Election bannerElection banner
Published:Updated:

இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்!

Tuberculosis
Tuberculosis

காசநோய் உள்ளவர்களின் நுரையீரல் ஏற்கெனவே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று எளிதில் ஏற்படலாம்.

நுரையீரலைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிக உயிரிழப்பை ஏற்படுத்திவரும் அதே வேளையில் காசநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக WHO உள்ளிட்ட சுகாதார அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2019-ம் ஆண்டில் 24 லட்சம் பேர் காசநோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 2018-ம் ஆண்டு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது 2019-ல் காசநோய்த் தொற்று இந்தியாவில் 35% அதிகரித்துள்ளது.

காசநோய்
காசநோய்

சென்ற வருடத்தில் மட்டும் காசநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79,144. அதாவது, ஒருவருடத்தில் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 20,000 பேர் காசநோயால் உயிரிழக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 15,000. ஆனால், காசநோயால் உயிரிழந்தவர்கள் 20,000. இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம் என்ற நிலை உள்ளது.

2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டிருக்கும் நிலையில் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் காசநோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

"உலகளவில் காசநோயை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு 5 வருடங்கள் முன்பாகவே இந்தியாவில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டமும் (RNTCP) இதற்காகச் செயலாற்றி வருகிறது.

மாநில காசநோய் கணக்கெடுப்பில் 50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் காசநோய் கட்டுப்பாட்டில் குஜராத், ஆந்திரா மற்றும் இமாசலப் பிரதேசம் மூன்றும் சிறந்த மாநிலங்களாக உள்ளன. 50 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் பிரிவில் திரிபுரா மற்றும் நாகலாந்து சிறப்பாகச் செயல்பட்டன. தாத்ரா, நகர் ஹவேலி, மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் காசநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

`பதஞ்சலியின் Coronil-ல் கொரோனா என்ற வார்த்தையே இல்லை!' - தடைக்கான காரணம்

இந்தியாவில் சில இடங்களில் மட்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள இந்நோயை இந்தியா முழுவதிலும் கட்டுப்படுத்த ஒவ்வொரு தனி மனிதரும் முன்வர வேண்டும். காசநோயால் பாதிக்கப்படுவோர்க்கு ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். இதற்குத் தனியார் அமைப்புகளும் உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.
நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

இந்தியாவில் காசநோய் பாதிப்பு இந்த நிலையில் இருக்க, காசநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்புகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்... குறிப்பாக, இந்த கொரோனா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன... என்று நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமனிடம் கேட்டோம்.

காசநோய்:

Tuberculosis
Tuberculosis

"காசநோய் (TB - Tuberculosis) என்பது நுரையீரலை பாதிக்கக்கூடிய பாக்டீரியா கிருமிகளால் ஏற்படக்கூடிய ஓர் எண்டெமிக் (Endemic) நோய்த்தொற்று. அதாவது எல்லா பருவத்திலும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் நோய்க்கு எண்டெமிக் எனப்படும். தொற்று நோய்களில் மரணத்தை ஏற்படுத்தக்கூடியவற்றில் உலகளவில் முதலிடத்தில் இருப்பது 'காசநோய்'. ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். மற்ற நாடுகளில் காசநோய்த் தொற்று இருந்தாலும், இந்தியாவில் இதன் தாக்கமும், பரவலும் அதிகமாக உள்ளது. அதற்கு அதிக மக்கள் தொகையும், சுகாதாரமில்லாத இடங்களும் முக்கியக் காரணங்களாக உள்ளன.

microbes spread
microbes spread

கொரோனாவை போலவே காசநோயும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். காசநோய் உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் மற்றும் வேகமாகப் பேசும்போதும் வெளிப்படும் எச்சில் நீர்த்திவலைகள் மூலமாகக் காற்றில் பரவும் நோய்க்கிருமிகள் காற்றிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்த, பலவீனமான ஒருவர் அந்தக் காற்றை சுவாசிக்கும்போது அவரின் நுரையீரலுக்குள் செல்லும் கிருமி அவருக்கும் காசநோய் தொற்றை ஏற்படுத்துகிறது.

கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?

TB -ன் வகைகள்:

Tuberculosis
Tuberculosis

காசநோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று 'TB நோய்த் தொற்று' (TB-infection) மற்றொன்று 'TB நோய்' (TB-disease). இதில் முதல் வகையான TB நோய்த் தொற்றில் நம் உடலில் காசநோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள் இருந்தாலும் நமக்கு எந்தவிதமான அறிகுறிகளும் பாதிப்புகளும் ஏற்படாது. அறிகுறிகளற்ற ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பார்கள். காசநோய்க்கான 'Mantoux tuberculin skin test (TST)' டெஸ்ட் செய்தால் ரிசல்ட் பாசிட்டிவ் என்றுதான் வரும். ஆனால், இதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதுவே, TB நோயில் காசநோய்க்கான அ்னைத்து அறிகுறிகளும் வெளிப்படும். காய்ச்சல், இருமல், பசியின்மை, சோர்வு, உடல் எடை குறைதல், ரத்தத்துடன் கூடிய சளி வெளிப்படுதல் எல்லாம் காசநோயின் அறிகுறிகள்.

சிகிச்சை
சிகிச்சை

ஒருவருக்கு அறிகுறிகளுடன்கூடிய காசநோய் உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவரின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். காசநோய் ஏற்பட்ட உடனேயே தொடர்ந்து 6-9 மாதங்களுக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதனை முழுவதுமாகக் குணப்படுத்த முடியும். காசநோய் உள்ள ஒருவர் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்காமல் இருந்தாலோ, சரியான முறையில் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெறாவிட்டாலோ அவரின் நுரையீரல் செல்கள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் காசநோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் நோய்த்தொற்று பரவலாம்.

தவறான முறையில் எடுக்கப்படும் ஸ்வாப் டெஸ்ட்... பிரச்னைகளும் தீர்வுகளும்!

காசநோய் Vs கொரோனா

Corona
Corona
pixabay.com

2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயைக் கட்டுப்படுத்த வேண்டி நிறைய மருத்துவ முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் செய்துவந்தன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு அவற்றில் தடை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்கு பயந்துகொண்டு காசநோய் உள்ளவர்களில் பலர் டெஸ்ட் எடுக்கவோ, தங்களின் வழக்கமான சிகிச்சையையே எடுத்துக்கொள்ளவோ மருத்துவமனைக்குச் செல்வதில்லை. இதனால் வரும் காலங்களில் காசநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோயைக் கட்டுப்படுத்துவது என்ற மத்திய அரசின் கொள்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.

Tuberculosis
Tuberculosis

காசநோய் உள்ளவர்களின் நுரையீரல் ஏற்கெனவே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று எளிதில் ஏற்படலாம். காசநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றும் ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவது மிகவும் கடினம். சிலருக்கு மரணம்கூட ஏற்படலாம். அதனால் ஏற்கெனவே காசநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.

காசநோய் உள்ளவர்களின் கவனத்துக்கு...

டெலிமெடிசின்
டெலிமெடிசின்

காசநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிகிச்சையை நிறுத்தக்கூடாது. மருத்துவரின் ஆலோசனையுடன் காசநோய்க்கான மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

கொரோனா பரவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லத் தயக்கமாக இருந்தால் டெலிமெடிசின் முறையில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

காசநோய் உள்ளவர்களுக்கு முதல் எதிரி புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும்தான். ஒருவேளை இந்தப் பழக்கங்கள் இருந்தால் உடனே கைவிடுங்கள். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

Food
Food
Pixabay

கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் அனாவசியமாக வெளியில் செல்வதைத் தவிருங்கள். ஒருவேளை வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் மாஸ்க் அணிந்து போதிய முன்னெச்சரிக்கையுடன் செல்லுங்கள்.

சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். புரதச் சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடலும் சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவற்றையும் மீறி கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு