Published:Updated:

பேசாக் கதைகள் - 9 | பலமுறை குளிக்கிறேன், கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு..!

கொரோனா பயம் | பேசாக் கதைகள்
கொரோனா பயம் | பேசாக் கதைகள்

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

"இந்தப் பிரச்னை எனக்கு மட்டும்தான் இருக்கா... இல்லே எல்லாருக்கும் இருக்குமான்னு எனக்குத் தெரியாது. ஆனா, என்னால நிம்மதியா தூங்க முடியலே. என்னோட பதினாறு வயசுல முதல்முறையா எனக்கு வலிப்பு வந்துச்சு. வீட்டுல ஒரு விசேஷம்... நிறைய நண்பர்களை இன்வைட் பண்ணியிருந்தேன். அவங்களை வரவேற்கணும்... உபசரிக்கணுங்கிற பரபரப்புல ராத்திரி சரியா தூங்கலே... காலையில மயங்கி விழுந்துட்டேன். வலிப்பும் வந்துச்சுன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுக்கப்புறம் பலமுறை, தூக்கம் விழிச்சு, பரபரப்பா இருந்த நேரத்திலயெல்லாம் வலிப்பு வந்திருக்கு. திருமணத்துக்குப் பிறகு முறையா சிகிச்சை எடுத்துக்கிட்டேன். கடந்த பத்து வருஷமா அந்தப் பிரச்னை இல்லை. ஆனா, இப்போ வேறொரு பிரச்னையில தவிக்கிறேன். யாராவது என் பக்கத்துல நின்னு எதைப்பத்தி பேசினாலும் அந்த நோய் நமக்கிருக்குமோன்னு ஒரு எண்ணம் வருது. இப்போ எனக்குத் திருமணமாகி ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. அதனால என்னோட இந்தப் பிரச்னை என் குடும்பத்தையும் பாதிக்குது.

Stressful Man
Stressful Man
Representational Image

ஒருமுறை, 'மூளையில கட்டியிருந்தா வலிப்பு வரும்'ன்னு ஒரு புத்தகத்துல படிச்சேன். மூளையில கட்டி வந்தா பின்னந்தலையில வலி இருக்கும்ன்னு போட்டிருந்துச்சு. அன்னையிலருந்து எனக்கு பின்னந்தலையில வலி வந்தமாதிரி இருந்துச்சு. ராத்திரி தூங்க முடியாது. சாப்பிட முடியாது. இன்னும் கொஞ்சக்காலம்தான் வாழப்போறோம்ன்னு எண்ணம் வந்திடுச்சு. வேலைக்குப் போகாம மரண பயத்துல வீட்டுலயே இருக்க ஆரம்பிச்சேன். ஆபீஸ்லயெல்லாம் பெரிய பிரச்னையாயிருச்சு. அதுக்கப்புறம் என் நண்பர் என்னை ஒரு நரம்பியல் நிபுணர்கிட்ட அழைச்சுட்டுப் போனார். அவர் எல்லா சோதனைகளும் பண்ணிப் பாத்துட்டு கொஞ்சம் மாத்திரைகளும் கவுன்சலிங்கும் கொடுத்தார். அதேமாதிரி புற்றுநோய் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிச்சுட்டு அதில சொல்லப்படுற அறிகுறிகள் எல்லாம் எனக்கு இருக்கிற மாதிரியே இருந்துச்சு. பலநாள் நிம்மதி இழந்து தவிச்சேன். புற்றுநோய் இருக்கவங்க நடக்கும்போது கால் இடறும்னு படிச்சதுல இருந்து நடந்தா கால் இடறுற மாதிரியே இருந்துச்சு.

நாளாக நாளாக இது அதிகமாகிட்டே இருக்கு. குறிப்பா, இப்போ கொரோனா வந்தபிறகு ரொம்பவே மோசமாயிருக்கு. லேசா சளி பிடிச்சாலே கொரோனா வந்திருச்சுன்னு பயமா இருக்கு. வீட்டுல இருக்கிறவங்களையும் டார்ச்சர் பண்றேன். உனக்கு ஒண்ணும் இல்லேன்னு யாரும் சொல்ல மாட்டாங்களான்னு மனசு எதிர்பார்க்குது. அப்படிச் சொன்னாலும் நம்மை சமாதானப்படுத்துறதுக்காகச் சொன்னாங்கன்னு தோணுது. ஒருநாளைக்கு நாலைஞ்சு முறை குளிக்கிறது... பத்திருபது முறை கைகழுவுறது... சானிடைசர் பாட்டில்களை வீட்டுல வாங்கிச் குவிக்கிறதுன்னு என் இயல்பே மாறிடுச்சு சார்... வீட்டுலயும் பிள்ளைகளையும் மனைவியையும் விழிப்புணர்வா இருக்கணுங்கிற பேர்ல ரொம்பவே கொடுமைப்படுத்துறேன்... கொரோனா வந்து என் உயிர் போயிட்டாக்கூட பிரச்னையிருக்காது போல... எல்லாரும் என்னை பைத்தியம் மாதிரி பாக்குறாங்க... என் பிரச்னைக்கு என்னசார் தீர்வு?"

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ரமேஷ்பாபு இப்படியொரு மெயிலை அனுப்பியிருக்கார்.

ரமேஷ், உங்களுக்கு மட்டுமில்லே... மிகப்பெரிய ஆரோக்கிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிற இந்தத் தருணத்தில எல்லாருக்குமே இப்படியான அச்சமும் பதற்றமும் இருக்கத்தான் செய்யுது. நீங்க கொஞ்சம் அதிகம் யோசிக்கிறீங்க.

Stress and fear
Stress and fear
Representational Image

சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும். அதனால உடல்மேல அக்கறை இருக்கிறது நல்லதுதான். ஆனா, அது அதிகமாகும்போது இப்படியான பதற்றம் வரும். நம் உடல் இருக்கே... அதுமாதிரி சீரா சிறப்பா இயங்குற எந்திரம் இதுவரைக்கும் உலகத்துல கண்டறியப்படவேயில்லை. கையளவு இருக்கிற நம் நுரையீரல்ல மட்டும் 30 லட்சம் ரத்தநாளங்கள் இருக்கு. நம்ம சிறுநீரகம் ஒரு நிமிடத்துக்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுது. நம் கண்கள்ல இருக்கிற தசை ஒருநாளைக்கு பத்து லட்சம் முறை அசையுது. நாம ஒரு அடி எடுத்துவைக்க 200 தசைகள் நமக்கு உதவி செய்யுது. நம்ம உடல் ஆச்சர்யத்தோட உச்சம் ரமேஷ். எதுவுமே நம் அனுமதியைக் கேட்டு செய்றதில்லை. இயல்பா இயங்குது. நாம அதையெல்லாம் சரியா பராமரிக்கிறவரைக்கும் எந்தப் பிரச்னையும் வரவாய்ப்பில்லை.

இவ்வளவு பெரிய தொழிற்சாலையை உருவாக்கின இயற்கை, அது சீர்கெட்டுப்போனா சரி செஞ்சுக்கிற திறனையும் நம் உடலுக்குக் கொடுத்திருக்கு. சத்தான உணவைச் சாப்பிட்டு பதற்றமில்லாம, மகிழ்ச்சியா, உற்சாகமா இருந்தா உடம்பு தானே தன்னோட பிரச்னைகளை சீரமைச்சுக்கும்.

உங்களிருக்கிறது மனப்பதற்றம் ரமேஷ். உங்களுக்கு மட்டுமில்லை... அதிவேகத்துல கொரோனா பரவிக்கிட்டிருக்கிற இந்தக் காலக்கட்டத்துல எல்லாருக்கும் இருக்கிற பதற்றம்தான் இது. உலகமே அடுத்து என்னன்னு விடை தெரியாம தவிச்சுக்கிட்டிருக்கிற நேரம் இது. எங்கிருந்தோ கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ், வந்து உலகத்தையே ஆட்டிப்படைச்சுக்கிட்டிருக்கு. தீர்வு என்னன்னு தெரியாம எதையாவது செஞ்சு தப்பிக்க முடியுமான்னு மனிதஇனம் தவிச்சுக்கிட்டிருக்கு.

நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, 'சில மாதங்கள் நீங்க வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியிருக்கும்'ன்னு சொன்னா நம்பியிருப்போமா ரமேஷ்... நடந்துச்சு... கொரோனா நம்மை வீட்டுக்குள்ள முடக்கிப்போட்டு வச்சிருந்துச்சு. பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு மனிதர்களைக்கூட முகம் பார்த்துப் பேச பயந்தோம். ஆனா ரமேஷ், பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிற மனித இனம் இதுமாதிரி எத்தனை பேரிடர்களைக் கடந்து வந்திருக்கும். அம்மை, பிளேக்ன்னு கொத்துக் கொத்தா மனிதர்களைக் கொன்னு குவிச்ச எத்தனை நோய்களை நம் முன்னோர்கள் பாத்திருக்காங்க. இன்னைக்காவது, ஒரு வருஷத்திலயே தடுப்பூசியைக் கண்டுபிடிச்சு மக்கள் கையில தந்துட்டாங்க மருத்துவர்கள். அந்தக் காலத்துலயெல்லாம் எங்கேயிருந்துது தடுப்பூசி. பல வருஷங்கள் போராடி, நிறைய உயிர்களைப் பலிகொடுத்துத்தானே தடுப்பூசியை கண்டுபிடிச்சோம்.

Stress and Therapy
Stress and Therapy
Representational Image

மருத்துவத்துல நிறைய முன்னேறிட்டோம் ரமேஷ். ராத்திரி பகல் பார்க்காம மருத்துவர்களும், செவிலியர்களும் தூய்மைப்பணியாளர்களும் மருத்துவத்துறை ஊழியர்களும் நமக்காக போராடிக்கிட்டிருக்காங்க. கொரோனா மட்டுமில்லே... எய்ட்ஸ் மாதிரி கொடூர நோய்களையெல்லாம்கூட கட்டுப்படுத்த, தடுக்க மருந்துகள் கண்டுபிடிச்சுட்டோம்.

எந்த நோயாவும் இருக்கட்டும்... வந்தா என்ன செய்வோம்... குணப்படுத்தவே முடியாதுன்னு நம்பின கேன்சருக்குக்கூட அதிநவீன சிகிச்சைகள் வந்திருச்சு... எதிர்கொள்வோம்... ஆரோக்கியமா இருங்க. சத்தான உணவா சாப்பிடுங்க... மது, புகைன்னு உடம்பைப் பாதிக்கிற விஷயங்களைக் கைவிட்டு உற்சாகமா இருங்க. எந்த நோயும் வராது. மனசை லேசா வச்சுக்கோங்க.

சீக்கிரமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கோங்க. குடும்பத்தில இருக்கிற பெரியவங்களையும் கட்டாயம் போடச் சொல்லுங்க.

பேசாக் கதைகள் - 8 | நான் ஒரு பைசெக்சுவல்... ஹெச்ஐவி பேஷன்ட்... திருமணம் செய்துகொள்ளலாமா?

நம்ம வாழ்க்கை முறைங்கிறது ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கிறது. கொஞ்சம் விழிப்புணர்வோட இருந்தா, நிச்சயம் கொரோனா ஒரு பிரச்னையே இல்லை. தேவையில்லாம வெளியில போறதைத் தவிர்க்கலாம். ஒருவேளை, அலுவலகம் போகவேண்டிய தேவையிருந்தா, கட்டாயம் முகக்கவசம் அணிங்க. மற்றவர்கள்கிட்ட இருந்து குறைந்தது ஆறு அடி இடைவெளிவிட்டு இருங்க. அவ்வப்போது கைகழுவுறது, சானிடைசர் பயன்படுத்துறதுன்னு விழிப்புணர்வோட இருந்தா தொற்றிலிருந்து எளிதா தப்பிக்கலாம். ஒருவேளை, தொற்று வந்துட்டா... நோய் எதிர்ப்பு சக்தியோட ஆரோக்கியமா இருக்கவங்க அதையும் எளிதா கடக்கலாம் ரமேஷ். அறிகுறிகள் தெரிஞ்சா உடனடியாக சோதனை செஞ்சு மருத்துவ ஆலோசனை எடுத்துக்கலாம். உலகத்தோட ஒப்பிடும்போது தமிழகத்துல அவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க.

Corona Vaccines
Corona Vaccines

ஒருவேளை இந்த வார்த்தைகள் உங்களைச் சமாதானப்படுத்தலேன்னா, ஒரு மனநல மருத்துவரை உடனடியாப் பாருங்க ரமேஷ். பொதுவா, இந்தமாதிரி தீவிர பதற்றமான நிலையில இருக்கவங்க மத்தவங்க சொல்ற சமாதானத்தை ஏத்துக்க மாட்டாங்க. தகுதி வாய்ந்த மருத்துவரே சோதிச்சு, 'ஒரு பிரச்னையும் இல்லை'ன்னு சொன்னாக்கூட, 'டாக்டர் சரியா கவனிக்காமச் சொல்லியிருப்பாரோ'ன்னு சந்தேகம் வரும். அப்படியான மனநிலை உங்களுக்கிருந்தா, நீங்க கண்டிப்பா மனநல மருத்துவரைப் பார்க்கனும். ஏன் பாக்கணுங்கிறதைப் பத்தி மனநல மருத்துவ நிபுணர் சிவபாலன் இளங்கோவன் விரிவாச் சொல்றார்.

"ரமேஷோட பிரச்னைகளைக் கேட்கும்போது, அவர் மனப்பதற்ற நிலையில் இருக்கார்ன்னு புரிஞ்சுக்க முடியாது. இதை Anxiety disorder-ன்னு சொல்வோம். இப்படி மனம் பதற்றமா இருந்தா, நமது கவனம் முழுக்க உடல்மேல திரும்பிடும். சாதாரணமா நம்ம உடல்ல சின்ன சின்ன உபாதைகள் இருக்கும். வலி இருக்கும். சின்ன சின்ன அசௌகர்யங்கள் இருக்கும். நம் உடலை நாம கவனிக்கத் தொடங்கும்போது அதையெல்லாம் பெரிய அளவுல உணர ஆரம்பிப்போம். பயம் அதிகரிக்கும். ஏற்கெனவே மனப் பதற்றம் வேறு இருக்கு. இந்த மனநிலையில ஏதாவது நோயைப் பற்றிப் படிக்கும்போதோ அல்லது யாருக்கேனும் நோய் இருப்பதைக் கேள்விப்பட்டாலோ அதேமாதிரி நோய் நமக்கு வந்திருமோன்னு தோணும். இதெல்லாம் மனப்பதற்றத்தால ஏற்படக்கூடிய உளவியல் மாற்றங்கள்.

ரமேஷ்க்கு மட்டுமல்ல... இந்தப்பிரச்னை நிறைய பேருக்கு இருக்கு. இவர்கள் மருத்துவர்களிடம் போவாங்க. அவர் எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துட்டு, 'உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்க நார்மலாதான் இருக்கீங்க'ன்னு சொல்வார். ஆனா இவங்களுக்கு நம்பிக்கை வராது. 'டாக்டர் சரியா பார்க்காம சொல்றார். ஏதோ பெரிய பிரச்னை இருக்கு. அதனாலதான் இவ்வளவு உபாதைகள் இருக்கு'ன்னு நினைப்பாங்க. திரும்பவும் இன்னொரு டாக்டரைப் பார்ப்பாங்க. அவரும், 'உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை'ம்பாரு. அதையும் முழுமையா ஏத்துக்க மாட்டாங்க.

இயல்பான வாழ்க்கையில செய்ய வேண்டிய எதிலும் கவனம் போகாது. வேலையில கவனம் போகாது. வீட்டுல சந்தோஷமா இருக்கமாட்டாங்க. ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலையுற நிலைக்கு வந்திடுவாங்க.

டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்

இந்த மனப்பதற்றம் கடந்த நான்கைந்து மாத ஊரடங்கு நேரத்துல அதிகமானதை நாங்க உணர்ந்திருக்கோம். இதுக்கு வீட்டுக்குள்ளயே இருந்தது ஒரு காரணமா இருக்கலாம். தொடர்ச்சியா கொரோனா பற்றின பயமும் வந்திருக்கு. 'நமக்கு வந்திருக்கோ', 'வந்துட்டு போயிருக்குமோ'ன்னு எண்ணம் வந்து அதிகமா கைகளைக் கழுவுறது, வெளியில போக பயம்ன்னு அவங்க இயல்பு மாறிடும். தேவைக்கு அதிகமா பயப்படுறோம்ன்னு தெரியும். ஆனா, அதை கண்ட்ரோல் பண்ண முடியாது. இதெல்லாம் Anxiety disorder-ன் அறிகுறிகள்.

ரமேஷ்க்கு சின்ன வயசுல பிட்ஸ் வந்திருக்கு. மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கிட்டார். குணமாயிட்டார். ஆனா பதற்றம் அவரோட முழு வாழ்க்கையையும் கெடுத்துக்கிட்டிருக்கு. அவர் சொல்றதை வச்சுப்பாக்கும்போது இது தீவிர நிலை. ஆனா தற்காலிக நிலைதான். முழுமையா சரி செய்யக்கூடிய மனநிலைதான். உரிய சிகிச்சை எடுத்துக்கிட்டா இயல்பா மாறிடமுடியும்..." என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.

இதுவும் கடந்துபோகும் ரமேஷ். முதல்ல பதற்றத்துல இருந்து வெளியே வாங்க... எல்லாத்தையும் மறந்துட்டு குடும்பத்தோட நேரம் செலவு செய்ங்க. உங்க மனைவிக்கிட்ட மனம் திறந்து பேசுங்க. உங்க உடல்ல இருந்து, வேறு பிடிச்ச விஷயங்கள் மேல கவனத்தை செலுத்துங்க. வாழ்த்துகள் ரமேஷ்!

- பேசுவோம்...

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!

அடுத்த கட்டுரைக்கு