Published:Updated:

`ஒலிம்பிக் போட்டிகளால் மற்றொரு வீரியமான வேரியன்ட் உருவாகலாம்!' - புதிய அச்சமும் நிபுணர் விளக்கமும்

Tokyo
Tokyo ( AP Photo/Eugene Hoshiko )

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றால் வித்தியாசமான வேரியன்ட் வைரஸ் அனைத்தும் ஓரிடத்தில் கூடி அதிலிருந்து புதிய வேரியன்ட் உருவாகும் என்று அச்சம் எழுந்துள்ளது. போட்டியை நடத்தக் கூடாது என்று வீதியிலிறங்கி அந்நாட்டினர் போராடி வருகின்றனர்.

கோவிட்-19 தொற்றில் நாளுக்கு நாள் புதிய புதிய சவால்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அதில் இப்போது உலகையே திகைக்க வைத்திருப்பது உருமாறி பயமுறுத்தும் கொரோனா வைரஸ் வகைகள்தான். இந்நிலையில்தான் இந்தியாவில் உருவான உருமாறிய டெல்டா வேரியன்ட் பிரிட்டனை மூன்றாம் அலைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது. அதே வரிசையில் வியட்நாமில் இந்தியா மற்றும் பிரிட்டனில் உருவான வைரஸ்களின் தன்மைகள் கொண்ட புதிய வைரஸ் வகை பரவி வருகிறது.

இதுபற்றி பேசியுள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கையன் தான், ``இந்த புதிய வகை வைரஸ் காற்றில் மிகவும் வேகமாகப் பரவுகிறது. இது வியட்நாமில் ஏற்கெனவே பரவிய வைரஸ் வகையைக் காட்டிலும் அதிகம் பரவும் தன்மையுடன் காணப்படும். இந்தியா மற்றும் பிரிட்டனில் உருமாறிய வைரஸின் தன்மை இந்த புதிய வைரஸில் காணப்படுகிறது" என்று கவலை தெரிவித்திருந்தார்.

A medal tray that will be used during the victory ceremonies at the Tokyo 2020 Olympic
A medal tray that will be used during the victory ceremonies at the Tokyo 2020 Olympic
Issei Kato/Pool Photo via AP

மற்றொரு புறம் ஒட்டுமொத்த தடகள விளையாட்டுகளின் கோலாகலமான ஒலிம்பிக் போட்டிகளுக்கு கோவிட்-19 தொற்றால் பிரச்னை எழுந்துள்ளது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றால் வித்தியாசமான வேரியன்ட் வைரஸ் அனைத்தும் ஓரிடத்தில் கூடி அதிலிருந்து புதிய வேரியன்ட் உருவாகும் என்று அச்சம் எழுந்துள்ளது. போட்டியை நடத்தக் கூடாது என்று வீதியிலிறங்கி அந்நாட்டினர் போராடி வருகின்றனர்.

இதுற்றிப் பேசியுள்ள ஜப்பான் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் நயோடா உயேமா. ``ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதன் மூலம் புதிய வகை வைரஸ் உருமாறினால் அது `டோக்கியோ வேரியன்ட்' என்று அழைக்கப்படலாம். அடுத்த 100 ஆண்டுகளுக்கு அது விமர்சனங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

The Victory podium that will be used during the victory ceremonies at the Tokyo 2020 Olympic
The Victory podium that will be used during the victory ceremonies at the Tokyo 2020 Olympic
Issei Kato/Pool Photo via AP

இந்தியாவிலும் இரண்டாம் அலையின் தொடக்கத்தின்போது பிரிட்டனில் உருமாறிய வைரஸ் பரவியது என்று அரசு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் வைரஸ்கள் ஏன் உருமாறுகின்றன, இந்த உருமாறிய வைரஸ்கள் ஏன் ஆபத்தானவை உள்ளிட்ட கேள்விகளுடன் தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் பேசினோம்.

``இந்தியாவிலேயே முதல் அலையின்போது பரவிய வைரஸுக்கும் இரண்டாம் அலையின்போது பரவும் வைரஸுக்கும் மாறுபாடுகளைப் பார்க்கிறோம். இந்தியாவிலேயே சுமார் 620 உருமாறிய வைரஸ் வகைகள் (Strain) இருக்கின்றன. உருமாறிய வைரஸ் வகைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தி மக்களை அதிகம் தாக்கும் வகையை `வேரியன்ட்' (Variant) என்று அழைப்பார்கள்.

சில வேரியன்ட் நிச்சயம் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு மிகவும் தீவிரமாக இருக்கும், சில வேரியன்ட் தொற்று ஏற்பட்டதுகூட அறியாத வகையில் லேசான அறிகுறிகளுடன் சென்றுவிடும். சில வேரியன்ட் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால், ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு மிகவும் வேகமாகப் பரவும்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கும். இந்தியாவில் தற்போது B.1.617 என்ற வேரியன்ட்தான் அதிகம் பரவுகிறது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Matt Slocum

இது பிற நாடுகளில் பரவும் வைரஸைவிட வீரியம் அதிகமானதாக இருக்கிறது. அதன் காரணமாகத் தொற்றும் அதிகமாக ஏற்படுகிறது. அதனால் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு மிக எளிதாகப் பரவிவிடுகிறது. ஆனால், பிற வைரஸை ஒப்பிடும்போது தீவிரத்தன்மை கிட்டத்தட்ட சமமாகத்தான் இருக்கிறது. ஆனால், அறிகுறிகள் அதிகமாக ஏற்படுகின்றன. முதல் அலையில் குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது குடும்பம் குடும்பமாகப் பாதிக்கப்படுகின்றனர். போன அலையில் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகம் ஏற்படவில்லை. ஆனால், இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தேவை அதிகமானோருக்கு ஏற்பட்டது. தற்போது பரவும் வைரஸின் தீவிரத்தன்மையும், பரவும் வேகமும் அதற்கு முக்கிய காரணம்.

ஏன் ஆபத்தானவை?

எந்த வைரஸும் மாற்றமடைந்துகொண்டே இருக்கும்போது அதன் தீவிரம் எவ்வாறு இருக்கிறது என்றும் அந்த வைரஸ் எந்த அளவு நோயை உற்பத்தி செய்யும் என்பதையும் முக்கியமாகப் பார்க்க வேண்டும். அந்த வைரஸால் ஏற்படும் தீவிரம் அதிகமாக இருந்தால் அதன் தாக்கமும் அதிகமாக இருக்கும். ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்குப் பரவும் என்பதைக் கணக்கிடும் ஆர்நாட் (R0) அதிகரிக்கிறதா என்பதையும் கணிப்பார்கள். பொதுவாக, உருமாறும் வேரியன்ட் வகைகள் வீரியம் அதிகம் கொண்டவையாக இருக்கும் என்பதால்தான் அதுபற்றி அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

வீரியம் ஏன் அதிகரிக்கிறது?

Dr.Ashwin Karupan
Dr.Ashwin Karupan

வைரஸ் உருமாறிக்கொண்டே இருப்பது இயற்கைதான். வைரஸாக இருந்தாலும் பாக்டீரியாவாக இருந்தாலும் அதற்கு ஒரு மருந்து, சிகிச்சையின் மூலம் தடுப்பு போடும்போது அதிலிருந்து பிழைத்து வாழ்வதற்குத் தன்னை மாற்றி மாற்றி தகவமைத்துக்கொண்டே இருக்கும். தடுப்புகளை மீறி மேலும் மேலும் வீரியமாகிக்கொண்டே வரும்போது அப்போது இருக்கும் தடுப்பு முறைகளுக்கு கட்டுப்படாது. வீட்டில் கொசுவை விரட்டும் திரவத்தைப் பயன்படுத்தும் முதல் இரண்டு நாள்கள் கொசு வரத்து கட்டுப்படும். அடுத்த சில நாள்களில் கொசு விரட்டியின் மீதே உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். அதே போன்றுதான் சூழலுக்கு ஏற்றாற்போல் தன்னை அப்டேட் செய்துகொள்ளும் வைரஸ்.

டெங்கு உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகளுக்கு ஏன் ஆன்டிவைரல் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை என்றால் அவை குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே வாழும் (Self limiting) தன்மை கொண்டவை. அதனால் ஆன்டிவைரஸ் மருந்துகளுக்கான தேவை ஏற்படவில்லை.

முதன்முறையாக நீண்ட நாள்கள் வாழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திய வைரஸ் என்றால் அது இன்ஃப்ளூயன்சா வைரஸ்தான். அதனால் அதற்கு தடுப்பூசி கண்டறியப்பட்டது. போலியோவும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இவற்றுக்குப் பிறகு நாம் பார்க்கும் மிகப்பெரிய தொற்று கோவிட்-19 தான். அதனால்தான் இதற்கும் தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.

A woman rides a bicycle near the Olympic Rings
A woman rides a bicycle near the Olympic Rings
AP Photo/Eugene Hoshiko
3-ம் அலை அச்சம், பயமுறுத்தும் டெல்டா வேரியன்ட்; என்ன நடக்கிறது பிரிட்டனில்? தமிழர் பகிரும் தகவல்கள்

உருமாறிய வைரஸால் தடுப்பூசி திறன் குறையுமா?

தடுப்பூசி தயாரிக்கும்போதே தற்போது அதிகமாகப் பரவும் வகையைச் சேர்ந்த வைரஸின் ஸ்பைக் புரோட்டீனைத்தான் தடுப்பூசியில் சேர்த்திருப்பார்கள். அது உடலுக்குள் செலுத்தப்பட்டதும் ஆன்டிபாடி உருவாகிறது. மேலும் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான அடிப்படையான தடுப்பூசிகளை கண்டறிந்துவிட்டதால், அந்தந்தச் சூழலில் பரவும் வேரியன்ட் வைரஸுக்கு ஏற்றாற்போல் அதை எளிதாக அப்டேட் செய்துவிட முடியும்.

மேலும் தடுப்பூசியால் உருவாகும் ஆன்டிபாடி புதிய வேரியன்ட் வைரஸுக்கு எதிராகவும் ஓரளவுக்கு பாதுகாப்பை அளிக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதும் வெகுவாகக் குறையும். அதனால்தான் தடுப்பூசிகளை மாற்றித் தயாரிக்க வேண்டும் என்ற குரல்கள் எழவில்லை. ஆனால், இனிமேல் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் புதிய வேரியன்ட் வைரஸுக்குத் தகுந்தாற்போல் உற்பத்தி செய்யப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு