Published:Updated:

`அந்த நாள்களை மறக்க முடியாது!' - கொரோனாவிலிருந்து மீண்டவரின் நம்பிக்கை வார்த்தைகள்

குணமடைந்தவர்
குணமடைந்தவர்

கடந்த 22ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24வயது இளைஞருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தொடர்சிகிச்சையின் காரணமாகக் குணமடைந்த அந்த இளைஞர் தற்போது வீடுதிரும்பியுள்ளார்.

அவரின் ஒத்துழைப்பே மிகவிரைவில் அவர் குணமடையக் காரணம் எனக்கூறும் மருத்துவர்கள், மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை ஊருக்கு அனுப்பிவைத்தனர். தன்னால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சொந்த ஊரிலும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அந்த இளைஞரிடம் பேசினோம்..

நீங்கள் எதற்காகத் துபாய் நாட்டுக்குப் போனீங்க.. அங்கு உங்களுக்குக் கொரோனா அறிகுறி எப்போ வந்துச்சு?

``டிப்ளோமா முடித்துள்ள நான், வேலை தேடி துபாய்க்குச் சென்றேன். அந்தநாட்டில் உள்ள `தேரா’ எனும் பகுதியில் தங்கியிருந்து வேலை தேடிவந்த நிலையில்தான் எப்படியோ கொரோனா நோய்த் தொற்று எனக்கு வந்துவிட்டது. பொதுவாக கொரோனாவுக்காகச் சொல்லப்படும் அறிகுறிகளான கடுமையான காய்ச்சல், தொண்டைவலி, சளி, வறட்டு இருமல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லை. துபாயில்கூட கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால் ஆரம்பத்தில் 3 பேர்மட்டுமே இருந்த பாதிப்பு 49ஆக உயர்ந்தது.

ஆரம்பத்தில், லேசான தொண்டைவலி இருந்தது. தொடர்ந்து சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு இருந்தது. இதனால் பயந்துபோய், துபாயிலுள்ள மருத்துவரிடம் காண்பித்ததில், அவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டதும் உடல்நிலை சரியாகிவிட்டது.

திருச்சி அரசு பொது மருத்துவமனை
திருச்சி அரசு பொது மருத்துவமனை

தொடர்ந்து தொலைக்காட்சிகளில், கொரோனா குறித்த செய்திகள் பார்த்தேன். அதனால், ஊருக்குப் போனால், என்னால் மற்றவர்களுக்குப் பிரச்னை வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்தேன். அதையடுத்து, துபாயிலிருந்து ஊருக்குத் திரும்பியதும், திருச்சி விமானநிலையத்திலிருந்த மருத்துவக்குழுவிடம் எனக்கு இருந்த அறிகுறிகளைச் சொன்னேன். அதையடுத்து கடந்த 21ம்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எனக்கு அடுத்தடுத்த பரிசோதனைகளில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது".

முதன் முதலில் உங்களுக்குக் கொரோனா எனச் சொன்னதும் எப்படி இருந்துச்சு?

`கொரோனா பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது குறித்து, மருத்துவர்கள் என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மெல்ல மெல்ல அவர்களின் அக்கறை மற்றும் நடவடிக்கைகளில் புரிந்துகொண்டேன்.

25 நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். திருச்சி மருத்துவர்கள், ஊழியர்கள் என்னை அப்படிக் கவனித்துக் கொண்டார்கள். உண்மையிலேயே எனக்குக் கொரோனா வந்துவிட்டது என்றதும் வீட்டைக் காலி செய்துகொண்ட உறவுக்காரர்கள், ஏளனமாகப் பார்ப்பவர்கள் மத்தியில் உயிரைப் பணையம் வைத்து எனக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இப்போதும் கூட தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது நலம் விசாரித்து வருகிறார்கள். அவர்களின் அன்பும் அக்கறையையும் சொல்ல வார்த்தைகளே இல்லை."

மருத்துவமனையில் என்ன மாதிரியான சிகிச்சை வழங்கினார்கள்? சிகிச்சையில் இருக்கும்போது எப்படி உணர்ந்தீங்க?

"ஐயோ! சத்தியமா எந்தவிதச் சிக்கல்களையும் அனுபவிக்கவில்லை. வெறும் காய்ச்சல் என்பதுபோல உணர்ந்தேன். மருத்துவர்கள் சொன்ன அறிவுரைகளை அப்படியே கடைப்பிடித்தேன். மருத்துவமனையில் இருந்தவரைத் துளியும் கவலைப்படவில்லை.."

தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோது நோய் பற்றிய பயம் இருந்துச்சா?

``மருத்துவமனையில் நான் தனியாகத்தான் இருந்தேன். ஆனால் அடுத்தடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் நான் தங்கியிருந்த இடத்துக்குச் சுழற்சியாக வந்துகொண்டே இருந்ததால் நான் ஒருபோதும் தனிமையை உணரவில்லை.

தொடர்ந்து செய்தித்தாள்களை வாசிப்பேன். சில நேரங்களில் தூக்கமே வராது. அப்படி இருக்கும்போது, பூனைகள் மூலமும் கொரோனா பரவும் எனும் செய்தியைப் படிச்சேன். பிறகு அன்றைய நாள் பூனை நினைப்பாகே இருந்தது. இதுகுறித்து மருத்துவர்களிடமே கேட்டதும், என்னைத் தெளிவுபடுத்தியவர்கள் அன்போடு கண்டித்தார்கள். அதன்பிறகு அங்கிருந்தவரை எனக்கு எதுவும் தோன்றவில்லை.

வீடு திரும்பிய நோயாளி
வீடு திரும்பிய நோயாளி

ஊருக்கு வந்தநிலையில், எனது குடும்பத்தார் மற்றும் அக்கம் பக்கத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்போதுதான் தனிமையை உணர்கிறேன். சில தினங்களில் எல்லாம் சரியாகிடும் என்பதால் நம்பிக்கையோடு இருக்கிறேன்.

கொரோனா இருக்குனு சொன்னதும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் எல்லாம் எப்படி ரியாக்ட் பண்னாங்க?

``எனக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தகவலறிந்த பலரும் என்னைப் போனில் அழைத்துப்பேசினார்கள். உண்மையில் அவர்கள் பேசும்போதுதான் கொஞ்சம் மனசு வருத்தமாக இருக்கும். அதனால் செல்போனை அணைத்துவிடுவேன். ஆரம்பத்தில் எனது குடும்பத்தார் கொஞ்சம் பயந்துவிட்டார்கள். ஆனால் எனது நண்பர்களோ, உனக்கு ஒண்ணும் இல்லடா, சீக்கிரம் குணமாகிவிடும் என ஊக்கமளித்தார்கள். அந்த பாசிட்டிவ் எனர்ஜியும் எனக்கு பெரும்பலமாக இருந்தது.

நோய் குணமாகிவிட்டது எனத் தெரிந்ததும் எப்படி ஃபீல் பண்ணுறீங்க?

``கொரோனா வைரஸ் எப்படிப் பரவும், அதன் பாதிப்பு என்ன என்பது குறித்து நமக்குத் தெரியவில்லை. அதனால் பலர் அலட்சியமாக இருக்கிறார்கள். நமது உடம்பைச் சரி செய்ய வேண்டிய அக்கறையும் கடமையும் நமக்குதான் இருக்கிறது. ஆனால், நமது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அவர்களின் உயிரைப் பணையம் வைத்து ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பதை நேரில் கண்டவன் நான்.

நான் 18 நாள்கள் சிகிச்சையில் இருந்தபோது, முதல் இரண்டு பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தது. அதனால் எனது உடல்நிலையிலும் சிக்கல் இருந்தது. சூழலை உணர்ந்த மருத்துவர்கள் வழக்கமான மருந்துகளை மாற்றி வேறு மருந்துகளை கொடுத்து முயன்றார்கள். அதன் விளைவாக அடுத்த மூன்று பரிசோதனைகளில் நான் விரைவில் குணமடைந்தேன்.

"நமது உடம்பைச் சரி செய்ய வேண்டிய அக்கறையும் கடமையும் நமக்குதான் இருக்கிறது. ஆனால், நமது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அவர்களின் உயிரைப் பணையம் வைத்து ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பதை நேரில் கண்டவன் நான்" - அந்த இளைஞர்

நான் ஊருக்குக் கிளம்பும்போது, எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் எல்லோரும் கைதட்டி என்னை அனுப்பி வைத்தார்கள். அன்றைய நாள் நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன். அதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை அவ்வளவு சந்தோஷமாக இருந்தது..

தொடர்ந்து உற்சாகமாக

குணமடைந்த உங்களை தற்போது என்ன வழிமுறைகள் ஃபாலோ பண்ணச் சொல்லிருக்காங்க?

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்துள்ள நிலையில் மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.?

என்பது உள்ளிட்ட நமது கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்களை அப்படியே நீங்கள் லைவாக கேட்கலாம்.. .

கொரோனாவிலிருந்து மீண்டவரின் நம்பிக்கை வார்த்தைகள் https://bit.ly/2VoApn6 கடந்த 22ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில்...

Posted by Vikatan EMagazine on Tuesday, April 14, 2020
அடுத்த கட்டுரைக்கு