Published:Updated:

சிரமங்கள் பொறுத்தோம்; சேவைகள் புரிந்தோம்!

சிரமங்கள் பொறுத்தோம்; சேவைகள் புரிந்தோம்!
பிரீமியம் ஸ்டோரி
சிரமங்கள் பொறுத்தோம்; சேவைகள் புரிந்தோம்!

வலிகளைப் போக்கும் வழித்துணை செவிலியர்கள்

சிரமங்கள் பொறுத்தோம்; சேவைகள் புரிந்தோம்!

வலிகளைப் போக்கும் வழித்துணை செவிலியர்கள்

Published:Updated:
சிரமங்கள் பொறுத்தோம்; சேவைகள் புரிந்தோம்!
பிரீமியம் ஸ்டோரி
சிரமங்கள் பொறுத்தோம்; சேவைகள் புரிந்தோம்!
“அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்... இரு செவிலியர்தாம் என்னை மீட்டுக் கொண்டு வந்தனர்” - கொரோனாத் தொற்றிலிருந்து மீண்ட 55 வயதான இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வார்த்தைகள் இவை. பிரதமர் தொடங்கி சாதாரண மனிதர்கள் வரை கொரோனாவின் முன்பு மண்டியிட்டுக் கிடக்கும் மனித சமுதாயத்தை மீட்கும் பெருந்தொண்டினை ஆற்றிவருகின்றனர் செவிலியர்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கைவிளக்கேந்திய காரிகை என்று போற்றப்படுபவரும் நவீன செவிலிய சேவையின் நிறுவனர் என்று புகழப்படும் ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது ஆண்டு விழாவாகும். இதனைப் போற்றும் வகையில் 2020-ம் ஆண்டை சர்வதேச செலிவியர் ஆண்டாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.

இந்த ஆண்டு நமக்கான பிரத்யேக ஆண்டு... கொண்டாட்டங்களையும் விழாக்களையும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று செவிலியர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்த வேளையில், இந்த ஆண்டை வேறு விதமாக மாற்றியது இயற்கை. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மனித குலத்தை மீட்கும் மகத்தான பொறுப்பை அவர்களுக்கு வழங்கியது . மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார்கள் என்றால், அருகிலேயே இருந்து பராமரித்து நோயற்ற மனிதர்களாக மாற்றுவதற்குத் தம் சிரமேற்கொண்டவர்கள் செவிலியர்கள். இதில் தன் இன்னுயிரையும் துறந்த செவிலியர்களையும் மறந்துவிட முடியாது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பணியாற்றும் சில செவிலியர்களின் அனுபவங்கள்:

கலைச்செல்வி குடும்பத்துடன்
கலைச்செல்வி குடும்பத்துடன்

“கவச உடையைப் போட்டதும் பீறிடும் அழுகை”

- கலைச்செல்வி

“கொரோனா வார்டில் பணி என்றதுமே சற்று பயம் வந்துவிட்டது. வீட்டில் வயதான மாமியார், என் குட்டிக் குழந்தை இருவரையும் நான்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். கணவரும் நான் பணியாற்றும் அதே மருத்துவமனையில் செவிலியராக இருக்கிறார். மகளை கணவர் பார்த்துக்கொள்வதாகக் கூறியதால், அதற்கேற்றாற்போல் பணிமுறையையும் மாற்றிக்கொண்டு கொரோனா வார்டுக்குச் சென்றுவிட்டேன். மூன்றடுக்குக் கவச ஆடையைப் போட்டுக்கொண்டதுமே மூச்சுமுட்டுவதுபோலத் தோன்றும். முதல் இரண்டு நாள்கள் ஆடையைப் போட்டவுடனேயே அழுகை வந்துவிட்டது. கண்ணீருடனேயே வார்டுக்குச் செல்வேன். வார்டில் இரண்டு நாள்கள் நோயாளிகள் அனைவருக்கும் நெகட்டிவ் என்றே முடிவு வந்தது. மூன்றாவது நாள் இரண்டு பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததுமே என்னையும் பயம் தொற்றிக்கொண்டது. கவச ஆடை கொடுத்த நம்பிக்கையில் நோயாளிகளைப் பராமரிக்க ஆரம்பித்தேன். அந்த ஆடையைப் போட்டால் ஓரிடத்தில் உட்கார்ந்த உடனேயே வியர்வை ஆறாகப் பெருகத் தொடங்கும். நடந்தால் சற்று ஆசுவாசமாக இருக்கும் என்பதால் வேலை நேரம் முடியும் வரை சுமார் 7 மணி நேரம் அங்குமிங்கும் நடந்துகொண்டேதான் இருப்பேன். கொரோனா வார்டு பணி, ஒரு வாரம் தனிமைப்படுத்தல். அதனைத் தொடர்ந்து தற்போது வேறு வார்டில் பணியாற்றுகிறேன்.

கலைச்செல்வி கவச உடையில், கலைச்செல்வி
கலைச்செல்வி கவச உடையில், கலைச்செல்வி

வார்டில் மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க செல்போனைப் பயன்படுத்துவோம். பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பணிக்குக் கொண்டு சென்ற பொருள்களையெல்லாம் கிருமிநீக்கம் செய்துகொடுப்பார்கள். இருந்தாலும் வீட்டுக்குச் செல்லும்போது செல்போன் மூலம் வைரஸ் பரவிவிடுமோ, டிபன் பாக்ஸில் ஒட்டிக்கொண்டு வைரஸ் என் வீட்டுக்குள் நுழைந்துவிடுமோ என்ற பயத்திலேயே இருப்பேன். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது ஓடிவரும் குழந்தையைத் தொடக்கூட முடியாது. குழந்தைக்கு ஆசையாக சாப்பாடு ஊட்டிவிடுவது, குளிப்பாட்டுவது என எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறேன். `அம்மாவையும் அப்பாவையும் தொடக்கூடாது... அப்பாமீது ஏறி விளையாடக்கூடாது’ என்பது போன்ற கட்டுப்பாடுகளையெல்லாம் என் பிஞ்சுக் குழந்தைக்கு விதித்திருக்கிறேன். இந்த நொடிகூட எனக்கு நோய் வந்துவிடுமோ என்ற பயம் இல்லாமலில்லை. ஆனாலும் செவிலியர் என்ற உன்னதக் கடமையிலிருந்து விலக விரும்பவில்லை. மீண்டும் கொரோனா வார்டில் பணியாற்றத் தயாராகிவிட்டேன்!”

“எங்களுக்காகவும் தொழுகை செய்த நோயாளிகள்!”

- ரேகா

“கொரோனா வார்டில் 18 நாள்கள் பணியிலிருந்துவிட்டு அண்மையில்தான் வீடு திரும்பினேன். வார்டில் போதிய பாதுகாப்புக் கருவிகள் அணிந்து கொண்டிருந்தோம். முகம் கூட முழுதாக மறைக்கப்பட்டிருந்தது. அதனால் உற்சாகமாகவே வார்டில் பணியாற்றினேன். நோயாளிகளும் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். கொரோனா வைரஸ் நோய்தான் கொடியதே தவிர அதனால் பாதிக்கப்பட்டவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். அவர்களைப் புறந்தள்ளி வைக்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டேதான் சிகிச்சையளிப்பேன். அரசும் மருத்துவமனை நிர்வாகமும் நோயாளிகளை மட்டுமல்ல, அவர்களைப் பராமரிக்கும் எங்களையும் சிறப்பாக கவனித்தார்கள்.

ரேகா குடும்பத்துடன்
ரேகா குடும்பத்துடன்

சத்து நிறைந்த, ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் எனத் தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்கள். அதனால் என் கணவர் இரண்டு நாளுக்கு ஒருமுறை பழங்கள் வாங்கிவந்து கொடுத்துவிட்டுப் போவார். சில நோயாளிகள் செருப்பு, பேஸ்ட், சீப்பு என எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் முகம் சுளிக்காமல் வாங்கிக் கொடுப்போம். பதிலுக்கு நோயாளிகள் கையெடுத்துக் கும்பிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

நான் பணிபுரிந்த வார்டில் இஸ்லாமியர்கள் அதிகம் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தினமும் தொழுகை செய்யும்போது எங்களுக்காகவும் எங்கள் குடும்பங்களுக்காகவும் வேண்டிக்கொள்வதாகச் சொல்வார்கள். இதுபோன்ற கொடுப்பினைகள் யாருக்குக் கிடைக்கும்? செவிலியர் என்ற ஒற்றைப் பெயர் வாங்கிக்கொடுத்த சிறப்பாகவே இதனைக் கருதுகிறேன்.

ரேகா - செந்தில் கவச உடையில்
ரேகா - செந்தில் கவச உடையில்

கொரோனா வார்டில் பணி முடிந்த பிறகு க்வாரன்டீனில் வைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்ததை உறுதி செய்த பிறகே வீட்டுக்கு அனுப்பினார்கள். வீடு திரும்பியதும் பல நாள்கள் கழித்து என் குழந்தைகள் என்னைப் பார்த்ததால் ஓடி வந்து கட்டிப்பிடித்து முத்த மழையில் நனைய வைத்தார்கள். என் வாழ்நாளில் இதுமாதிரியான அனுபவங்களைப் பார்த்ததே இல்லை. இதுபோன்ற சூழல்ல என்னுடைய பங்களிப்பும் இருந்தது பெரும் ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது. விரைவில் கொரோனாவை வென்று இயல்பு நிலைக்குத் திரும்புவோம்.”

ரேகா பணிபுரிந்த கொரோனா வார்டுக்கு நோயாளிகளை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுள்ளார் அவரின் கணவரும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருமான செந்தில். வாழ்க்கையில் மட்டுமல்ல, கொரோனாவுக்கு எதிரான போரிலும் இவர்கள் இணைந்துள்ளது அற்புதம்தானே!

“உணர்வைக் காட்டமுடியாததே உச்சக்கட்ட வலி!”

- தமிழ்ச்செல்வி

“எனக்கு 38 வயதாகிறது. என் இரண்டு அக்காக்களும் மருத்துவத்துறையோடு தொடர்புடையவர்கள். மூத்த அக்கா செவிலியர். இவர்களால் எனக்கும் செவிலியர் பணிமேல் ஈடுபாடு வந்துவிட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் 12 ஆண்டுகளாகப் பணி செய்கிறேன். பத்து வருடங்களாக அறுவை சிகிச்சை வார்டில் வேலை. ரொம்பவே சவாலானது. குறிப்பாக எலும்பியல் துறையில் அறுவை சிகிச்சையெல்லாம் எட்டு மணிநேரம் வரைகூட நடக்கும். சாப்பிடக்கூடப் போகமுடியாது. அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பொது வார்டில் பணி. தற்போது கொரோனா வார்டில் பணியாற்றுகிறேன்.

தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வி கவச உடையில்
தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வி கவச உடையில்

பயிற்சிக்காலத்தில் நிறைய அனுபவங்கள். நோயாளிகளிடம் எங்களுடைய உணர்வை வெளிப்படுத்தக்கூடாது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பழகிக்கொண்டேன். அதுதான் இருப்பதிலேயே ரொம்பவும் கஷ்டமானது. நாங்கள் அவர்களுக்குச் செய்கிற சேவையைப் பார்த்து கையைப் பிடித்துக்கொண்டு அழுவார்கள். அப்போதும்கூட உணர்வை வெளிக்காட்ட மாட்டோம். இத்தனை வருடங்களாக இப்படித்தான் என் வாழ்க்கை. இனிமேலும் இந்த சேவை வாழ்க்கைதான் எனக்கானது. தொடர்ந்து செய்வேன். எனக்குக் கொரோனா பயமெல்லாம் இல்லை. எல்லா நோயாளிகளைப் போலத்தான் கொரோனா நோயாளிகளும்.

சென்னை குரோம்பேட்டையிலிருந்து 70 வயது முதியவர் ஒருவர் வந்திருந்தார். அவருக்குக் கொரோனா பாசிட்டிவ். ஏற்கெனவே மஞ்சள்காமாலை, குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என நிறைய பாதிப்புகளோடு தவித்தவருக்கு இப்போது கொரோனாவும் வந்திருக்கிறது. வீட்டில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த உறவுக்காரர்கள், ‘கொரோனா பாசிட்டிவ்’ எனத் தெரிந்ததும் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டார்கள். துணைக்கு யாரும் இல்லாமல் வந்து சேர்ந்திருக்கிறார் அந்தப் பெரியவர். உதவிக்கு யாருமே இல்லாமல் தவித்தவருக்கு சேவைசெய்ய நான் சென்றதைப் பார்த்ததும் அவரின் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி. அவருக்கு உடைமாற்றி விடுவது, உணவூட்டுவது, இயற்கை உபாதைகளுக்கு உதவுவது எனப் பணிசெய்தேன். கொரோனா வார்டில் ஒருவாரம் பணி முடித்துவிட்டு இப்போது க்வாரன்டீனில் இருக்கிறேன். மீண்டும் பணிக்குப் போகும்போது அந்தப் பெரியவரை விசாரித்துவிட்டுதான் வேலையையே தொடங்குவேன். அவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது!”

“செவிலியர் மட்டுமல்ல மனநல ஆலோசகரும் நாங்கள்தான்”

- கு. செல்வகுமார்

``நான் விவசாயக் கல்வி முடித்தவன். இந்த செவிலியர் சேவைப் பணி பிடித்துப்போனதால் விரும்பித் தேர்ந்தெடுத்தேன். என் மனைவியும் செவிலியர்தான். இப்போது கொரோனா வார்டில் பணிபுரிந்து தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்.

கு.செல்வகுமார்
கு.செல்வகுமார்

மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் எல்லா நோயாளிகளுக்கும் கொரோனாப் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டவர்களில் பலருக்கும் தங்களுக்குக் கொரோனா இருக்குமோ என்ற அச்சம் இருக்கும். அதனால் எங்களுடைய சின்னச் சின்ன அசைவுகளையும் தங்களுடைய பரிசோதனை முடிவுகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள். தொடுதல் விஷயத்தில் நாங்கள் சிறிது வித்தியாசம் காட்டினால்கூட, `எனக்குக் கொரோனா இருக்குபோல... அதான் நர்ஸ் இப்படி நடந்துக்கிறாங்க’ என்று பயப்பட ஆரம்பித்துவிடுவார்கள். அதனாலேயே ஒவ்வோர் அசைவையும் மிகக்கவனமாகப் பார்த்துக்கொள்வோம். மனதளவில் ஒரு நோயாளி நொறுங்கிப்போய்விட்டால் அவர்களை குணப்படுத்துவது சிரமமாகிவிடும். வார்டில் செவிலியராக மட்டுமல்லாமல் மனநல ஆலோசகராகவும் இருக்க வேண்டும்!

உடல் பருமனாக இருந்த நோயாளி, மூச்சுத்திணறலோடு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். உடன் யாரும் இல்லாமல்போனது கூடுதல் சோகம். மூச்சுத்திணறல் கொரோனாவுக்கான அறிகுறி என்பதால், தனியார் மருத்து வமனையில் இவரைத் தொடக்கூட இல்லையாம். ஒருகட்டத்துக்கு மேல் எங்கள் (அரசு) மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டார்கள். ஆதரவு இல்லாமல் இருந்த அவரை, தூக்கி உட்காரவைத்து உள்நோயாளி யாக அட்மிட் செய்து, அவருக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்தேன். அவர் நிதானத்துக்கு வந்த பிறகு, அடுத்தகட்ட சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்தார்கள். அவருக்கும் கொரோனாப் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு வரும் வரை அவர்கூடவே இருந்து கவனித்துக்கொண்டேன். அவருக்கு ஆறுதல் வார்த்தைகளையும் சொல்லிக்கொண்டே இருந்தேன். பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் என வந்தது! அவர் ரொம்ப நெகிழ்ந்து போனார். விடைபெறும்போது, `ரொம்ப நன்றிங்கண்ணா. நீங்க இல்லன்னா நான் இவ்வளவு தைரியப்பட்டிருப்பேனான்னு தெரியல’ என்று சொல்லிவிட்டுப் போனார். இவரைக் கடந்த பிறகு, நான் சந்திக்கிற ஒவ்வொரு நோயாளியையும் உடன்பிறப்பாகவோ, அப்பா, அம்மாவாகவோதான் பார்க்கிறேன்.”

“ரோபோவாக மாறியதுபோல் இருக்கிறது”

- கலைச்செல்வி

“கொரோனா வார்டு பணிக்குப் பிறகு தற்போது க்வாரன்டீனில் இருக்கிறேன். கொரோனாத் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டு, முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்தால் மட்டுமே வீட்டுக்குச் செல்ல முடியும். கவச உடையை அணிந்துகொண்டு தொடர்ந்து ஆறு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் மூச்சுக்கூட ஒழுங்காக விட முடியாது. தண்ணீர் குடிப்பதையோ கழிவறைக்குச் செல்வதையோ நினைத்துக்கூட பார்க்க முடியாது. என் உடலின் எந்தப் பகுதியையும் நானே மறந்தும்கூடத் தொடமுடியாது. உடல் முழுக்க வியர்த்து , நாக்கு வறண்டுவிடும். அனைத்து உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு ஒரு ரோபோ மாதிரிதான் நடமாடிக் கொண்டிருப்போம். அந்த உடைக்குள் இருந்து எப்போது உடம்பை வெளியே எடுப்போம் என மனது தவிக்கும். இதற்கு கொரொனா வந்து படுகிற அவஸ்தையே பரவாயில்லை என்றுகூடத் தோன்றும். அந்த நேரத்தில் எல்லாம் என் இரண்டு பிள்ளைகள் கண் முன்னே வந்து போவார்கள். பணி முடிந்து எங்களுக்கான குவார்ட்டஸுக்குப் போன பிறகும் எதையும் தொட முடியாது. அதனால் பணிக்குச் செல்லும்போதே உடை உள்ளிட்ட அனைத்தையும் ஒரு வாளியில் எடுத்து வைத்து விட்டுப் போவேன். வேலை முடிந்து நேராகக் குளியலறைக்குச் சென்று ஆடையைக் கழற்றினால் மணிக்கணக்காகத் தண்ணீரில் இருந்தால் எப்படியிருக்குமோ அதுபோல் உடம்பு முழுக்கக் கன்றிப்போயிருக்கும். அதன் பிறகு உடைகளைத் துவைத்து, குளித்து வெளியே வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். குளியலறையிலிருந்து வெளியே வரும்போது ஏதோ வேற்றுக்கிரகத்துக்குச் சென்று வந்தது போல் இருக்கும்.

கலைச்செல்வி 
கவச உடையில், கலைச்செல்வி குடும்பத்துடன்
கலைச்செல்வி கவச உடையில், கலைச்செல்வி குடும்பத்துடன்

வீட்டுக்கே செல்ல முடியாது என்பதால் என் கணவர்தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு சமைக்கத் தெரியாது என்பதால் ஒரு வேளை சாப்பாட்டை ரெடி செய்யவே படாதபாடு படுவதாகப் புலம்பினார். ‘என் பிறந்தநாளுக்காவது வீட்டுக்கு வந்திடுவியாம்மா?’ என்று என் சின்ன மகள் ஏக்கத்துடன் போனில் கேட்டாள். ‘பிறந்தநாளுக்கு என்னம்மா பரிசு வேணும்?’ என்று கேட்டதற்கு, நீ வீட்டுக்கு வந்துரும்மா... அதுதான் எனக்குப் பெரிய பரிசு’ என அழுதாள். அவளிடம் அழுகையை வெளிக்காட்ட முடியாமல் விம்மி வெடித்துவிட்டேன். இத்தனைக்கும் நடுவே நேசித்தே என் செவிலியர் பணியைச் செய்கிறேன்.”

செவிலியர்கள் என்னும் சேவைமனிதர்களுக்கு சல்யூட்!