொடர முடியாமல் பாதியிலேயே கைவிடும் பலரும் சொல்லும் காரணம் இது. ஆரோக்கியம் என்பது குடும்பத்தில் ஒருவர் மட்டுமே யோசிக்க வேண்டிய விஷயமல்ல. ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தைகளை தினமும் இருவேளை பல் துலக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர் வலியுறுத்துவதைப் பார்க்கலாம். பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டிய பெற்றோர் முதலில் அதைச் செய்ய வேண்டாமா? நாம் செய்யாத ஒரு விஷயத்தை நம் பிள்ளைகள் மட்டும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

தினமும் இருவேளை பல் துலக்கும் பழக்கத்தைப் பெற்றோர் கடைப்பிடித்தால், அவர்களைப் பார்த்து, பிள்ளைகளுக்கும் அந்தப் பழக்கம் வரும். இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் அடையாளமாகட்டும்!

வீட்டிலுள்ள அனைவரும் அவரவர் உயரத்துக்கேற்ற எடையில், ஆரோக்கிய மாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வதிலும் இந்த விதி பொருந்தும்.

ஃபிட்னஸ் என்பதை குடும்பத்துக்கான விஷயமாக மாற்றுவது எப்படி?

குடும்பம் என்பது மிகப்பெரிய பலம். அன்பும் அரவணைப்பும் அக்கறையும் பாதுகாப்பும் கிடைக்கும் இந்த இடத்தில்தான் ஆரோக்கியமும் சாத்தியம். ஒட்டுமொத்தக் குடும்பத்துக்குமான ஆரோக்கிய இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு அவற்றை நோக்கி குடும்பமாக இயங்குவது நீங்கள் எதிர்பார்க்காத அளவு நல்ல பலன்களைத் தரும்.

இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு விளையாட்டென்பது கம்ப்யூட்டர் திரையிலும் ப்ளே ஸ்டேஷனிலும் மொபைலிலும் முடிந்துபோகிற செயல். பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் கண்ணாமூச்சி, கிரிக்கெட், பாண்டியாட்டம் என அக்கம்பக்கத்துக் குழந்தைகளுடன் நேரம் மறந்து விளையாடிய நாள்களை நானெல்லாம் இன்னும் மறக்கவில்லை. `விளையாடியது போதும்' என வலுக்கட்டாயமாக அம்மா வீட்டுக்குள் அழைப்பார். மனசே இல்லாமல் வீட்டுக்குள் போவோம். ஒரு டம்ளர் பால், நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடக்கொடுத்துவிட்டு, படிக்கச் சொல்வார். 8 மணிவரை படிப்பு... பிறகு சாப்பாடு... 9 மணிக்கு உறக்கம்.

வார இறுதியில் ஒருநாள் அப்பா எங்களை வாக்கிங் அழைத்துச்செல்வார். சென்னையில் நாங்கள் வசித்துவந்த எழும்பூர் பகுதியிலிருந்து புதுப்பேட்டை, மவுன்ட் ரோடு தர்கா, கமிஷனர் அலுவலகம் எல்லாவற்றையும் சுற்றிவிட்டு, அப்பா வாங்கித் தரும் சாக்கோ பார் ஐஸ்க்ரீமை ருசித்துவிட்டு வீடு திரும்பிய அந்த நாள்கள் இனிமையானவை. நடைப்பயிற்சியின் மகத்துவத்தை உணர்த்தியவை அந்த நாள்கள். அதன் தொடர்ச்சியாக இன்றும் நீண்டதூர நடைப்பயணம் அவ்வளவு பிடிக்கிறது எனக்கு.

ஆரோக்கியம்
ஆரோக்கியம்

எப்போதுமே பெற்றோர்தாம் பிள்ளைகளின் ரோல் மாடல்களாக இருக்க வேண்டும். என் அப்பாவுக்கு வாக்கிங் பிடிக்கும். அதை எங்களுக்கும் வலியுறுத்தினார். ஜிம் போவது, யோகா செய்வது, ஸும்பா ஆடுவது என எதைச் செய்தாலும் நடைப்பயிற்சியையும் நாங்கள் யாரும் மறக்காமலிருக்க அப்பா கொடுத்த ஊக்கம்தான் காரணம்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதிலும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். உணவு முதல் உரையாடல்வரை பெற்றோர் செய்வதை அப்படியே பின்பற்றுவது பிள்ளைகளின் இயல்பு.

இன்னும் சில ஆலோசனைகள்...

தினமும் இரவு உணவைக் குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். மொபைலையும் டி.வி ரிமோட்டையும் தள்ளிவையுங்கள்.

மைதா, சர்க்கரை, கலர் மற்றும் கெமிக்கல் சேர்த்த உணவுகளுக்கு உங்கள் கிச்சனிலும் டைனிங் டேபிளிலும் இடம் கொடுக்காதீர்கள்.

வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் எந்த அளவு உணவு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். துறுதுறுவென ஓடி, ஆடி விளையாடும் குழந்தைக்கு, அதன் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் ஏற்ப அதிக உணவு தேவைப்படலாம். அதுவே எந்தவிதமான உடலியக்கமும் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் மற்ற நபர்களுக்கு அவர்களது செரிமானத் திறன், உடல்நலக் கோளாறுகள் போன்றவற்றைப் பொறுத்து குறைவான உணவே போதுமானதாக இருக்கும்.

உணவுகளின் மீதான உங்கள் வெறுப்பை பிள்ளைகள் முன்னால் வெளிப்படையாகக் காட்டாதீர்கள். உதாரணத்துக்கு உங்களுக்குப் பாகற்காய் பிடிக்காதென்றால் அதைக் குழந்தைகளுக்கு முன்னால் வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கும் அந்த உணவின் மேல் வெறுப்பு உருவாகலாம்.

பழைய, பெரிய தட்டுகளையும் டம்ளர் களையும் ஓரங்கட்டிவிட்டு, சிறிய தட்டுகளையும் டம்ளர்களையும் பயன்படுத்தலாம். எடை விஷயத்தில் அக்கறை செலுத்துவோர் இதை நிச்சயம் செய்தாக வேண்டும்.

தரையில் அமர்ந்து சாப்பிடலாம் அல்லது டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடலாம். டி.வி முன் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் மட்டும் வேண்டாம். அது உணவு தொடர்பான உணர்வுகளைப் பெரிதும் குழப்பிவிடும். உதாரணத்துக்கு டி.வி நிகழ்ச்சிகளில் மூழ்கும்போது ‘போதும்’ என்ற மனநிலையை நாம் உணர்வதில்லை.தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவது, மென்று தின்னாமல் அப்படியே விழுங்குவது போன்றவற்றைச் செய்கிறோம். இவையெல்லாம் எடையை அதிகரிக்கச் செய்யலாம், கவனம்.

இனிப்பு சேர்த்த பானங்கள், சாக்லேட், இனிப்புகள், ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிருங்கள். உங்கள் குடும்பத்தாருக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக்கொள்ளட்டும்.

உடற்பயிற்சி என்ற விஷயத்தை வற்புறுத்தலாகச் செய்யாமல் வேடிக்கையான செயலாக மாற்றுங்கள். உதாரணத்துக்கு... வீட்டுக்கு அருகிலுள்ள இடங்களுக்கு குடும்ப மாக நடந்துசெல்லலாம். பீச்சில் பந்து விளை யாடலாம். குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டலாம். டிரெக்கிங் போன்ற புதுமையான முயற்சிகளில் குடும்பமாக ஈடுபடலாம்.

பொரி உருண்டை, கடலை உருண்டை, எள்ளுருண்டை, பயத்த உருண்டை போன்ற ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருங்கள்.

கொழுக்கட்டை, சுண்டல், இலை அடை, அவல் உப்புமா, சிறுதானியப் பலகாரங்கள், டிரை ஃப்ரூட்ஸ் லட்டு போன்றவற்றின் ருசியை மட்டுமன்றி, அவை தரும் பலன்களையும் குழந்தைகளுக்குப் புரியவையுங்கள்.

வாழ்க்கையில் கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாதவை. பிறந்தநாள், திருமண நாள், வேலையிடத்தில் பதவி அல்லது சம்பள உயர்வு, பள்ளி, கல்லூரிகளில் சாதனை எனக் கொண்டாட்டங்களுக்கான காரணங்கள் தினம் தினம் வந்துகொண்டிருக்கும். ஆனால், கொண்டாட்டங்களை விருந்தாக அமைத்துக்கொள்ளும்போது அதை ஈடுகட்டும் விதமாக சில கிலோமீட்டர் நடை, மலையேற்றம், பூங்காவைச் சுற்றி பத்து ரவுண்டு சைக்கிளிங் என ஏதேனும் ஒன்றைச் செய்வதென உறுதிகொள்ளுங்கள்.

கொண்டாட்டங்கள் என்றாலே ரெஸ்ட்டாரன்ட் போவது, விருந்தை வெளுத்துக்கட்டுவது என்று இருக்க வேண்டிய தில்லையே... குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நல்ல நினைவுகளை, நிகழ்ச்சிகளை அசை போடலாம். ஆரோக்கியம் உங்கள் குடும்பத்தின் அடையாளமாகட்டும்.

- நம்மால் முடியும்!