Published:Updated:

``#WorkFromHome-மால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்... எப்படி எதிர்கொள்வது, என்ன தீர்வு?

work from home
work from home ( Photo Courtesy: Pixabay )

``கொரோனா காரணமாக ஊழியர்களின் பணி நேரம் எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இதனால் பலரின் தூக்கம் பறிபோயிருக்கிறது. சொல்லப்போனால், ஆழ்ந்த தூக்கம் என்பதையே பலர் மறந்துவிட்டனர்."

கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாகப் பலரும் வீட்டிலிருந்தபடியே பணி செய்கிறோம். இதனால் சில நன்மைகள் ஏற்பட்டாலும், உடல் உபாதைகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நாம் வீட்டில் பணி செய்யும் முறையே முதன்மையான காரணம்.

``கொரோனா லாக்டௌனால் வீட்டிலிருந்தபடியே வேலைசெய்யும் ஊழியர்கள் பலர் உடல் உபாதைகளோடு மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ளது'' என்கிறார் பொதுநல மருத்துவர் அஷ்வின் கருப்பன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகளை மருத்துவர் பகிர்ந்ததிலிருந்து...

அஷ்வின் கருப்பன்
அஷ்வின் கருப்பன்

1. கண் எரிச்சல்

கொரோனா காரணமாக ஊழியர்களின் பணி நேரம் எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இதனால் பலரின் தூக்கம் பறிபோய்விட்டது. சொல்லப்போனால், ஆழ்ந்த தூக்கம் என்பதையே பலர் மறந்துவிட்டனர். இதோடு ஸ்கிரீன் நேரமும் அதிகரித்துள்ளதால் நாம் கண்கள் சிமிட்டுவதுகூட குறைந்துவிட்டது. இதனால் பார்வை மங்கலாகிறது. அதிகமான நேரம் ஒளிர் திரையைக் காண்பதால் கண்ணின் கார்னியாவில் தண்ணீர் வறட்சி ஏற்படுகிறது. இதனால் தலைவலி, கண் வலி உண்டாகிறது.

இந்தப் பிரச்னைகளை எல்லாம் தவிர்க்க, குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது உறக்கம் அவசியம். மேலும் திரையில் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். இரவில் பணிசெய்யும்போது புளூ கட் விஷன் கண்ணாடியை (Blue cut vision lenses) அணிந்து பணிசெய்யலாம். ஆனால், பகல் நேரத்தில் இந்தக் கண்ணாடி அவ்வளவாகப் பலன் தராது.

2. உடல் பருமன்

லாக்டௌனில் வீட்டிலேயே இருப்பதால் பெரும்பாலானோருக்கு உடல் பருமன் ஏற்பட்டுள்ளது. கணினி முன்பே அதிக நேரம் இருப்பதால் இதர வேலைகளுக்கான நேரம் குறைந்துவிடுகிறது. சூரியன் வரும்போது வெளியில் செல்லாத காரணத்தால் வைட்டமின் டி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளால் நீரிழிவு நோய், பைல்ஸ், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு வழி ஏற்படுகிறது.

இவற்றையெல்லாம் தவிர்க்க உடற்பயிற்சி, சூரியன் வரும் வேளைகளில் வெளியில் நடைப்பயிற்சி செய்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

Work from home
Work from home

3. முதுகுவலி

வீட்டிலிருந்தே பணிசெய்வதால், அலுவலகத்தில் இருப்பது போன்ற வொர்க்கிங் பொஸிஷன்களுக்கு ஏற்ற மேசைகளும் நாற்காலிகளும் வீட்டில் நமக்குக் கிடைப்பதில்லை. இதனால் முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை ஏற்படுகின்றன. மேலும், மடிக்கணினியைப் படுக்கையிலிருந்தே பயன்படுத்துவது, தரையில் அமர்ந்து, சுவரில் சாய்ந்து பயன்படுத்துவது என முறையற்ற அமரும் நிலைகளில் (posture) பயன்படுத்துவதால் வலிகள் ஏற்படுகின்றன.

லேப்டாப், டெஸ்க்டாப்பில் பணிபுரியும்போது, முதுகு மற்றும் கழுத்து சரியான முறையில் இருப்பதுபோல அமர்ந்து வேலைசெய்தாலே, இந்தப் பிரச்னைகள் விலகிவிடும். மாறாக, அமரும் நிலையை சரிசெய்துகொள்ளாமல் தொடர்ந்து பணியாற்றினால், உபாதைகளும் வீரியமாகும். வொர்க்கிங் டேபிள், சேர் என முறையான அலுவல் செட்டப்பை முதலில் ஏற்படுத்துங்கள்.

4. மனச்சோர்வு

கொரோனா அச்சத்தால் பலர் முழு நேரமும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் வெளிச்சூழல் புழக்கமே அவர்களுக்குக் கிடைப்பதில்லை. விளைவாக, பலருக்கு பதற்றம், மனச்சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. 8 மணி நேரத் தூக்கம் என்பது, 6 மணி நேரம், 4 மணி நேரம் எனக் குறைந்துகொண்டே போவதும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது.

அதிகபட்சமாக 8 மணி நேரம் வேலை, நிச்சயமாக 8 மணி நேரத் தூக்கம், பணி நேரத்துக்கு இடையே கண்களுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்க சில நிமிடங்கள் பிரேக் என எடுத்துக்கொள்ள வேண்டும்.

Work From Home
Work From Home

5. குடும்ப வன்முறையால் ஏற்படும் காயங்கள்

இந்த லாக்டௌனில் குடும்பம் முழுவதும் எப்போதும் வீட்டிலேயே இருப்பதால், அவர்களுக்கு இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு, குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. இதனால் காயங்களோடு வரும் நோயாளிகளைக் காண்கிறோம். சிலர் கொரோனாவால் தங்களுக்கு ஏற்பட்ட வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி, மனச்சோர்வு ஆகியவற்றை குடும்ப நபர்களின் மீது கோபமாக வெளிப்படுத்திவிடுகின்றனர். இதில் குழந்தைகளுக்கும் அதிளவில் காயம் ஏற்படுகிறது.

இவற்றைத் தவிர்க்க, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டால் இருவரும் சமாதானமாகச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

6. கால் தசைப்பிடிப்பு

வீட்டிலிருந்தபடியே பணிசெய்யும்போது (Work From Home) நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருக்கக் கூடாது. இதனால் கால்களில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க அவ்வப்போது வீட்டுக்குள்ளேயே நடக்கலாம்.

வீட்டிலிருந்தபடியே பணி செய்தல்
வீட்டிலிருந்தபடியே பணி செய்தல்

அலுவலகத்தில் பணி செய்யும்போது சக பணியாளர்களுடன் கேன்டீன் சென்றுவருவது, வெளியே சென்றுவருவது என்று இருப்போம். அதேபோல, வீட்டில் வேலை பார்க்கும்போதும் இடையிடையே 5 நிமிடங்கள் நடந்துவிட்டு வரலாம். இவ்வாறு செய்வதால் தசைப்பிடிப்பு மற்றும் கால், கை மரத்துப் போவதைத் தவிர்க்கலாம்'' என்ற டாக்டர் அஷ்வின் கருப்பன் நிறைவாகச் சொன்னார்...

``கொரோனோ மொத்தமாக நமது வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்துவிட்டது. ஆனாலும், நம் உடலின் மீது நாம்தான் கவனம் செலுத்த வேண்டும். தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்வது, நேரத்துக்கு உண்பது, தேவையான நேரம் உறங்குவது, சரியான பொஸிஷனில் அமர்ந்து வேலைபார்ப்பது, வொர்க்கிங் டேபிள் முதல் ஒளிர்திரை ஸ்கிரீன் ஃபில்டர்வரை வேலைக்கும் நமக்கும் அவசியமானவற்றை வாங்கிப் பயன்படுத்துவது என, உடல்நலனை பேணிக்கொள்ள வேண்டும்... `உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்பதற்கேற்ப!"

அடுத்த கட்டுரைக்கு