Published:Updated:

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 7 - மீண்டும் மீள்வோம்!

கொள்ளை நோய்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளை நோய்

கொள்ளை நோய்களை வென்ற வரலாறு

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 7 - மீண்டும் மீள்வோம்!

கொள்ளை நோய்களை வென்ற வரலாறு

Published:Updated:
கொள்ளை நோய்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளை நோய்
உலகில் உருவெடுத்த கொள்ளை நோய்களுக்கு மருத்துவத்துறை எழுதிவந்த முடிவுரைகள் பற்றி, இதுவரை பார்த்துவந்தோம். இந்த இதழில், நோய்களுக்கு உயிர்களை வாரிக்கொடுத்துக்கொண்டிருந்த சூழலை மாற்றி, ‘மருத்துவத் தொழில்நுட்பத்தால் உயிர்களைக் காப்போம்’ என்ற வேட்கையில் கண்டறியப்பட்ட, வரலாற்றை மாற்றிய சில மருத்துவத்துறை கண்டுபிடிப்புகளைப் பற்றிக் காண்போம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோய்க்குறி கண்டறியும் உபகரணங்கள் தெர்மாமீட்டர்

‘தெர்மாமீட்டர்’ எனும் உடல் வெப்பமானியை, 1714-ம் ஆண்டு முதலில் கண்டறிந்தவர் கேப்ரியல் ஃபேரன்ஹீட். ஒரு திரவத்தின் அடர்த்தி, அதன் வெப்பம் கூடும்போது அதிகமாகிறது எனும் கலிலியோவின் தத்துவத்தைப் பயன்படுத்தி, மெர்குரி எனும் திரவ வடிவ உலோகத்தை தெர்மாமீட்டரில் பயன்படுத்தினார் ஃபேரன்ஹீட். மெர்குரி தெர்மாமீட்டர்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், டிஜிட்டல் தெர்மாமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அகச்சிவப்பு(Infra red) கதிர்களை நெற்றியில் அடித்து அதன் மூலம் வெப்பத்தைக் கண்டறியும் இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டரும் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கொரோனா காலத்தில், ஏர்போர்ட் முதல் அலுவலக வளாகங்கள்வரை இதைக்கொண்டுதான் நம் நெற்றியில் வைத்துப் பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படுகிறோம்.

ஸ்ஃபிக்மோமேனோமீட்டர் (Sphygmomanometer)

ரத்த அழுத்தத்தை முறையாகக் கண்டறியப் பயன்படும் இந்த ரத்த அழுத்தமானியை 1881-ம் ஆண்டு ரிட்டர்வான் பாஸ்க் என்பவர் கண்டுபிடித்தார். ரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படும் அழுத்தத்தை அளந்து அதன் மூலம் இதயத்தின் உந்து விசையைக் கணிக்கும் மானியாக இது செயல்படுகிறது.

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 7 - மீண்டும் மீள்வோம்!

உடல் ஊடுருவு கதிர் படங்கள்

எக்ஸ் ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,

சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ

1895-ம் ஆண்டு ஜெர்மனியின் வில்ஹெம் கன்ராட் ராண்ட்ஜென் எனும் அறிவியலாளர் தனது ஆராய்ச்சியி ன்போது தற்செயலாக ஒளிக்கதிர்களைக் கண்டறிந்தார். அவை எதனால் தோன்றின என்பதை அவர் அறியாததால் அதற்கு ‘எக்ஸ் ரே’ என்று பெயரிட்டார். எக்ஸ் ரேக்கள் உடல் மீது பாய்ச்சப்படு ம்போது அவை தசைகளை ஊடுருவுவதும், எலும்பை ஊடுருவ இயலாமல் இருப்பதையும் கண்டறிந்து, இவற்றை மருத்துவத் துறையில் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சி முடிவைப் பகிர்ந்தார். இதற்காக அவருக்கு 1901-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1955-ம் ஆண்டு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டது. ஒலியைப் பீய்ச்சி அதன் எதிரொலியைக் கொண்டு உடலின் படத்தை வரையும் முறை கொண்டு இயங்கும் கருவி இது. தற்போது கர்ப்பத்தில் குழந்தையின் வளர்ச்சி முதல் பல அறுவை சிகிச்சைகளை முடிவு செய்வதுவரை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனின் பங்கு இன்றியமையாதது.

வெப்பமானிகள், ரத்த அழுத்தமானி
வெப்பமானிகள், ரத்த அழுத்தமானி

எக்ஸ் ரேவின் மேம்படுத்தப்பட்ட உபகரணமான சி.டி ஸ்கேன், 1967-ம் ஆண்டு டாக்டர் காட்ஃப்ரி ஹவுஸ் ஃபீல்டு என்பவரால் கண்டறியப்பட்டது. எம்.ஆர்.ஐ எனும் மின் காந்த அலைகள் மூலம் செயல்படும் ஸ்கேன் கருவி, 1973-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.

ஆன்டிபயாடிக் பென்சிலின் கண்டுபிடிப்பு

1928-ம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங், பாக்டீரியாவின் வீரியம் குறித்து, தனது ஆய்வகத்தில் தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தார். சில நாள்களில், தான் ஆய்வுக்குட்படுத்தியிருந்த பாக்டீரியாவின் மீது ஒரு வகை பூஞ்சை படர்ந்திருப்பதைக் கண்டார். பூஞ்சை வளர்ந்த இடத்துக்கு அருகில் பாக்டீரியா அழிந்திருந்தன. அந்தப் பூஞ்சைக்காளானைப் பரிசோதனை செய்ததில், அவை பென்சிலியம் நொடேட்டம் என்ற வகைப் பூஞ்சை என அறிந்தார். அதன் மூலம் கண்டறியப்பட்ட ஆன்ட்டிபயாடிக் மருந்துக்கு ‘பென்சிலின்’ என்று பெயரிட்டார்.

தடுப்பூசிகள்
தடுப்பூசிகள்

இந்த அரிய கண்டுபிடிப்பு, இரண்டாம் உலகப்போர்வரை பிரபலமாகவே இல்லை. இரண்டாம் உலகப்போரின்போது ஏற்பட்ட காயங்களுக்கும், அவற்றால் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றுகளுக்கும் பென்சிலின் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.

தடுப்பூசிகள்

நுண்ணுயிர்கள் மூலமே தொற்றுநோய்கள் தோன்றுகின்றன எனும் தத்துவம், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நுண்ணோக்கி கண்டறியப்பட்டவுடன் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே எட்வர்ட் ஜென்னர் எனும் மருத்துவர், பெரியம்மைக்குத் தடுப்பு மருந்து கண்டறிந்தது ஆச்சர்யமே.

சாக் என்பவரின் கண்டுபிடிப்பான இளம்பிள்ளை வாதத்துக்கு எதிரான போலியோ தடுப்பு மருந்து, சொட்டுமருந்தாக உலகம் முழுவதும் கொடுக்கப் பட்டது. இந்தியாவில் 1995-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் போலியோ சொட்டுமருந்து நாடு முழுவதும் ஒரே நாளில் வழங்கப்பட்டதன் விளைவாக, போலியோ இந்தியாவிலிருந்து விரட்டப்பட்டிருக்கிறது.

மீசில்ஸ், ரூபெல்லா, ஃப்ளூ, கூவக்கட்டு அம்மை, கக்குவான் இருமல், ரணஜன்னி போன்ற பல உயிர்க்கொல்லி நோய்கள் கட்டுக்குள் இருப்பதற்கு ‘வேக்ஸின்’ எனப்படும் தடுப்பூசிகளின் பங்கு இன்றியமையாதது. இப்போது உலகம் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துச் செயல்படும் தடுப்பூசிக்காகக் காத்திருக்கிறது.

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 7 - மீண்டும் மீள்வோம்!

மயக்க மருந்து

1800களுக்கு முன்புவரை, நோயால் ஏற்படும் மரணங்களை மிஞ்சும் அளவுக்கு, அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் வலியால் அதிக மரணங்கள் ஏற்பட்டன. 1842-ம் ஆண்டு வில்லியம் மார்டன் எனும் மருத்துவர், ஈத்தர் எனும் மருந்தை நோயாளிக்குக் கொடுத்து அதன் மூலம் மயக்கத்தை ஏற்படுத்தி வெற்றி கண்டார். இன்று மயக்கவியல் துறை பல வியத்தகு முன்னேற்றங்களைத் தன்னகத்தே ஏற்படுத்திக்கொண்டு, புற்றுநோய் போன்ற நோய்களில் வலி நிவாரணம் தரும் துறையாகவும் முன்னேறியிருக்கிறது.

இன்சுலின்

இன்சுலின் எனும் உயிர்காக்கும் திரவம் கண்டறியப்படும் முன்வரை, ‘டைப் ஒன்று’ எனும் இன்சுலினை மட்டுமே நம்பி வாழும் நீரிழிவு நோயாளிகள் அனைவரும் உடல் நலிந்து எலும்பாகி மரணித்து வந்தனர். 1921-ம் ஆண்டு பாண்டிங் மற்றும் பெஸ்ட் ஆகிய மருத்துவ அறிவியலாளர்கள் இன்சுலினைக் கண்டறிந்து, ‘டைப் ஒன்று டயாபடீஸ்’ மூலம் இறக்கவிருந்த லியோனார்ட் தாம்ப்ஸன் எனும் 14 வயதுச் சிறுவனின் உயிரைக் காத்தனர். இன்று இன்சுலின் எனும் உயிர்காக்கும் திரவம் நீரிழிவு நோயாளிகளின் உடல்நிலை முன்னேற்றத்தில் முக்கியமான இடத்தை வகிக்கிறது.

ரத்த தானம்

ரத்த தான முறை கண்டறியப்படாத 19-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை, அதிகமான உதிரப்போக்கால் பிரசவக்கால மரணங்கள் அதிக எண்ணிக்கையில் நிகழ்ந்தன. அவற்றைக் குறைக்கும் விதமாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் பலண்டல் எனும் மகப்பேறு மருத்துவர், ரத்த தானம் செய்யும் முறையைக் கண்டறிந்தார். 1818-ம் ஆண்டு பிரசவத்தின்போது உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்ணுக்கு, அவரின் கணவர் கொடுத்த ரத்தம் முதன்முறையாக ஏற்றி சோதிக்கப்பட்டது. வெற்றிகரமாக அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார். இருப்பினும், அதைத் தொடர்ந்து ரத்தம் ஏற்றப்பட்ட பலருக்கு மரணம் ஏற்பட்டது. இதற்கான விடையை 1901-ம் ஆண்டு காரல் லேண்ட்ஸ்டைனர் கண்டறிந்தார். பல வகையான ரத்த வகைகள் இருப்பது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

டாக்டர் ஜோசப் முர்ரே மற்றும் டாக்டர் டேவிட் ஹியூம் ஆகியோர் 1954-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முதன்முதலில் செய்தனர். 1963-ம் ஆண்டு முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1967-ம் ஆண்டு இதய மாற்று அறுவை சிகிச்சையும், 1998-ம் ஆண்டு கை மாற்று அறுவை சிகிச்சையும், 2010-ம் ஆண்டு முழு முகமாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இன்று இந்திய அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகம் செய்யப்படும் மாநிலங்களுள் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.ஆர்.எஸ் எனும் உயிர்காக்கும் திரவம்

உலகம் முழுவதும் காலரா போன்ற பேதி நோய் வந்து மரணமடைந்த பலரின் ஆன்மாக்கள் இந்த ஒரு கண்டுபிடிப்பால் சாந்தி அடையும். ஆம்... ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் நேரும் வயிற்றுப்போக்கு சார்ந்த நோய்களால் ஏற்படும் மரணங்களைப் பாதிக்குப் பாதியாகக் குறைத்த பெருமை இந்த Oral Rehydration Salt திரவத்துக்கு உண்டு. சோடியம், குளோரைடு போன்ற உடலுக்குத் தேவையான தாது உப்புகளை சரிவிகிதத்தில் வைத்திருக்க, வாய் வழியாக உட்கொள்ளும் இந்த திரவம் போதுமானது.

20-ம் நூற்றாண்டின் மிக முக்கிய மருத்துவக் கண்டுபிடிப்பாக ஓ.ஆர்.எஸ் கொண்டாடப்பட்டது. இத்தகைய வியத்தகு சாதனையைப் புரிந்தவர் திலீப் மஹாலன்பிஸ் எனும் இந்தியர் என்பதில் நமக்குக் கூடுதல் பெருமை.

மனநல மருத்துவம்

கிட்டத்தட்ட 19-ம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை, மனநல பாதிப்பு என்பது பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்றே நம்பப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஆவி பிடிப்பவரிடம்(!) அழைத்துச்செல்லப்படுவார்கள். தலையிலிருக்கும் பேய் வெளியேற, தலையின் கபாலத்தில் ஓட்டை போடும் நிகழ்வுகளெல்லாம் நடந்திருக்கின்றன. இப்படியான காட்டுமிராண்டித் தனங்களால் பலரும் மரணமடைவர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டோரை மனிதத்தன்மையுடன் நடத்தாமல் விலங்குகள்போல சங்கிலியில் கட்டி வதைப்பதும் நடந்தது.

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 7 - மீண்டும் மீள்வோம்!

இப்படியான சூழ்நிலையில் 1793-ம் ஆண்டு மனிதாபிமானத்துடன் மனநல நோயாளிகளை அணுகும் உலகின் முதல் மருத்துவமனையான ‘பிசெட்ரே’ மருத்துவமனை, ஃப்ரான்ஸின் பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே மனநல சிகிச்சையின் வளர்ச்சியில் முதல்படி. 1903-ம் ஆண்டு பால் ஈயூஜென் ப்ளூலர் என்பவர் மனச்சிதைவு(Schizophrenia) நோய் குறித்துக் கண்டறிந்தார்.

1821-ம் ஆண்டு, லித்தியம் எனும் பேட்டரி செய்ய உபயோகப்படும் உலோகத்துக்கு மனநல மருந்தாக வேலைசெய்யும் ஆற்றல் இருக்கிறது என்பது அறியப்பட்டது. 1952-ம் ஆண்டு குளோர்ப்ரொமஸின் (Chlorpromazine) எனும் முதல் மனநல மருந்து கண்டறியப்பட்டது. இன்று மனநல மருத்துவம் பல சீரிய முன்னேற்றங்களைக் கண்டு முக்கியத் துறையாக வளர்ந்துவருவது மகிழ்ச்சி.

அடுத்த பகுதியில், கொரோனா வைரஸுக்கான சிகிச்சை முறைகள், தடுப்பூசி கண்டறிய இருக்கும் சாத்தியங்கள் குறித்துப் பேசி நிறைவு செய்வோம்.

- நம்பிக்கை தொடரும்