Published:Updated:

மனஅழுத்தம்... வேலையிலிருந்து `பிரேக்' எடுத்துக்கொள்வது நல்லதா? #ExpertOpinion

depression
depression ( Pixabay )

மனஅழுத்தம் என்பது எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படலாம். ஆகவே அதை எப்படிக் கையாள வேண்டும் என அனைவருமே அறிந்துகொள்ள வேண்டும். அதற்கான சில டிப்ஸ் இதோ...!

அதிரடி ஆட்டத்துக்குப் பெயர்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மனஅழுத்தத்துக்கு ஆளானதால் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். நல்ல ஃபார்மிலிருக்கும் வீரர் திடீரென கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், விளையாட்டு வீரர்கள் மனஅழுத்தத்தினால் இதுபோன்று இடைவெளிகளை எடுத்துக்கொள்வது சகஜம்தான்.

Maxwell
Maxwell

மேலை நாடுகளில் ஒரு கலாசாரம் உண்டு. தொடர்ச்சியாக வேலை பார்த்து பணம் சம்பாதித்துவிட்டு, வேலையிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சில மாதங்கள் சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள். ஆனால், இந்தியாவில் இத்தகைய பழக்கங்கள் இன்னும் பிரபலமடையவில்லை. அதற்கான நடைமுறை சாத்தியங்களும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

மனஅழுத்தம் என்பது எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படலாம். ஆனால், வேலையிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்வது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அப்படியிருக்கும்போது இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

மனஅழுத்தம்
மனஅழுத்தம்
Pixabay

"Organisational level team என்று ஒரு பிரிவினர் இருக்கின்றனர். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் எல்லாம் இந்தப் பட்டியலில் வருவார்கள். இவர்கள் தங்கள் தொழிலில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருப்பார்கள். வேலைக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற நிலை இருக்காது. ஆனால் கலை, விளையாட்டு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவிருக்கும். ஆனால், போட்டி அதிகமிருக்கும். தனது வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்து அதிக அழுத்தத்துடன் வேலைகளைச் செய்வார்கள். இந்தப் பட்டியலில் ஐ.டி ஊழியர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்" என்கிறார். மனஅழுத்தம், பணியிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்வது ஆகியவை தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அலுவலகத்தில் ஒருவர் மனஅழுத்தத்தில் இருப்பதை எப்படிக் கண்டறிவது?

மனஅழுத்தத்தின் காரணமாக ஒருவரின் உயிரியல் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். தூக்கம் தடைப்படும், பசியின்மை, எடை குறைவது, மற்றவருடன் இயல்பாகப் பேசமுடியாதது போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஒரு கட்டத்தில் அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாத அளவு முடங்கிவிடுவார்கள்.

அலுவலகத்தில் மனஅழுத்தம்
அலுவலகத்தில் மனஅழுத்தம்
எண்ணெய்க் குளியல், தாரை சிகிச்சை, சவாசனம்... மன அழுத்தம் போக்க எளிய வாழ்வியல் வழிகள்! #NoMoreStress

மனஅழுத்தத்துக்குப் பணியிலிருந்து பிரேக் எடுத்துக்கொள்வது நல்லதா?

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திட்டமிட்டு சிறிய பிரேக் எடுத்துக்கொள்ளலாம். பிரேக் எடுப்பதற்கு முன்பாகவே சுற்றுலா செல்வதற்கு டிக்கெட் புக் செய்வது, தங்குவதற்கான இடங்களை புக் செய்வது, எந்தெந்த இடங்களைப் பார்வையிட வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் என்பன போன்ற ஏற்பாடுகளைச் செய்வது மனதுக்கு உற்சாகத்தைத் தரும். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு சுற்றுலா செல்லப் போகிறோம் என்ற சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கும். சுற்றுலா செல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்த நேரத்தில் கடுமையான வேலை செய்தால்கூட, `இத்தனை நாள் கழித்து ரிலாக்சேஷன் கிடைக்கப்போகிறது' என்ற சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கும். அதுவே உற்சாகமாக வேலை செய்யும் ஆற்றலைக் கொடுக்கும். பிரேக் எடுத்திருக்கும் நாள்களில் மனதுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்வது, மனதுக்குப் பிடித்த காரியங்களைச் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். அந்தத் தருணங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அப்போது மனதிலிருக்கும் அழுத்தம் குறையும்.

பணியிலிருந்து பிரேக்
பணியிலிருந்து பிரேக்
மன அழுத்தம்; தற்காலிக விடுப்பு! - இலங்கைத் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் `திடீர்' விலகல்

பிரேக் எடுத்தால் மனஅழுத்தம் குறையும் என்பது எல்லோருக்கும் சாத்தியமாகுமா?

சிலருக்கு விடுமுறை நாள்கள் ஆரம்பித்த உடனே `ஐயோ விடுமுறை தொடங்கிவிட்டதே சீக்கிரம் முடிந்துவிடுமே' என்ற கவலை வந்துவிடும். நமக்குப் பிடித்த ஐஸ்க்ரீமை வாங்கிச் சாப்பிடும்போது அதன் சுவையை ரசிக்காமல், 'ஐஸ்க்ரீம் உருகுதே!' என்று நினைத்துக்கொண்டிருப்பதைப் போன்றது இது. விடுமுறை நாள்களை சந்தோஷமாக அனுபவிக்காமல் இப்படி நினைத்துக்கொண்டிருந்தால் அது கூடுதல் அழுத்தத்தைத்தான் கொடுக்கும்.

சட்ட ரீதியான பிரச்னைகள் வந்தால் எப்படி வழக்கறிஞரை அணுகுவோமோ அதே போன்று மனநலத்தில் பிரச்னை வந்தால் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

`Work from home' முறையில் பணியாற்றுபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாதா?

Dr.Swathik Sankaralingam
Dr.Swathik Sankaralingam

வெளியிலிருக்கும் பிரச்னைகளை எல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கும் இடம்தான் வீடு. வீட்டிலும் அலுவலக வேலையைப் பார்க்கும்போது எப்போதும் வேலையே செய்துகொண்டிருக்கிறோம் என்ற வெறுப்புணர்வும் எரிச்சலுணர்வும் ஏற்படும். முன்பெல்லாம் குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர, பெரும்பாலான வேலைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் இருக்கும். அதற்குப் பிறகான நேரம் முழுவதும் ஒரு நபருக்கான தனிப்பட்ட நேரமாக இருக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருக்கும்போது அலுவலக விஷயமாக தொலைபேசியில் பேசுவதோ, அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலையோ ஏற்படும்.

ஆனால், இப்போது அனைத்து வேலைகளும் 24x7 ஆக மாறிவிட்டது. வீட்டிலிருந்தாலும் செல்போனில் அலுவலக வேலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதுவும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தவே செய்யும்.

வேலையிலிருந்து பிரேக் எடுக்க முடியாதவர்கள் மனஅழுத்தத்தைப் போக்க என்ன செய்யலாம்?

மனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போது சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் வேலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் எல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. வாழ்க்கையையும் வேலையையும் சமநிலைப்படுத்துவதே இதற்கு ஒரே தீர்வு. அலுவலகம், வீடு இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. வீட்டிலிருக்கும்போது அலுவலக விஷயங்களைச் சற்றுத் தள்ளி வைத்து, அங்கிருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். அலுவலகப் பணிகளின்போது சொந்தப் பிரச்னைகளை யோசிக்காமல் வேலை செய்ய வேண்டும்.

Work Life Balance
Work Life Balance

அலுவலகத்தில் இலகுவான மனதுடன் வேலை பார்க்க என்ன வழி?

கடுமையான பணிக்கு இடையே எப்போதாவது டீம் லஞ்ச் அல்லது டீம் அவுட்டிங் போவது போன்ற செயல்கள் சற்று உற்சாகத்தைக் கொடுக்கும். ஒருவர் ஒரு கடினமான வேலையைச் செய்து முடித்தாலோ, டார்கெட்டை எட்டிவிட்டாலோ அவரைப் பாராட்டி பரிசோ, பணமோ வழங்குவதற்கு பதில், இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பணத்தைவிட ஒருவருக்கு அளிக்கப்படும் நேரம்தான் அவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தும். மீண்டும் உற்சாகத்துடன் பணிக்குத் திரும்ப இது உதவும்.

வாழ்க்கையையும் வேலையையும் சமநிலைப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்!
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
திட்டமிடல்
திட்டமிடல்

ஒரு டார்கெட்டை அடைய வேண்டுமென்றால் அதற்கான அட்டவணையைத் தயாரித்தல், திட்டமிடல் போன்ற விஷயங்களில் பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் அதில் முழு மனதோடு ஈடுபட வேண்டும் என்றும், வேலையை முடித்துக்கொடுப்பதற்கான பொறுப்பு தங்களுக்கும் உள்ளது என்றும் நினைத்துப் பொறுப்போடும் உற்சாகத்தோடும் வேலை பார்ப்பார்கள்.

வேலைச் சூழலால் மனஅழுத்தத்துக்கு ஆளான ஒருவர் எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

உதவி
உதவி
பரிந்துரை: இந்த வாரம்... கரு எதிர்பார்க்கும் பெண்களின் மனநலம்!

உயிரியல் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுவிட்டால், உடனடியாக மருத்துவர் ஆலோசனையைப் பெறுவது நல்லது. சட்ட ரீதியான பிரச்னைகள் வந்தால் எப்படி வழக்கறிஞரை அணுகுவோமோ அதே போன்று மனநலத்தில் பிரச்னை வந்தால் மனநல மருத்துவரை அணுக வேண்டும்!"

பின் செல்ல