Published:Updated:

கோவிட்-19 இறப்புகளைக் குறைக்கும் காசநோய் தடுப்பூசி - நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வு!

தடுப்பூசி
தடுப்பூசி

பி.சி.ஜி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் உலக அளவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கோவிட்-19 நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து மனித சோதனையை நிறைவு செய்துள்ளதாக சந்தோஷ தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆய்வுகள் நேர்மறையாகச் செல்லும்பட்சத்தில் 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் தடுப்பு மருந்துகள் கிடைத்துவிடும் என்று உலக சுகாதார நிறுவனமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

covid-19
covid-19

இந்நிலையில் மற்றொரு நம்பிக்கை தரும் ஆய்வு முடிவும் வெளியாகியுள்ளது. அதாவது, பிசிஜி (Bacille Calmette-Guerin(BCG) எனப்படும் காசநோய் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களிடையே கோவிட்-19 இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்பதுதான் அந்த ஆய்வு.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பி.சி.ஜி தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் உலக அளவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு இணையதள அறிவியல் இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

covid-19
covid-19

பல்வேறு நாடுகளில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. ஓர் உதாரணமாக, ஜெர்மனியில் வழங்கப்பட்ட தடுப்பூசி குறித்த விவரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி நாடு ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னதாகக் கிழக்கு ஜெர்மனியிலுள்ள குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஜெர்மனியில் தடுப்பு மருந்து வழங்கப்படவில்லை. நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கோவிட்-19 இறப்பு விகிதம் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.

Corona: கோவிட்-19 பாதிப்பைக் கண்டறியக் குரல் பரிசோதனை! ஆய்வாளர்கள் புதிய முயற்சி

பி.சி.ஜி தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளாதவர்கள் மத்தியில் எடுத்துக்கொண்டவர்களைவிட 2.9 மடங்கு அதிகமாக கோவிட்-19 இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. "பி.சி.ஜி தடுப்பூசி பிற வைரஸ் சுவாச மண்டல தொற்றுகளிடமிருந்தும் பாதுகாப்பைத் தருகிறது" என்று தெரிவித்துள்ளார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் லூயிஸ் எஸ்கோபர்.

Protection from corona virus
Protection from corona virus
கொரோனா: `தவறான திசை; நிலைமை மேலும் மோசமடையும்!’ - எச்சரிக்கும் WHO

இந்தியாவிலும் பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப்படுகிறது. தடுப்பூசி அட்டவணையிலும் கட்டாயம் கொடுக்க வேண்டியதாக இணைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்தியர்களிடையேயும் அதிக நோய் எதிர்ப்புத் திறன் இருக்குமா என்று தொற்று நோய் மருத்துவர் என்.சுதர்சனிடம் கேட்டோம்:

"முறையான விரிவான ஆய்வுகள் அடிப்படையிலேயே இது தொடர்பான சரியான முடிவுக்கு வர முடியும். தடுப்பூசி கண்டறியப்படும் வரை நோயைக் கையாள்வதற்கான சிறந்த மருந்துகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. அவற்றின் மூலம் கோவிட்-19 சிகிச்சையைச் சிறப்பாக வழங்கி, உயிர்களைக் காப்பாற்ற முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு