Published:Updated:

வொர்க் ஃபிரம் ஹோம் நேரத்தில் வரும் வயிற்றுப் பிரச்னைகள்... கையாள்வது எப்படி?

Food
Food ( Image by Ron Mitra from Pixabay )

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைபார்க்கக்கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து 5 நிமிடங்கள் நடந்துவிட்டு, பிறகு வேலையைத் தொடருங்கள்.

தினந்தோறும் அலுவலகத்துக்குச் சென்றபோது, பிரேக் டைம், லஞ்ச் டைம் என்று அவ்வப்போது இருக்கையைவிட்டு எழுந்துகொள்வோம். வொர்க் ஃபிரம் ஹோம் செய்ய ஆரம்பித்த பிறகு தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கிறோம். கூடவே வேலை பிஸியில் சமைக்க நேரமில்லாமல், பக்கெட் பிரியாணி ஆர்டர் செய்து மூன்று வேளையும் சாப்பிடுவது, நூடுல்ஸ் சாப்பிடுவது, நொறுக்குத்தீனியாகச் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவது என்று வயிற்றைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். விளைவு, கடந்த சில மாதங்களாக வயிறு மற்றும் இரைப்பை பிரச்னைகள் காரணமாக, மருத்துவர்களை நாடுபவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். வயிறு, குடல் தொடர்பான பிரச்னைகள், குறிப்பாக வாயுத்தொல்லை வராமல் தவிர்ப்பது குறித்து குடல் மற்றும் இரைப்பை நோய் மருத்துவர் மகாதேவனிடம் பேசினோம்.

``தினமும் காலையில் அரைமணி நேரமாவது வாக்கிங் போனாலே வாயு பிரச்னை வராமல் தடுத்துவிடலாம். வெளியே வாக்கிங் செல்வதற்கு பயமாக இருந்தால், மொட்டை மாடியில், வீட்டுக்கு முன்னால் இருக்கும் இடத்தில், வீட்டைச்சுற்றி... இப்படி எப்படியாவது அரைமணி நேரம் நடந்து விடுங்கள்.

என்னைப் பொறுத்தவரை, வொர்க் ஃபிரம் நாள்கள் உடற்பயிற்சி செய்வதற்கு கோல்டன் பீரியட் என்றே சொல்வேன். நின்ற இடத்திலேயே ஓடுவது, குனிந்து நிமிர்வது என்று சின்னச்சின்ன உடற்பயிற்சிகளை தினமும் மறக்காமல் செய்யுங்கள்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைபார்க்கக்கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து 5 நிமிடம் நடந்துவிட்டு வேலையைத் தொடருங்கள்.

உட்கார்ந்தபடியே செய்கிற உடற்பயிற்சிகளுக்கு வழிகாட்டும் நிபுணர்களின் யூடியூப் வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பார்த்து கழுத்துக்கு, கைகளுக்கு மற்றும் கால்களுக்கான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு வேலைக்கு நடுவே அடிக்கடி செய்யுங்கள். மேலே சொன்னவற்றை தினந்தோறும் செய்தாலே வாயுத்தொல்லை வராது.

குடல் மற்றும் இரைப்பை நோய் மருத்துவர் மகாதேவன்
குடல் மற்றும் இரைப்பை நோய் மருத்துவர் மகாதேவன்

வொர்க் ஃபிரம் ஹோம் இருக்கும்வரை அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டுதான் இருக்கும். அந்த நேரத்தில், பொரித்தது, வறுத்தது என்று சாப்பிடாமல் பழங்கள், பழச்சாறு என்று எடுத்துக்கொள்ளுங்கள். சத்துகள் கிடைப்பதோடு செரிமானமும் சரியாக இருக்கும். செரிமானம் சரியாக இருந்தால் வாயுத்தொல்லை வராது.

நொறுக்குத்தீனிகள் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியெடுக்காது. அதனால், நேரம் தப்பி சாப்பிடுவீர்கள். இதனால், தூக்க நேரமும் மாறிப்போகும். இதன் தொடர்ச்சியாக அஜீரணக்கோளாறு, வாயுக்கோளாறு, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் என்று பிரச்னைகள் வரிசைகட்டும்.

வேலை பிஸி காரணமாக, பிரியாணி, நூடுல்ஸ் என்று அடிக்கடி ஆர்டர் செய்து சாப்பிடும்போது, கூடவே நார்ச்சத்துக்கான காய்கறிகள், பழங்கயையும் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து இல்லையென்றால் செரிமானம் தாமதப்பட்டு, மலச்சிக்கல் ஏற்படும். இதன் தொடர்ச்சியாக வாயுத்தொல்லையும் வரும்.
நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படப்போகும் இந்தியா... தற்காத்துக்கொள்வது எப்படி?

வொர்க் ஃபிரம் ஹோம் என்றில்லை. நம்முடைய உணவுப்பழக்கம் முறையாக இல்லையென்றால், எல்லா காலத்திலும் வாயுத்தொல்லை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு மாத்திரை எடுத்துக்கொண்டாலும், அந்த நேரத்தில் சரியாகுமே தவிர, மறுபடியும் வராமல் இருப்பது உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம்தான் நடக்கும். என்னைச் சந்திக்கிற நோயாளிகளில் சிலர், வாயுத்தொல்லை வருகிற நேரத்தில் வெந்நீர் அல்லது சூடான பால் குடித்தால் சரியாகி விடுவதாகச் சொல்கிறார்கள். உங்கள் அனுபவத்திலும் இவை பலனளிக்கின்றன என்றால், பின்பற்றலாம்’’ என்கிறார் டாக்டர் மகாதேவன்.

அடுத்த கட்டுரைக்கு