Published:Updated:

நாட்டுமருந்துக்கடைகளின் உதவியுடன் சுயமருத்துவம்... பலன்கள், பக்கவிளைவுகள் என்னென்ன?

அந்தக் காலத்தில் அதிக அளவில் இருந்த நாட்டு மருந்துக் கடைகள் இன்று வெகுவாக அருகிவிட்டன. கூடவே நாம் யோசிக்க வேண்டியது இப்போதிருக்கும் நாட்டு மருந்துக் கடைகளின் தரம் பற்றி!

நாட்டு மருந்து
நாட்டு மருந்து

மது மருத்துவ வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, இயற்கையாக விளைந்த வேர்கள், கிழங்குகள், இலைகள், மரப்பட்டைகள், பழங்கள், காய்கள், விதைகள், வேர்ப்பட்டைகள் போன்றவற்றைத் தங்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு நிவாரணமாகப் பயன்படுத்தி வந்தனர் மக்கள். அவை சார்ந்து நிறைய அனுபவக் குறிப்புகள், மூலிகை ஆய்வுக் குறிப்புகள் பழங்கால மக்களிடம் இருந்தன. இந்தப் பாரம்பர்ய மருத்துவ அறிவு, நமது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துக்கு மட்டுமன்றி, பல்வேறு பகுதிகள் மற்றும் வெவ்வேறு நாட்டு பாரம்பர்யத்துக்கும் உண்டு.

நாட்டு மருந்து
நாட்டு மருந்து
நிலாச்சோறு, குறுநடை, அன்பான உரையாடல்... ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் ஆலோசனைகள்!

மக்களுக்கு ஏற்படும் அனைத்து உபாதைகளுக்கும் தீர்வாக இருந்தவை இயற்கை சார்ந்த பொருள்களே! இதுவே ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பர்ய மருத்துவம் உருப்பெருவதற்கான அடிப்படையாக இருந்திருக்கும். இயற்கையுடன் இணைந்து வாழும் வாய்ப்பு அந்தக்கால மக்களுக்கு இருந்ததால், இயல்பாகவே மூலிகைகள் பற்றிய பட்டறிவு அவர்களுக்கு இருந்தது. மேலும் மூலிகைகள் சார்ந்து அனுபவபூர்வமாக நிபுணத்துவம் பெற்ற பல மனிதர்களின் மூலம் அடுத்த தலைமுறைக்கு மூலிகைகள் குறித்த மருத்துவம் கடத்தப்பட்டது. இப்படியே படிப்படியாக வளர்ந்தன இயற்கை மருத்துவ முறைகள்!

மூலிகை உபப் பொருள்களை அப்போதைக்கு எடுத்துப் பயன்படுத்துவதைப்போலவே, உலர்ந்த மூலிகைப் பொருள்களும் நோய்த் தீர்க்க பெருமளவில் பயன்பட்டன. முற்காலத்தில் வீடுதோறும் மூலிகைகள் சார்ந்த மருத்துவப் பொருள்கள் இருந்தன. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மிளகு, சீரகம், ஓமம், பெருங்காயம் போன்ற மருந்துப் பொருள்களைத் தாங்கிய நமது அஞ்சறைப் பெட்டி! அஞ்சறைப் பெட்டிப் பொருள்களை வைத்தே பல்வேறு நோய்களைத் தடுக்க முடியும் மற்றும் போக்க முடியும். அஞ்சறைப் பெட்டி பொருள்களைத் தாண்டி, உடல் உபாதைகளைக் குணமாக்க வீட்டிலேயே பல்வேறு மூலிகைப் பொருள்கள் இருந்தன.

Dr.வி.விக்ரம்குமார் MD(S)
Dr.வி.விக்ரம்குமார் MD(S)

மட்டுமல்லாமல் இன்றைய பார்மசி போல, அன்று நம்மிடையே இருந்தவைதான் நாட்டு மருந்துக் கடைகள். மருத்துவத்துக்குத் தேவைப்படும் அனைத்து மூலப் பொருள்களும் அக்கடைகளில் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் பொருள்களை வைத்து மருந்து தயாரிக்கும் வழக்கத்தைப் பெரும்பாலோனோர் கையாண்டனர்.

குறிப்பாக, பாரம்பர்ய சித்த மருத்துவர்கள், மருந்து செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆதாரமாக இருந்தன நாட்டு மருந்துக் கடைகள். அன்றைய நாட்டு மருந்துக் கடைகளில் இருந்தவர்கள், மருத்துவ அறிவு நிறைந்த பாரம்பர்ய மருத்துவர்கள். மக்களுக்கு ஏற்படும் நோய்களை முறையாகக் கணித்து, நாடி பிடித்து அனுமானித்து மருந்துகளைத் தேர்வு செய்யும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது.

நாட்டு மருந்து
நாட்டு மருந்து
Vikatan

அக்காலத்தில் அதிக அளவில் இருந்த நாட்டு மருந்துக் கடைகள் இன்று வெகுவாக அருகிவிட்டன. கூடவே நாம் யோசிக்க வேண்டியது இப்போதிருக்கும் நாட்டு மருந்துக் கடைகளின் தரம் பற்றி! இன்றைய காலகட்டத்திலும் தரமான மூலப்பொருள்களை விற்பனை செய்யும் நாட்டு மருந்துக் கடைகள் இருக்கின்றன. குறிப்பாக, தென் தமிழகத்தில் இத்தகைய நாட்டு மருந்தகங்கள் மிகவும் அதிகம். சித்த மருத்துவப் பாரம்பர்யம் உடைய மருந்துக் கடைகள் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றன. அவற்றைச் சரியாகக் கண்டுபிடிப்பது முக்கியம்.

இன்றைய சூழலில் நம்மிடையே இருக்கும் மிகப்பெரிய சவால் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பொருள்கள் தரமானவையா? மருத்துவர் அறிவுரையின்றி நாட்டு மருந்துக் கடைகளில் மூலப் பொருள்கள் வாங்கலாமா, எப்படி மூலிகை மூலப்பொருள்களை இனம் கண்டறிவது..?

நீண்ட காலமாக உங்கள் பகுதியில் இருக்கும் நாட்டு மருந்துக் கடைகளைத் தாராளமாக நாடலாம். மூலப் பொருள்களின் தரத்தை அறிந்துகொள்ள நம்பிக்கை மிக்க பாரம்பர்ய சித்த மருத்துவர்கள், பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.

நாட்டு மருந்து
நாட்டு மருந்து

எளிய உபாதைகளுக்கு அடிப்படையான மருத்துவப் பொருள்களை வாங்குவதில் தவறில்லை. எ.கா. செரிமான உபாதைகளைச் சீர்செய்யப் பயன்படும் இஞ்சி லேகியம்… சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் ,சீரகம் சேர்ந்த பஞ்ச தீபாக்கினி சூரணம்… திரிகடுகு சூரணம்… அதாவது, நமக்கு பரிச்சயமான பொருள்கள் சார்ந்த மருந்து தயாரிப்புகளை வாங்கலாம். பரிச்சயமான மூலப் பொருள்களை வாங்கலாம். அதே வேளையில் மருத்துவரைச் சந்தித்து நலம் பெற வேண்டிய பிரச்னைகளுக்கு, அவரது ஆலோசனையோடு மருந்துகளை வாங்குவது அவசியம்.

ஆனால், இக்காலத்தில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், பெரும்பாலானோருக்கும் மூலிகைகள் மற்றும் அதன் மூலப் பொருள்கள் சார்ந்த விழிப்புணர்வு இல்லை! மூலிகைகள் குறித்து அடிப்படையான புரிந்துணர்வு உங்களுக்கு இருப்பின், நம்பிக்கை மிக்க நாட்டு மருந்துக் கடைகளை நாடலாம். மக்களின் உடல் நலன் குறித்து சிந்தித்து அறம் சார்ந்த நாட்டு மருந்துக் கடைகளில் பொருள்களை வாங்குவது முக்கியம். எல்லாத் துறைகளிலும் எப்படிச் சில அறமற்ற செயல்கள் நடக்கின்றனவோ, அதைப் போலவே இவ்விஷயத்தையும் நாம் எதிர்கொள்வது அவசியம்.

நாட்டு மருந்து
நாட்டு மருந்து

உணவுப் பொருள்களில் கலப்படம் இருப்பதைப்போல, மூலப் பொருள்களிலும் சில வேளைகளில் கலப்படம் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன. தேவைப்படும் முலிகைப் பொருள் போலவே உருவத் தோற்றமுடைய, விலை குறைந்த மூலப் பொருளைச் சேர்க்க முடியும். ஒரு மருந்தில் பல உட்பொருள்கள் சேரும்போது, விலை அதிகமுள்ள பொருள் சேர்க்கப்படாமல் போகலாம். அப்போது அம்மருந்தின் தரம் குறையும். மூலப்பொருள்களில் கலப்படம் நிகழும்போது, மருந்தின் வீரியம் குறையும்.

வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் சில தகவல்களை வைத்துக்கொண்டு சிறு சிறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். ஆனால், மிகப்பெரிய நோய்களுக்கு வாட்ஸ்-அப் தகவல்களை மட்டுமே நம்பி இருப்பது தவறு. வாட்ஸ்-அப்பில் வரும் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பாரம்பர்ய மருத்துவராக அல்லாமல், படித்து பட்டமும் பெறாமல், மூலிகைகள் சார்ந்து எவ்வித அனுபவமும் இல்லாமல், ஒருவர் மிகப்பெரிய மருந்துகளைப் பரிந்துரைக்கிறார் என்றால், அவரிடம் சென்று ஏமாறாதீர்கள், கவனம்.

நாட்டு மருந்து
நாட்டு மருந்து

நாட்டு மருந்துக் கடைகள், நம்மிடையே இருக்கும் மிகப்பெரிய சொத்து! விவரம் தெரிவித்து… உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து… தரமான மருந்துப் பொருள்களை வழங்கினால், கண்டிப்பாக நாட்டு மருந்துக் கடைகளை நாடலாம். நீண்ட நாள்கள் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனை மிக மிக முக்கியம். கூடவே, என்ன நோய் எனக் கணிக்காமல், நாமே சுய மருத்துவர்களாக உருமாறி, உடலில் இருக்கும் மிகப்பெரிய நோய்க்கு, நாமாகவே மருந்துகளைத் தேர்வு செய்யக் கூடாது. 

நமக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகும்போதோ, வேறு ஏதாவது உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும்போதோ நாம் செய்யும் மிகப் பெரிய தவறு, மருத்துவர்களின் ஆலோசனை இன்றி மருந்துகளை நமக்குத் தெரிந்த கடைகளிலேயே வாங்கிப் பயன்படுத்துவதுதான். இதில் தவறு நேரிட வாய்ப்புள்ளது.

நாட்டு மருந்து
நாட்டு மருந்து
மாதுளம், கறிவேப்பிலைத் துவையல், பனங்கற்கண்டு பால்... மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள்! #NoMoreStress

"சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உண்ணத் தகுந்த இயற்கை பொருள்களைக் கொண்டுதானே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன, அதனால் தவறான மருந்தை உட்கொண்டாலும் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது" என்று நினைத்தால் அது தவறு. தவறான மருந்துகளை உட்கொண்டால் அலோபதியில் ஏற்படும் பிரச்னைகள் போலவே சித்த மருத்துவத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில், உடல்நிலை சரி இல்லாத ஒரு குழந்தைக்கு பெற்றோர்களே மருத்துவரின் ஆலோசனை இன்றி வெற்றிலையில் பாதரசத்தை வைத்துக் கொடுத்துள்ளனர். தவறான இந்தச் சிகிச்சையால் அந்தக் குழந்தைக்கு நரம்பியல் பிரச்னை வந்துவிட்டது.

இதுபோல் தவறான மருத்துவ முறையால் பக்க விளைவுகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக, சமையலில் பயன்படுத்தப்படும் பொருள்களை வைத்து தயாரிக்கப்படும் சித்த மருந்துகளைத் தவறாக எடுத்துக்கொண்டால் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது.

சித்த மருத்துவத்தில் உடல்நலக் குறைபாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருந்துகள் உள்ளன. எனவே, இந்த மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொண்டால் அதனால் வரக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.

நாட்டு மருந்து
நாட்டு மருந்து

நமது வீட்டிலேயே உயிர்ப்புடன் இருந்த நாட்டு மருந்துக் கடைகள் நம் தாத்தாவும் பாட்டியும்!

என்றைக்குக் கூட்டுக்குடும்ப கலாசாரம் சிதைந்து தாத்தாவும் பாட்டியும் அருகிப்போனார்களோ, அனுபவ மருத்துவமும் நலிவடையத் தொடங்கிவிட்டது. என்ன பிரச்னையென்றால், மூலிகை அறிவு இல்லாத இப்போதைய தலைமுறையினர், அடுத்த தலைமுறையில் தாத்தா பாட்டியாக மாறும்போது, அவர்களிடம் பாரம்பர்ய அறிவு இருக்காது என்பதே வேதனைதரக்கூடிய உண்மை.