Published:Updated:

`கொரோனா பரிசோதனை வார்டு எப்படி இருக்கிறது?'- கேரள யூடியூபரின் நேரடி அனுபவம் #Video

யூடியூபர் ஷகீர்
யூடியூபர் ஷகீர் ( YouTube Screen Shot )

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அழைத்துச் செல்லப்படும் கேரள யூடியூபர் ஒருவர், தனது அனுபவங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோவாகப் பதிவிட்டிருக்கிறார்.

கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டதாக கேரளா அறிவித்திருந்தது.

இந்தநிலையில், கேரள யூடியூபரான ஷகீர் ஷுபன் என்ற இளைஞர், அஸர்பைசான் நாட்டில் இருந்து கண்ணூர் திரும்பியிருக்கிறார். அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதால், கண்ணூர் விமான நிலையத்தில் இறங்கியதும் அவருக்குக் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்படுத்தும் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குறிப்பாக, கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தனது பயணம் குறித்துத் தகவல் தெரிவித்து, தாமாகவே முன்வந்து அவர்களுடன் அந்த சோதனைக்காக ஷகீர் சென்றிருக்கிறார்.

யூடியூபர் ஷகீர்
யூடியூபர் ஷகீர்
YouTube Screen Shot
முகக்கவசம் யெஸ்... ஹேண்ட் சானிட்டைசர் நோ... சென்னை கொரோனா அப்டேட்ஸ்!

விமான நிலையம் தொடங்கி, மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு வரை தனது அனுபவங்களை செல்ஃபி கேமராவில் வீடியோவாக எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூடியூபில் அப்லோடு செய்திருக்கிறார் ஷகீர். மல்லு டிராவலர் (Mallu Traveler) எனும் தனது யூடியூப் சேனலில் அவர் அப்லோடு செய்யப்பட்டிருக்கும் வீடியோ ஏறக்குறைய 23 நிமிடங்கள் ஓடுகிறது.

கண்ணூர் விமான நிலையத்தில் என் 95 மாஸ்க்குடன் தோன்றும் ஷகீர், கொரோனா பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்கள் நிச்சயம் கொரோனா சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கொரோனா அச்சத்தை விடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்புக் கொடுக்கும்பட்சத்தில் அதிலிருந்து நம்மால் எளிதாக மீளலாம் என்றும் அவர் கூறுகிறார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் நேரடியாக வீட்டுக்குச் சென்றால், ஒருவேளை அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால், முதலில் பாதிக்கப்படுவது அவர்களது குடும்பத்தினர்தான் என்பதையும் ஷகீர் சுட்டிக்காட்டுகிறார்.

``நான் இப்போது பிரதமருக்கு உண்டான மரியாதையுடன் நடத்தப்படுகிறேன். விமான நிலையத்தில் (கண்ணூர்) இருக்கும் மற்ற பயணிகளை அப்புறப்படுத்திவிட்டார்கள். ஏன் சுங்கத் துறை சோதனை கூட இல்லை. அனைவரும் என்னிடத்தில் இருந்து சற்று தொலைவிலேயே நிற்கிறார்கள். என் வாழ்வில் முதல்முறையாக ஒரு விஐபி போல நடத்தப்படுகிறேன். நாம் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்'' என்று பாசிடிவ் பகிர்கிறார் ஷகீர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

விமான நிலையத்தில் இருந்து பிரத்யே ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் ஷகீரிடம், `தைரியமாக இருங்கள். அச்சம்கொள்ள வேண்டாம். விரைவில் வீடு திரும்பி விடுவீர்கள்' என்று மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறுகிறார். அதற்கு ஷகீரோ, `எனக்கு எந்த பயமும் இல்லை. அங்கு (தனிமைப்படுத்தப்பட்ட வார்டு) 15 நாள்கள் இருப்பதில் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை. என் மூலம் வேறு யாருக்கும் அது பரவாமல் இருப்பதை நான் உறுதி செய்வேன்' என்று நம்பிக்கையுடன் பதிலளிக்கிறார்.

கொரோனா வைரஸ்... தொற்றாமலிருக்க இவற்றையெல்லாம் தொடாதீர்கள்! #VikatanPhotoCards

உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் பயணிக்க எண்ணி, கடந்த ஆண்டு அக்டோபரில் பயணத்தைத் தொடங்கிய ஷகீர், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இரான் உள்ளிட்ட நாடுகளைக் கடந்து அஸர்பைஜானை அடைந்தபோது, கொரோனா பாதிப்பால் அந்த நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருந்தது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர், தனது பயணத்தைப் பாதியில் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கிறார். ஆனால், தனது பயணம் பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பியதற்கான எந்த ஒரு வருத்தமும் முகமூடியுடன் காணப்பட்ட அவரிடம் இல்லை.

கொரோனா
கொரோனா
Pixabay

மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்குச் சென்ற பின்னர், தனக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் குறித்து பேசுகிறார். மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து முடிவுகள் தெரிய மூன்று நாள்கள் ஆகும் என்று குறிப்பிடும் அவர், `காய்ச்சல் வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லையா? அதேபோல், இதை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்கிறார். மேலும், அரசு மருத்துவமனைகள் குறித்த முன்முடிவுகளை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறும் அவர், `நமது அரசு மருத்துவமனைகள் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் இருக்கின்றன. என்னைப் பரிசோதிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், வேறு யாரையும் பரிசோதிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது. நாம் நினைப்பதைவிட ஒருபடி மேலான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது'' என்றும் கூறுகிறார்.

கொரோனா சந்தேகங்களும் உலக சுகாதார நிறுவனத்தின் விளக்கங்களும்! #VikatanPhotoCards

இரண்டு நாள்களாக மருத்துவமனையில் இருக்கும் அவர், தனது மருத்துவமனை அனுபவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை பார்வையாளர்களுக்குத் தருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசுவதோடு வீடியோவை நிறைவு செய்யும் அவர், `நீங்கள் வெளிநாட்டில் இருந்து திரும்புகையில் உங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகத் தோன்றினால், மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள். பரிசோதனை முடிந்து சில நாள்களில் வீடு திரும்பிவிடலாம். ஆனால், அதைக் கண்டு நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. நாம் கேரளாவில் இருக்கிறோம். நமது சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை உலகமே அங்கீகரித்திருக்கிறது'' என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.

`சமூக பொறுப்புள்ள தனி மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ஒவ்வொருவரும் காண வேண்டும்' என்று நெட்டிசன்கள் அந்த வீடியோவுக்குக் கீழ் கமெண்ட் செய்து பாராட்டி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு