``அல்சர் என்றால் நமக்கெல்லாம் சட்டென நினைவுக்கு வருவது வயிற்றுப்புண்தான். ஆனால், அல்சர் எனும் புண் உடலின் எந்த பாகத்திலும் வரலாம். கருவிழிகளைக்கூட பாதிக்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி.
கருவிழி அல்சர் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள் என எல்லாம் விளக்குகிறார் அவர்.
கார்னியல் அல்சர் (Corneal Ulcer) என்ற வார்த்தை பலருக்கும் புதிதாக இருக்கலாம். கண்களில் கருவிழிகள் இருப்பதை அறிவோம். கண்களின் டிரான்ஸ்பரன்ட் லேயரான அவற்றின் வழியாகத்தான் ஒளிக்கீற்றுகள் கண்களுக்குள் போகும். அந்தக் கருவிழிப் பகுதியிலும் அல்சர் வரலாம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அறிகுறிகள்
கண்கள் சிவந்துபோவது
கண்களில் தீவிர வலி
கண்களில் ஏதோ இருப்பது போன்ற உறுத்தல்
கண்ணீர் வழிவது
கண்களிலிருந்து சீழ் போன்ற கெட்டியான கசிவு
மங்கலான பார்வை
வெளிச்சத்தைப் பார்க்கும்போது வலி
இமைகளில் வீக்கம்
கருவிழியைச் சுற்றி வட்டமான, வெள்ளையான தோற்றம்
காரணங்கள்
பெரும்பாலும் தொற்றுதான் இதற்கான முக்கிய காரணம். பாக்டீரியா தொற்று, வைரஸ் தொற்று, பூஞ்சைத் தொற்று மற்றும் பாராசைட் தொற்று என எதுவும் கருவிழி அல்சருக்கு காரணமாகலாம்.
யாருக்கெல்லாம் வரும்?
சின்னக் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு அல்லது தட்டம்மை பாதிப்பின் காரணமாகக் கருவிழி அல்சர் வரலாம். பிறந்த குழந்தைக்கு கண்களில் வரும் கன்ஜங்டிவைட்டிஸ் தொற்று அதாவது ஆப்தல்மியா நியோநோட்டோரம் (Ophthalmia neonatorum) பாதிப்பு ஏற்பட்டாலும் கருவிழியில் அல்சர் வரலாம். அதைக் கவனிக்காமல் விட்டால் தீவிரமாகி, கருவிழியே பாதிக்கப்படும் நிலையான கார்னியல் பெர்ஃபோரஷன் எனும் பாதிப்பில் கொண்டுபோய் விடலாம்.
விவசாய மற்றும் தோட்ட வேலைகள் செய்வோருக்கு, அவர்களை அறியாமல் கண்களில் முள் போன்ற ஏதேனும் குத்துவதால் கருவிழி அல்சர் வரலாம்.
லென்ஸ் உபயோகிப்போர் கவனத்துக்கு...
நீண்ட நேரம் கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு கருவிழி அல்சர் வரலாம். குறிப்பாக, இரவில்கூட லென்ஸ் பயன்படுத்துவோர் லென்ஸை அதற்கான பிரத்யேக திரவத்தில் சுத்தப்படுத்தியே பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் அதனுள் கிருமித் தொற்று படிந்து கருவிழி அல்சருக்கு காரணமாகலாம். பாதிப்பு தீவிரமானால் அதைக் குணப்படுத்துவது மிகவும் சிரமம்.

எப்படி உறுதிசெய்வார்கள்?
கண்களில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் கண்களில் சொட்டு மருந்து விட்டு ஸ்லிட் லேம்ப் எனும் பிரத்யே கருவியின் மூலம் டெஸ்ட் செய்வார்கள். தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டால் அடுத்தகட்ட சோதனைக்குப் பரிந்துரைப்பார்கள்.
சிகிச்சைகள்
பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் அல்லது ஆன்டிஃபங்கல் கண் சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். கண்களின் வலிக்கு வலி நிவாரண மருந்துகள் பரிந்துரைப்பார்.
மருந்துகளுக்குக் கட்டுப்படாத அளவுக்கு பாதிப்பு ரொம்பவும் தீவிரமாகியிருந்தால் கருவிழி மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.
தடுக்க முடியுமா?
கண்களில் சின்ன பிரச்னை என்றாலும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகவும். சின்ன காயம்கூட கருவிழி அல்சருக்கு காரணமாகலாம்.
கான்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கும்போது அதிகபட்ச சுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
கைகளை நன்றாகக் கழுவிவிட்டே லென்ஸை எடுக்க வேண்டும். எச்சில் தொட்டு போடக்கூடாது. அதற்கான பிரத்யேக திரவம் கொண்டே சுத்தப்படுத்த வேண்டும்.

லென்ஸ் அணிந்தபடி தூங்கக் கூடாது.
இரவு முழுவதும் லென்ஸை அதற்கான திரவத்தில் ஊற வைக்க வேண்டும்.
கண்களை உறுத்தினால் லென்ஸை எடுத்துவிட வேண்டும்.
லென்ஸ் வைக்கும் கேஸை தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை லென்ஸை மாற்ற வேண்டும்.
- பார்ப்போம்
- ராஜலட்சுமி
பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.