Published:Updated:

தடுப்பூசி மரணம் தொடர்பான பிரசாந்த் பூஷன் ட்வீட்; நடவடிக்கை எடுத்த ட்விட்டர்; என்ன நடந்தது?

 பிரசாந்த் பூஷன்
பிரசாந்த் பூஷன்

மூத்த வழக்கறிஞரும் சமூகப் போராளியுமான பிரசாந்த் பூஷன் இரண்டு நாள்களுக்கு முன்னர் தன் ட்விட்டர் பதிவில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் மரணமடைந்த ஒரு பெண்ணைப் பற்றிய நாளிதழ் செய்தியை, புகைப்படமாகப் பகிர்ந்திருந்தார்.

``கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், அமெரிக்காவைவிட எண்ணிக்கையில் முந்திவிட்டது இந்தியா" என்று மத்திய அரசு சமீபத்தில் பெருமையுடன் அறிவித்தது. கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகின்றது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் மரணங்கள் குறித்து மத்திய அரசிடம் வெளிப்படையான பதில் எதுவும் கிடைப்பதில்லை.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் இரண்டு நாள்களுக்கு முன்னர் தன் ட்விட்டர் பதிவில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்த ஒரு பெண்ணைப் பற்றிய நாளிதழ் செய்தியை, புகைப்படமாகப் பகிர்ந்திருந்தார். அந்தச் செய்தியில், உயிரிழந்த பெண்ணின் கணவர், `என் மனைவியின் மரணம் குறித்து விசாரிக்க, அரசாங்கத்திலிருந்து ஒருவரும் எங்களைச் சந்திக்க வரவில்லை.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Anupam Nath
கோவிட் 19 தடுப்பூசியால் உயிரிழந்த இந்தியாவின் முதல் நபர்; அதிகாரபூர்வமாக அறிவித்த அரசு!

மரணத்தைப் பற்றி விசாரிக்க உத்தரவிட்டதாகவும் தெரியவில்லை. தடுப்பூசியை போட்டுக்கொள்ளச் சொல்லி என் மனைவியை வற்புறுத்தியதற்காக, என்னை நானே சபித்துக்கொள்கிறேன். தடுப்பூசி எங்களை வைரஸிலிருந்து காப்பாற்றும் என்று எண்ணினேன். ஆனால், அது என் மனைவியைக் கொன்றுவிட்டது' என்று தெரிவித்திருந்தார்.

பிரசாந்த் பூஷன் பகிர்ந்திருந்த அந்தச் செய்தி, டெல்லியில் உயிரிழந்த ஒரு பெண்ணைக் குறித்தது. கங்கா பிரசாத் குப்தா - சவிதா டெல்லியைச் சேர்ந்த தம்பதி. ஸ்நாக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்தார்கள். இந்தத் தம்பதிக்கு 5 மகள்கள். இந்நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து மிகவும் அச்சம் அடைந்திருந்த குப்தா தம்பதி, ஏப்ரல் 14-ம் தேதி தங்களது முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர். ஆனால், ஆரோக்கியமாக இருந்த சவிதாவுக்கு, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து, 10 நாள்களில் அவர் உயிர் இழந்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர், குப்தா, சவிதா இருவருக்குமே இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகள் இருந்துள்ளன. குப்தாவுக்கு பாதிப்பு சரியாகிவிட, சவிதாவுக்கோ தீவிரமாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சையில் இருந்தபோது அவர் உயிர் பிரிந்திருக்கிறது.

குப்தாவின் இந்த நாளிதழ் பேட்டியின் போட்டோவைப் பதிவு செய்து, ``ஆரோக்கியமான மற்றும் இளவயதினர், கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்படுவதற்கும் உயிரிழப்பதற்குமான வாய்ப்புகள் குறைவு. ஆனால், தடுப்பூசியால் அவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" எனப் பதிவிட்டிருந்தார் பிரசாந்த் பூஷன். சமூக வலைதளங்களில் பலர், பூஷனின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ட்விட்டரும் அதைத் `தவறாக வழிநடத்தக்கூடிய (misleading) பதிவு' என்று குறிப்பிட்டது.

பிரசாந்த் பூஷன்
பிரசாந்த் பூஷன்

எந்த விமர்சனங்களுக்கும் பணியாத பிரசாந்த் பூஷன், ``கோவிட் தடுப்பூசி பற்றிய என் கருத்துக்காக, சமூக வலைதளத்தில் பலராலும் நான் தாக்குதலுக்கு உள்ளானேன். இங்கே நான் பதிவிடும் இந்தப் பதிவு, தடுப்பூசி குறித்த என் சந்தேகங்களையும், அதற்கான காரணங்களையும் விளக்கும். முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத மற்றும் எதிர்விளைவுகளைக் கொண்டதாகத் தடுப்பூசி இருக்கும்போது, அது குறித்த எதிர் கருத்துகளை முடக்கும் செயல்பாடுகள் எனக்கு அதிர்ச்சி தருகின்றன" என்று கூறி, இரண்டு பக்கங்களைக் கொண்ட நீண்ட கட்டுரையை இணைத்திருந்தார்.

மேலும் பிராசாந்த் பூஷன், தான் அறிவியலுக்கோ, தடுப்பூசிக்கோ எதிரானவன் இல்லை என்றும், ஆனால் அரசியல் மற்றும் வியாபார நோக்கங்களால் அவை இழுத்துச் செல்லப்படுவதை தான் அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பல அறிவியலாளர்களும், தடுப்பூசியின் எதிர் விளைவுகள் குறித்துப் பதிவுகள் எதுவும் செய்யப்படுவதில்லை என்று குறிப்பிடுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், பிரசாந்த் பூஷனின் பதிவு, தடுப்பூசி மறுப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்துவதாக சோஷியல் மீடியாவில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்
கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு: 6 வாரங்களுக்குப் பிறகு நல்ல செய்தி தருமா மத்திய அரசு?

நடிகர் சித்தார்த், ``இந்தக் கருத்துடன் தீவிரமாக முரண்படுகிறேன். இதை ட்விட்டர், தவறாக வழிநடத்தக்கூடியதாகக் (misleading) குறிப்பிட வேண்டும். தடுப்பூசியை மக்கள் விரைவாகச் செலுத்த வேண்டிய இந்தக் காலகட்டத்தில், பூஷனின் இந்தப் பதிவு அதன் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.

தடுப்பூசி மரணங்கள் குறித்து மத்திய அரசு எந்த மருத்துவ அறிக்கையும் வெளியிடுவதில்லை; இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. தடுப்பூசி குறித்த மத்திய அரசின் வெளிப்படைத்தன்மை தொடர்ந்து கேள்விக்கு உட்பட்டு வருவது, மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

- ஹரிணி ஆனந்தராஜன்

அடுத்த கட்டுரைக்கு