`இந்த மூன்றும்கூட கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்!' - சொல்லும் பிரிட்டனின் புதிய ஆய்வு

காய்ச்சல், இடைவிடாத இருமல், வாசனை மற்றும் சுவை உணர்வுகள் மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் மட்டுமல்லாமல் தற்போது புதிதாக குளிர், பசியின்மை, தசைவலி போன்றவற்றையும் காட்டக்கூடும் என்று ஆய்வில் கண்டுபிடிப்பு.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருக்கும் இம்பீரியல் கல்லூரி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் பிரதான அச்சமாக உள்ள கொரோனா பெருந்தொற்று முன்பு கூறியுள்ள பல அறிகுறிகளையும் தாண்டி வேறு சில அறிகுறிகளான குளிர், பசியின்மை, தசைவலி போன்றவற்றையும் காட்டக்கூடும் என்பதே அது.
ஜூன் 2020 முதல் ஜனவரி 2021 வரையில் சுமார் ஒரு மில்லியன் மனிதர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவு, இதற்கு முன் நம்மிடம் கூறப்பட்டு வந்த சில அறிகுறிகளையும் கடந்து மேலே கூறப்பட்டவையும் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

ஆனால், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் இதற்கு முன் கொடுத்திருந்த நிச்சய அறிகுறிகள் காய்ச்சல், இடைவிடாத இருமல்,வாசனை மற்றும் சுவை உணர்வுகள் மரத்துப்போவது போன்றவை மட்டுமே. இந்தத் தகவலை Xinhua அறிவிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழுமமான REACT (Real-time Assessment of Community Transmission) சில சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறது. இந்த அறிகுறிகளில் வயதை ஒட்டிய மாற்றங்கள் பலரிடம் காணப்பாட்டாலும், அனைவரிடமும் இருந்த ஒரே பொதுவான அறிகுறி குளிர்ஜுரம்.
தவிர, இந்த அறிகுறிகளின் எண்ணிக்கை ஒருவரிடம் அதிகம் காணப்பட்டால் அவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால், இவர்கள் ஆய்வு மேற்கொண்டவர்களிடம், 60 சதவிகிதம் பேர் முன் கூறப்பட்டிருந்த எந்த விதமான அறிகுறிகளையும் ஆராய்ச்சி நடத்திய வாரத்தில் காட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.

இங்கிலாந்து நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 3,996,833 இது வியாழன் காலை எடுக்கப்பட்ட எண்ணிக்கை. இதில் 115,068 இறப்புகள். கொரோனா பாதிப்பில் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து. முதல் மூன்று இடங்கள் முறையே அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில்.
இதுவரையில் இங்கிலாந்து நாட்டில் 12.6 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- லதா ரகுநாதன்