18 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்ததா பச்சைக் காய்கறிகள்?
குழந்தையின் மரணத்துக்குக் காரணமான பெற்றோரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது.

அமெரிக்க நாட்டில் ஃபுளோரிடா மாகாணத்தில் பச்சைக் காய்கறிகள், பழங்களை மட்டும் தொடர்ந்து கொடுத்து வந்ததால் 18 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் மரணத்துக்குக் காரணமான பெற்றோரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது.

ஷீலா ஓ லியாரி (35), ரியான் ஓ லியாரி (30) என்ற தம்பதியர் ஃபுளோரிடாவில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீகன் உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள். மேலும், எந்த உடல்நலக் குறைவுக்கும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கே செல்லாதவர்கள். இவர்கள் தங்கள் 18 மாதக் குழந்தைக்குக் காய்கறிகலையும் பழங்களையும் மட்டுமே உணவாகக் கொடுத்து வந்துள்ளனர். மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை உயிரிழந்தது.
உயிரிழக்கும்போது அந்தக் குழந்தை வெறும் 7.7 கிலோ மட்டுமே எடையோடு இருந்துள்ளது. தம் குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் தாய் வெறும் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் மட்டுமே உணவாகக் கொடுத்து வந்துள்ளார். உயிரிழந்த குழந்தையும் வீட்டிலேயே பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து அதை மருத்துவரிடம் காண்பிக்கவேயில்லை.

உயிரிழந்த தினத்தன்று அதிகாலை 4 மணியளவில் குழந்தை அழுதுள்ளது. தாய் எழுந்து சுமார் ஒரு நிமிடம் தாய்ப்பால் புகட்டியிருக்கிறார். அப்போது குழந்தைக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்துள்ளது. அப்போதும் அவர் மருத்துவரை நாடாமல், மீண்டும் உறங்கச் சென்றிருக்கிறார்.
மீண்டும் காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளது. அதற்குப் பிறகுதான் ஆலம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அந்தத் தம்பதிக்கு 3 மற்றும் 5 வயதில் மேலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கும் காய்கறிகளையும் பழங்களையும் மட்டுமே உணவாகக் கொடுத்து வளர்த்ததால், அவர்களும் உடல் எடை மிகவும் குறைந்து, வளர்ச்சி குறைந்து காணப்பட்டுள்ளனர். பெற்றோர் தற்போது சிறையில் உள்ளதால், உயிரோடிருக்கும் இரண்டு குழந்தைகளையும் அந்நாட்டின் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள்நலத் துறையினர் அந்த வீட்டிலிருந்து மீட்டு, தங்கள் பராமரிப்பில் வைத்துள்ளனர்.