Published:Updated:

`நிலவேம்புக் குடிநீரை அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டாம்' - மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

அலோபதி மருந்துகளுடன் சில மருந்துகளைக் கொடுக்கலாமா என்பதுகுறித்து ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே நாங்கள் பரிந்துரைப்பது வழக்கம். ஆனால், நிலவேம்பு பற்றி நாங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை.

நிலவேம்பு
நிலவேம்பு

நிலவேம்புக் குடிநீர், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் நிலவேம்புக் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'அலோபதி மருத்துவர்கள் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரைக் குடிக்க பரிந்துரைக்கக் கூடாது' என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் கூறியுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, சில விளக்கங்களைத் தந்தார்.

Dr.Senthil
Dr.Senthil

``நிலவேம்பின் மருத்துவக் குணம் பற்றி அலோபதி மருத்துவர்களுக்குத் தெரியாது. ஆகவே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நிலவேம்புக் குடிநீரைக் குடியுங்கள் என்று அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடாது. அவரவர் படித்த படிப்புக்கேற்ப அந்தந்த மருந்துகளைக் கொடுப்பதும் பரிந்துரைப்பதுமே சரியாக இருக்கும். ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் பார்ப்பது எப்படி தவறோ அதேபோல் அலோபதி மருத்துவர்கள் நிலவேம்புக் குடிநீரைப் பரிந்துரைப்பதும் சட்டப்படி தவறு.

இதுபோன்று, வேறு மருத்துவமுறைகளைப் பின்பற்றக்கூடாது என்றும், அப்படிச் செய்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் உள்ளது. இப்போது, அதுதொடர்பான விவாதம் எழுந்ததையடுத்து, அலோபதி மருத்துவர்கள் யாரும் தங்களது நிறுவனத்திலோ, தனிப்பட்ட விதத்திலோ நிலவேம்புக் குடிநீரை காய்ச்சலுக்காகப் பரிந்துரைப்பதாகப் புகார் வந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

நிலவேம்பு
நிலவேம்பு

`அலோபதி மருந்துடன் மூலிகைகளை சேர்த்துக் கொடுப்பதால் பக்கவிளைவு ஏதும் ஏற்படும் என்று கருத வேண்டாம் என்கிறீர்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்று கேட்டதற்கு,``அலோபதி மருந்துகளுடன் சில மருந்துகளைக் கொடுக்கலாமா என்பதுகுறித்து ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே நாங்கள் பரிந்துரைப்பது வழக்கம். ஆனால், நிலவேம்பு பற்றி நாங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை. ஆய்வுக்கு உட்படுத்தாத அந்த மூலிகை, பக்கவிளைவை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பதுபற்றித் தெரியவில்லை' என்றவர், ``அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகள் என்றில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரை குடிக்குமாறு பரிந்துரைத்ததாகப் புகார் வந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Vikatan

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,``பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவ வசதிகள் உள்ளன. ஆகவே, அங்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது. நோயாளிகள் விரும்பினால் அங்கே சென்று நிலவேம்புக் குடிநீர் குடிக்கலாம்'' என்றார்.