Published:Updated:

போதை பழக்கம்... மனநலம் பாதிப்பு... 30 மாதங்களுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்த வாலிபர்!

திருப்பூர் மாவட்டம் செலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஈஸ்வரன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் ராமேஸ்வரம் மனோலயா காப்பகத்தினரால் மீட்கப்பட்டார்.

குடும்பத்தினருடன் மனநலம் தேறிய வாலிபர்.
குடும்பத்தினருடன் மனநலம் தேறிய வாலிபர். ( உ.பாண்டி )

போதை பழக்கவழக்கத்தினால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தைப் பிரிந்த வாலிபர் ஒருவர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்தார். ராமேஸ்வரத்தில் இயங்கிவரும் தனியார் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் புத்தாண்டு தினத்தில் புத்துணர்வு பெற்று சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஈஸ்வரன்
மனநலம் பாதிக்கப்பட்ட ஈஸ்வரன்
உ.பாண்டி

புனித தலமாகத் திகழும் ராமேஸ்வரம் பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்திரைவாசிகள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் தாங்களாகவே வந்து சேரும் அல்லது குடும்பத்தினரால் விட்டுச்செல்லப்படும் சில மனநோயாளிகளும் உள்ளனர்.

இவர்கள் ராமேஸ்வரம் வீதிகளில் சுற்றித் திரிவதுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களிலோ, அருவருக்கும் செயல்களிலோ ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்க மனோலயா என்ற தனியார் மனநலக் காப்பகம் ராமேஸ்வரத்தில் இயங்கி வருகிறது.

தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் இந்தக் காப்பகத்தில் 40 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த மனநலக் காப்பகத்தில் இதுவரை 49 பேர் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். இவர்களில் 8 பேர் குணமடைந்த நிலையில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 9 பேர் மனநலம் சீரடைந்த நிலையில் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர்.
மனோலயா

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் செலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஈஸ்வரன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் ராமேஸ்வரம் தனியார் காப்பகத்தினரால் மீட்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக அங்கு அவருக்கு மாவட்ட மனநல மருத்துவர் பெரியார் லெனின் வழிகாட்டுதலோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈஸ்வரன் குணமடைந்து தனது சொந்த ஊர் மற்றும் குடும்பம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோவையில் உள்ள தன்னார்வலர் ஒருவர் மூலம் ஈஸ்வரனின் சொந்த ஊரான செலாம்பாளையத்தில் ஈஸ்வரனின் குடும்பத்தினர் குறித்து விசாரித்தனர். விசாரணையின் போது ஈஸ்வரன் கூறியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரனின் தாய் அம்சவேணி மற்றும் சகோதரர் அருண்குமார் ஆகியோரிடம் அவரைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து மகிழ்ச்சியடைந்த அவர்கள் புத்தாண்டு தினத்தன்று ராமேஸ்வரத்தில் உள்ள மனோலயா காப்பகத்திற்கு வந்திருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் சந்தோஷமடைந்த ஈஸ்வரன் தனது அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகள் ஆகியோரை பெயர் சொல்லி அழைத்துப் பரவசப்பட்டார்.

குடும்பத்தினருடன் ஈஸ்வரன்
குடும்பத்தினருடன் ஈஸ்வரன்
உ.பாண்டி

இதன் பின்னர் காப்பக நிர்வாகி சுனீல்குமார், பி.ஆர்.ஓ சிவராஜ் ஆகியோர் ஈஸ்வரனை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா, மது போன்ற பழக்கவழக்கங்களால் மனநலம் பாதிக்கப்பட்டதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஈஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் குணமடைந்த நிலையில் தங்களுடன் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த காப்பகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஈஸ்வரனின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்