Published:Updated:

அலறவைத்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை… அறப்பணியில் விகடன்!

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை
ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை

ஆக்ஸிஜன் படுக்கை பற்றாக்குறை உள்ள மற்ற மாவட்ட மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளது விகடன். மேலும் தமிழக மருத்துவமனைகளின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தமிழகத்திற்குப் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் வாசகர்கள் துணையோடு விகடன் களப்பணியாற்றிட முன்வந்து நிற்கும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் செய்யும். கடந்த ஆண்டு கொரோனா லாக்டௌன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த பழங்குடியினர் மற்றும் நாடோடி இன மக்களின் தேவை அறிந்து அவர்களுக்கு மளிகைப் பொருள்களை விநியோகம் செய்தோம். கொரோனாவால் உயிரிழந்த ஏழைக்குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவித் தொகையும் அளித்தோம். இந்தக் களப்பணிகள், ஒவ்வொரு முறையும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். இப்போதும், அந்தச் சவாலுடன் ஒரு சேவையை முன்னெடுத்தோம்.

கொரோனா என்னும் கொடிய நோயின் இரண்டாம் அலையில் முதலுதவிக்காகவும், சிகிச்சைக்காகவும் அத்தியாவசியத் தேவையான `ஆக்ஸிஜன்' என்னும் பிராண வாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக அக்கறையோடும், வாசகர்கள் துணையோடும் களப்பணியில் இறங்கியது விகடன். ஆக்ஸிஜன் உதவியை தேவையுள்ளவர்களிடம் கொண்டுசேர்த்தது.

பறிபோன 13 உயிர்கள்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தாலே பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலையில்தான், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சில மணிநேரத்திலேயே 13 நோயாளிகள் பலியான துயரச் செய்தி கடந்த மே 5-ம் தேதி தமிழகத்தை உலுக்கியெடுத்தது. கேட்போரின் காதுகளிலெல்லாம் இடியாய் விழுந்தது அந்தப் பெருந்துயர்.

செங்கல்பட்டு மருத்துவமனை
செங்கல்பட்டு மருத்துவமனை

கள ஆய்வில் விகடன்!

அதை தொடர்ந்து, செங்கல்பட்டு மருத்துவமனையில் நிலவும் ஆக்ஸிஜன் அவலத்தை சரிசெய்ய விகடனால் இயன்ற உதவியைச் செய்ய முடிவெடுத்து, அங்கு கள ஆய்வு செய்தோம். மருத்துவமனையில் மொத்தம் 1,543 மருத்துவப் படுக்கைகள் இருக்கின்றன. இதில் கொரோனா சிகிச்சைக்காக 480 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 325. சென்னைக்கு அடுத்து தமிழகத்திலேயே மிக அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமான செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இது போதுமானதாக இல்லை. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் பரிதாப நிலை தொடர்ந்து இருந்துவந்தது தெரியவந்தது.

ஆம்புலன்ஸ்... ஆக்ஸிஜன்!

கொரோனா சிகிச்சை வார்டில், அவசர அவசரமாக ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டவர்கள் மணிக் கணக்கில் ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்கள். சில ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் தீர்ந்துபோய் இருந்தது. அவர்களுக்கு முன்னதாகவே வந்தவர்கள் காத்திருப்போர் இருக்கையிலும், கட்டாந்தரையிலும் படுத்துக் கிடந்தார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரின் பிரார்த்தனையும், `சாமி ஒரு ஆக்ஸிஜன் படுக்கையை கொடுத்துடு' என்பதாகவே இருந்தது.

செங்கல்பட்டு மருத்துவமனையில் போராட்டம்
செங்கல்பட்டு மருத்துவமனையில் போராட்டம்

அவசரத் தேவையில் ஆக்ஸிஜன்!

பொதுவாக, அங்கு ஆக்ஸிஜன் படுக்கையில் இருப்பவர்கள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பின்பு காலியாகும் படுக்கைகள் காத்திருப்போருக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் விகடன், ஆம்புலன்ஸில் வரும் கொரோனா நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாமல் இருக்கவும், அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு உடனடித் தேவையான ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யவும் முடிவெடுத்தது.

`வாசன் சாரிட்டபிள் ட்ரஸ்ட்’ மூலமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு சாதாரண படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்டது. மேலும் காலியான சிலிண்டர்களில் மீண்டும் ஆக்ஸிஜன் நிரப்பிக் கொடுக்கும் பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொண்டோம்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

இது குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் ஜெ. முத்துக்குமரனிடம் பேசியபோது, அவர் நமக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார். மேலும் கொரோனா நோய்த்தொற்று கண்காணிப்புக் குழு உறுப்பினர்களான மருத்துவர்கள் அரசு, பத்மநாபன், ரவிக்குமார் உள்ளிட்டோர் நமக்கான உதவிகளைச் செய்தனர்.

களப்பணியும் காத்திருந்த சவால்களும்!

மருத்துவமனை நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பு கிடைத்தாலும், சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது களப் பணி. இந்தியா முழுவதுமே மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதே இதற்கு முக்கியக் காரணம். இந்த நிலையில் நமது தீவிர தேடல் மூலம் ராணிப்பேட்டையில் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்று மருத்துவமனைக்குத் தேவைப்படும் 47 லிட்டர் கொள்ளளவு கொண்ட `D type’ சிலிண்டர்களாக மாற்றினோம். தற்காலிகமாக 20 சிலிண்டர்களை வாடகைக்கு எடுத்து அதை மருத்துவமனைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களாக மாற்றினோம். மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டரை இணைக்கும் ஃப்ளோ மீட்டருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவியது. கடின முயற்சியின் மூலமே ஃப்ளோ மீட்டரும் நமக்குக் கிடைத்தது.

சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த விகடன் வாசகர் மகாதேவன் என்பவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்க நமக்கு உதவி செய்தார். இதையடுத்து கடந்த 19-ம் தேதி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கிவைத்தோம். அவற்றை மருத்துவர்கள் குழு பார்வையிட்டு உடனடியாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்தது. தற்போது நோயாளிகளுக்கு நெருக்கடியான நிலை தவிர்க்கப்பட்டு, உடனடி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்து கொண்டோம்.

Spread Positivity
Spread Positivity

நம்பிக்கை கொடுத்த அறச் செயல்!

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், ``அப்பாவுக்குக் கொரோனா பாசிட்டிவ் இருந்த காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். இங்க ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருக்கும்னு நினைத்தோம். ஆனா அவசர சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாராகவே இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தோம். இனி ஆபத்துக்கட்டம் இல்ல, சீக்கிரம் அப்பா குணமாகிடுவார்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் தெம்பாக.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் ஜெ. முத்துக்குமரனிடம் பேசினோம்.

``கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவசர சிகிச்சைக்கு வந்த சிலருக்கு ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மூலம் ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்கும்வரை எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தோம்.

ஜெ. முத்துக்குமரன்
ஜெ. முத்துக்குமரன்

ஒரு பதட்டமான சூழலே நிலவி வந்தது. ஃப்ளோ மீட்டருக்கு தட்டுப்பாடுகள் இருக்கின்றன. மருத்துவமனை சார்பாக சில ஃப்ளோ மீட்டர்களை வாங்கியுள்ளோம். இந்த நிலையில் விகடன் சார்பாகக் கொடுக்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கிடைப்பதால் அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. கொரோனாவும் கட்டுக்குள் வரத் தொடங்கி இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் மன நிறைவோடும் பணியைத் தொடர்கிறோம். விகடன் செய்த உதவிக்கு நோயாளிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்கிறார்.

ஆக்ஸிஜன் படுக்கை பற்றாக்குறை உள்ள மற்ற மாவட்ட மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளது விகடன். மேலும் தமிழக மருத்துவமனைகளின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

வாசகர்களின் பெரும் துணையோடு நம் அறப்பணி தொடரும்!

அடுத்த கட்டுரைக்கு