Published:Updated:

``30 வயதிலிருந்தே இதயத்தை கண்காணிக்க வேண்டும்!''- இளவயது மாரடைப்பைத் தவிர்க்க மருத்துவ ஆலோசனைகள்

மொபைல், டிவி என கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்தும் நேரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் தூங்காமல் கேட்ஜெட்டுகளில் கவனத்தைச் செலுத்துவது அதிகரித்துள்ளது.

மாரடைப்பு
மாரடைப்பு ( Pixabay )

ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு மருத்துவ உலகத்தை மட்டுமல்ல சாமானியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நெஞ்சு வலிப்பதாகக் கூறி 14 வயது சிறுமி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்து பார்த்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி பார்ப்பதற்கு ஒல்லியாகவும், அந்த வயதுக்கே உரிய துறுதுறுப்புடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார். அப்படியிருக்கும்போது இந்தச் சிறிய வயதில் மாரடைப்பு ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

heart attack
heart attack

இதுபோன்ற இளவயது மாரடைப்புகள் அதிகரிப்பதாகவும் அதற்கு வாழ்வியல்முறை மாற்றங்கள் மிகப்பெரிய பங்காற்றுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இளவயதினரிடையே அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதயநோய் மருத்துவர் பி.ஜெயபாண்டியனிடம் பேசினோம்.

"14 வயது சிறுமி நிகழ்வைப் பொறுத்தவரை பிறவிக் குறைபாடாக இருக்கவும் வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால், இளவயதில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதையும் மறுக்க முடியாது. மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களான பிறவியிலேயே குறைபாடு, மரபணு ரீதியான காரணங்கள் இவை இரண்டையும் நிர்வகிப்பது என்பது ஒரு நபரின் கையில் இல்லை. ஆனால், வாழ்க்கைமுறை மாற்றம் என்பது நமது கையில் உள்ளது. ஒரு குழந்தை பிறந்த இரண்டாவது நாளிலிருந்து அதன் ரத்தக்குழாய்கள் எல்லாம் நச்சுப் பொருள்களுக்கு உட்பட்டுக் கொண்டேயிருக்கும். நமது சுற்றுச்சூழல், உணவு எல்லாமே இதற்குக் காரணம்.

"புகை, மது தவிர்த்து, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மனஅழுத்தமில்லாத வாழ்க்தை, நிம்மதியான தூக்கம் இவற்றைப் பின்பற்றினால் உங்கள் இதயத்துக்கு ஆயுசு கெட்டி!"
டாக்டர் பி.ஜெயபாண்டியன்.

ஒரு வாரத்தில் 30 - 45 வயதுக்குப்பட்ட நான்கு அல்லது ஐந்து பேராவது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். புகைப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், மனஅழுத்தம், தூக்கமின்மை இவைதான் இளவயதில் ஏற்படும் மாரடைப்புக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

வீட்டிலேயே உணவுப்பழக்கம் மாறிவிட்டது. நூடுல்ஸ், ஓட்ஸ் என்று நமது உடலுக்குப் பொருந்தாத உணவுகளைத்தான் அன்றாட உணவுகளாக மாற்றி வருகிறோம். நமது பாரம்பர்ய உணவுகூட அதிக கலோரி கொண்டதாக மாறிவிட்டது. நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்களைக்கூட பாரம்பர்யத்திலிருந்து மாற்றிக்கொண்டிருக்கிறோம். நமது மரபில் காலங்காலமாக தென்னிந்திய உணவு வகையைத்தான் சாப்பிட்டு வந்திருப்போம். வட இந்திய உணவுகள்கூட நமது உணவுமுறையில் இருந்திருக்காது. ஆனால், இப்போது மேற்கத்திய உணவுகளைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறோம்.

மருத்துவர் ஜெயபாண்டியன்
மருத்துவர் ஜெயபாண்டியன்

பல காலமாக ஓர் உணவுப்பழக்கத்தை நாம் பின்பற்றி வரும்போது, அதற்கேற்றாற்போல் நமது உடல் தகவமைக்கப்பட்டிருக்கும். நமது பாரம்பர்யத்தில் உள்ள உணவுகளைச் செரிப்பதற்கு ஏற்றாற்போல் உடலின் அமைப்புகள் இருக்கும். நாம் மாறிய உணவுப்பழக்கத்துக்குப் போகும்போது அதைச் செரிப்பதற்கான அமினோ ஆசிட் உடலில் இருக்காது. இதனால் உணவே நஞ்சாக மாறும். இது உடலில் சின்னச் சின்ன சேதங்களை விளைவித்துக்கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கடைகளில் கிடைக்கும் உணவுகளையும் உடலுக்கு உகந்த பொருள்களைக்கொண்டு தயாரிப்பதில்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவைச் சாப்பிடுவதும் உடலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கமாக உள்ளது.

மொபைல், டிவி என கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்தும் நேரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் தூங்காமல் கேட்ஜெட்டுகளில் கவனத்தைச் செலுத்துவது அதிகரித்துள்ளது. நமது உடலில் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் அமைப்பு இருக்கும். அதேபோன்று தூக்கத்துக்கென்றும் ஓர் அமைப்பு உண்டு. அதில் மூன்று, நான்கு படிநிலைகள் உள்ளன. உதாரணமாக, REM (Rapid Eye Movement) என்ற சாதாரண தூக்கத்தை முன்னெடுக்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் செல்போனில் நேரம் செலழித்தால், NREM (NonRapid Eye Movement) என்ற ஆழ்ந்த தூக்கத்துக்குச் செல்ல வேண்டிய நேரத்தில்தான் சாதாரண தூக்கத்துச் செல்ல முடியும்.

heart attack
heart attack
Pixabay
`20 வயதிலேயே மாரடைப்பு வருமா? அறிகுறிகள் என்ன?' - மருத்துவர் விளக்கம்
 #Video

நமது உடல் தூக்கத்திலிருக்கும் ஒவ்வொரு நிலையிலும் ஹார்மோன்கள் சுரப்பு, உறுப்புகள் ஓய்வெடுப்பது போன்ற வேலைகள் நடக்கும். சரியான நேரத்துக்குத் தூங்காவிட்டால் இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் தாறுமாறாகக் குழம்பும். தூக்கத்தின் முறையை மாற்றும்போது உடலில் பல பிரச்னைகள் ஏற்படத் தொடங்கி மாரடைப்பு ஏற்படலாம். தூக்கத்தில் ஏற்படும் குளறுபடிகளே அதிகாலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணம்.

வீட்டில் பெற்றோருக்கு இதயநோய், சர்க்கரைநோய், தைராய்டு போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, அல்லது அந்தந்த நபருக்கே சர்க்கரைநோய், தைராய்டு, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, மதுப்பழக்கம், குடிப்பழக்கம் இருந்தாலோ மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அதனால் இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் 30 வயதிலேயே இதயத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கத் தொடங்க வேண்டும். எந்த ஆபத்துப் பட்டியலிலும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் என்றால் 40 வயது முதல் இதயத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ஈசிஜி பரிசோதனை செய்வதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

மாரடைப்பு
மாரடைப்பு
Pixabay
இளம் பெண்களுக்கான மாரடைப்பு.. தடுப்பது எப்படி? - இதயநோய் நிபுணரின் விளக்கம்! #Video

ஆபத்துப் பட்டியலில் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத போக்கு இளைஞர்களிடம் இருக்கிறது. `நமக்கெல்லாம் எதுவும் வராது' என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர். அதுபோன்ற நிலையில், அந்த நபரின் பெற்றோர், குடும்பத்தினர் ஆபத்துக்கான காரணங்களையெல்லாம் எடுத்துக்கூறி அவர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுக்க அறிவுறுத்துவதோடு, மருத்துவ கண்காணிப்புக்கும் உட்படுத்த வேண்டும்.

புகை, மது தவிர்த்து, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மனஅழுத்தமில்லாத வாழ்க்தை, நிம்மதியான தூக்கம் இவற்றைப் பின்பற்றினால் உங்கள் இதயத்துக்கு ஆயுசு கெட்டி" என்கிறார் டாக்டர் ஜெயபாண்டியன்.