Published:Updated:

HIV குணமான முதல் பெண்; மருத்துவத்தின் புதிய நம்பிக்கையா?

Representational Image

அமெரிக்க பெண்ணின் HIV-யைக் குணப்படுத்திய இந்தச் சிகிச்சை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

HIV குணமான முதல் பெண்; மருத்துவத்தின் புதிய நம்பிக்கையா?

அமெரிக்க பெண்ணின் HIV-யைக் குணப்படுத்திய இந்தச் சிகிச்சை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

Published:Updated:
Representational Image
Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

HIV-யால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, உலக அளவில் முதல்முறையாக சிகிச்சை மூலம் குணப்படுத்தியிருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். ஸ்டெம்செல் சிகிச்சையின் அடுத்தகட்ட பாய்ச்சலாகவும், HIV ஆராய்ச்சியில் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது இந்தச் செய்தி.

எப்படி நடந்தது இது?

நியூயார்க்கைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு 2013-ம் ஆண்டு HIV தொற்று உறுதியானது. தொடர்ந்து 2017-ம் ஆண்டு ரத்தப் புற்றுநோயும் (லூக்கேமியா) உறுதியானது. இரட்டை பாதிப்புகளால் துவண்டிருந்த அந்தப் பெண்ணை ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடிவானது. ஆனால், அங்கே ஒரு சிக்கல். என்ன?

  • ஸ்டெம்செல் சிகிச்சையில் பொதுவாக, நோயாளியின் மரபணுவோடு முழுமையாக ஒத்துப்போகும் கொடையாளியின் செல்களை எடுத்து, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை செய்வார்கள்.

  • இதற்கு முன்பு இதுவரை 2 பேர் மேற்கண்ட ஸ்டெம்செல் சிகிச்சைமூலம், HIV-யிலிருந்து மீண்டிருக்கின்றனர். இருவருமே ஆண்கள். பெர்லினைச் சேர்ந்த டிமோத்தி என்பவர் 2011-லும், லண்டனைச் சேர்ந்த ஆடம்ஸ் என்பவர் 2020-லும் இதேபோல HIV-யிலிருந்து குணமானதாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்குமே, பொருத்தமான கொடையாளிகள் கிடைத்திருந்தனர்.

  • ஆனால், இந்தப் பெண்ணுக்கு அப்படியொரு கொடையாளி கிடைப்பது கடினமாக இருந்தது. இதைத் தீர்க்க, விஞ்ஞானிகள் மாற்றுமுறையைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி, சிகிச்சையில் முதலில் குழந்தையின் தொப்புள்கொடியிலிருந்து கிடைக்கும் புதிய ஸ்டெம்செல்களைப் பயன்படுத்துவது எனவும், பின்னர் அந்தப் பெண்ணின் உறவினரிடமிருந்து (ஓரளவு பொருந்திப்போகும்) எடுக்கப்பட்ட ஸ்டெம்செல்லைப் பயன்படுத்துவது எனவும் முடிவெடுத்தனர். இதுவரைக்கும் AIDS & Cancer நோயாளிகளிடம் பயன்படுத்தப்படாத முறை இது. 2017-ம் ஆண்டு சிகிச்சை முடிந்தது.

ஆபரேஷன் சக்சஸா?

இந்த சிகிச்சை முடிந்து 3 வருடங்கள் கழித்து, 2020-ல் வழக்கமாக AIDS-க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைக் கைவிட்டார் அந்தப் பெண். அதன்பிறகு ஓராண்டாகியும் உடலில் HIV வைரஸ் அதிகரிக்கவில்லை. ஆச்சர்யம் என்னவென்றால், அதன்பிறகு அவரது உடலில் ஒரு HIV வைரஸ்கூட இல்லை.

  • இதையடுத்துதான், ``அவர் முழுமையாகக் குணமாகிவிட்டார். இருப்பினும் எதிர்காலத்தில் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படுமா என மட்டும் பார்க்க வேண்டும்” எனக் கடந்த வாரம் அறிவித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

அப்படியெனில் HIV-க்கு தீர்வு கிடைத்துவிட்டதா?

இல்லை! இப்படிச் சொல்ல பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை சில…

  • இந்த ஸ்டெம்செல் சிகிச்சையானது அதிக ரிஸ்க் கொண்டது; எனவேதான், உயிரிழப்பைத் தவிர்க்க வேறு வழியே இல்லாத நபர்களுக்கு மட்டும் (உதாரணம்: அதிக புற்றுநோய் பாதிப்பு கொண்டவர்கள்) பரிந்துரைக்கப்படுகிறது.

  • இது மிக மிக அதிக செலவு பிடிக்கும் சிகிச்சையும் கூட. எனவே HIV-யால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் 3.8 கோடி பேரையும் இதனால் குணப்படுத்த முடியாது. அதுவும் HIV-யால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவில், இந்தச் சிகிச்சைகள் எந்தவொரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது.

  • இந்த சிகிச்சை HIV-யை மையப்படுத்தியதே அல்ல. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, AIDS நோயாளிகளுக்கான சிகிச்சை மட்டுமே. இதுவரை மீண்ட 3 பேருமே புற்றுநோய் சிகிச்சையில்தான், HIV-யிலிருந்தும் குணமாகியிருக் கின்றனர். எனவே, இதையே அனைத்து HIV நோயாளிகளிடமும் பயன்படுத்த முடியாது.

அப்படியெனில், இதில் கொண்டாட எதுவுமே இல்லையா?

கொண்டாடவும் சில காரணங்கள் உண்டு. அவற்றில் சில…

  • HIV-க்கு எதிரான ஸ்டெம்செல் சிகிச்சையில் CCR5 delta 32 ஜீன் (HIV பாதிப்பைத் தடுக்கும் தன்மையுள்ளது இது) கொண்ட மற்றும் நோயாளியின் மரபணுவோடு முழுமையாக ஒத்துப்போகும் கொடையாளிகள் மிக முக்கியம். ஆனால், இந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட கொடையாளிகள் இல்லாமலே சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

  • இதற்கு முன்பு ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் HIV-யிலிருந்து குணமான இரண்டுபேருக்குமே, சிகிச்சைக்குப் பின் கடுமையான பக்கவிளைவுகள் இருந்திருக்கின்றன. உடல்நலமும் குன்றியிருக்கிறது. ஸ்டெம்செல் சிகிச்சையில் இருக்கும் முக்கியமான பிரச்னை இது. ஆனால், மாற்றுமுறை ஸ்டெம்செல் சிகிச்சை பெற்ற இந்தப் பெண்ணுக்கு அப்படி எதுவுமே நடக்கவில்லை. சிகிச்சை முடிந்த 17-வது நாளே வீடு திரும்பிவிட்டார். இப்போது வரை ஆரோக்கியமாக இருக்கிறார். இந்த இரண்டும் விஞ்ஞானிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. ஸ்டெம்செல் சிகிச்சையில் இது புதிய மைல்கல் என்றே பார்க்கப்படுகிறது.

  • HIV-யானது ஆண் / பெண் இருபாலினரிடையேயும் ஒரே மாதிரி பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உலக அளவில் HIV நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்தான். இருப்பினும், HIV தொடர்பான ஆராய்ச்சிகளில் பெண் நோயாளிகளை ஈடுபடுத்தும் விகிதம் மிகக்குறைவாகவே (11% மட்டுமே) இருக்கிறது. இப்படியொரு சூழலில் நிகழ்ந்திருக்கும் இந்தப் பெண்ணின் வெற்றி, HIV ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு புதிய தரவுகளைக் கொடுக்கவிருக்கிறது.

சரி, HIV-க்கு எப்போதுதான் மருந்து வரும்?

HIV-யை முழுமையாக உடலிலிருந்து விரட்ட அல்லது முன்கூட்டியே தடுக்க இதுவரைக்கும் எந்தத் தடுப்பு மருந்தும் இல்லை. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த ART (Anti-retroviral) மருந்துகள் உள்ளன. இவை வைரஸை வாழ்நால் முழுக்க கட்டுக்குள் வைத்திருக்கும். இவற்றின்மூலம் AIDS நோயாளி ஒருவர், சராசரி நபர் அளவுக்கான ஆயுட்காலத்தோடு வாழமுடியும். தற்போது இதுதான் HIV நோயாளிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

  • முழுமையாக HIV-க்கு மருந்து கண்டுபிடிப்பதில் இருக்கும் சவாலே, அந்த வைரஸின் தன்மைதான். கொரோனா போல மொத்தமாக ஒரே அடியாக, ஆன்டிபாடிகளுடன் போராடி அழியும் வைரஸ் அல்ல இது. பல நாள்கள் எந்தச் சத்தமும் இன்றி, மறைந்துகொண்டு இருந்து பின்னர் திருப்பித் தாக்கும் தன்மை கொண்டது.

  • இதனால்தான், ART மருந்துகளால் ஒரேயடியாக HIV செல்களை உடலிலிருந்து வெளியேற்ற முடிவதில்லை.

இந்த `மறைந்திருக்கும் தாக்கும் மர்மத்துக்கு’ புதிய ஸ்டெம்செல் சிகிச்சை விடையளித்தால், நிச்சயம் HIV-க்கும் விரைவில் `குட்பை’ சொல்லலாம்.

அதுவரைக்கும், HIV-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ART சிகிச்சைகள் கிடைக்கச் செய்வதும், மக்களிடையே தடுப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்தான் உலக நாடுகளின் முக்கிய பணி!

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!