Published:Updated:

கொரோனா அச்சம்.. தொடர் ஸ்கிரீனிங்.. வெறிச்சோடிக் கிடக்கும் திருச்சி வீதிகள்! #Corona

ஸ்ரீரங்கம் கோயிலில் கொரோனா எச்சரிக்கை
ஸ்ரீரங்கம் கோயிலில் கொரோனா எச்சரிக்கை

இந்நிலையில், திருச்சியில் கொரோனா அச்சம் காரணமாக ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் தமிழக வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது எனக் கூறி வரும் 31-ம் தேதிவரை கோயில்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயிலுக்குள் 6 கால பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருச்சியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

திருச்சி ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை
திருச்சி ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை

திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்கள், திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி கோ அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, திருவரங்கம் உள்ளிட்ட கோட்டங்களில் இயங்கிவரும் பூங்காக்கள் மூடப்பட்டதாகத் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பேருந்து நிலையங்களில் பயணிகள் வராததால் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இந்நிலையில், திருச்சியில் கொரோனா அச்சம் காரணமாக ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

திருச்சி ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திருச்சி இருப்புப்பாதை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

அவர், ”ரயில்வே காவல்துறை சார்பிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பயணிகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாகக் கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்துவரும் பயணிகள் தெர்மல் ஸ்கேனிங் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.

கொரோனா அச்சம்.. தொடர் ஸ்கிரீனிங்.. வெறிச்சோடிக் கிடக்கும் திருச்சி வீதிகள்! #Corona

நாகர்கோவில், ராமேஸ்வரம் போன்ற வெளியூர்ப் பயணிகள் அதிகம் வரும் ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு ரயில் நிலையங்கள் சுகாதாரம் மேம்பாட்டுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. பிரதமரின் அறிவுறுத்தலின்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பணியில் உள்ள காவலர்கள் மட்டுமே பணிக்கு வருவர். மற்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளைத் தவிர ஆதரவற்றோர் உள்ளிட்டவர்கள் ரயில் நிலைய நடைமேடைகளில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு தங்கியிருப்பவர்கள் ரயில் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்” என்றார்.

கொரோனா எச்சரிக்கை வெறிச்சோடிய ரயில்
கொரோனா எச்சரிக்கை வெறிச்சோடிய ரயில்

இதேபோல் திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பரிசோதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த விமானப் பயணிகள் 27பேருக்குக் கொரோனோ அறிகுறி இருந்த நிலையில் அவர்களைத் திருச்சி மணிகண்டம் அடுத்த கள்ளிக்குடி சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிகாலையில் சார்ஜா, துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 458 பேரை திருச்சி விமான நிலையத்திலுள்ள மருத்துவக்குழு தெர்மல் ஸ்கேனிங் மேற்கொண்டதில், 34 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி கள்ளிக்குடி சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு