Published:Updated:

``லாக்டௌன் தளர்வின் பாசிட்டிவ் நெகட்டிவ் பக்கங்கள்!" - விளக்கும் வைராலஜிஸ்ட் #ExpertOpinion

கூட்டமாகக் கூடும் மக்கள்... மீண்டும் லாக்டௌனுக்குச் செல்ல வேண்டியிருக்குமா நாம்? பதில் சொல்கிறார் வைராலஜிஸ்ட்!

கோவிட் - 19 நோய்ப் பரவுதலைப் பொறுத்தவரை, `ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும், வைரஸ் பரவுதல் எப்போது கட்டுக்குள் வரும்' ஆகிய கேள்விகள்தான் பிரதானமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் அடுத்தென்ன என அச்சப்படும் நம்மின் உச்சபட்ச எதிர்பார்ப்பெல்லாம், நோய் எப்போது கட்டுக்குள் வரும் என்பதுதான்.

இந்த வைரஸ் நம்மோடு இன்னும் நீண்ட நாள்களுக்கு இருக்கப் போகிறது.
ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குநர் ப்ரதீப் கவுர்

எவ்வளவு காலம் கொரோனா தனது தாக்கத்தைக் காட்டும் என்பது குறித்து யாருக்குமே தெரியவில்லை என்பதுதான், இப்போது சிக்கலுக்குரிய விஷயமாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம்கூட, ``இனி வரும் காலத்தில், மோசமான விளைவுகளை நாம் எதிர்கொள்ளலாம்" என அதிகாரபூர்வமாக தெரிவித்தது, இங்கே குறிப்பிடத்தக்கது.

`நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிக இறப்புகள்...' -கொரோனா பரவலால் பதறும் உலக சுகாதார நிறுவனம்

எனில், அடுத்தடுத்த மாதங்கள் நமக்கு எப்படியெல்லாம் இருக்கும்... கொரோனா வைரஸ் விஷயத்தில், நம்மைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கும்?

வைராலஜிஸ்ட்டும் மருத்துவருமான ஜெயஶ்ரீ ஷர்மாவிடம் கேட்டோம்.

வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மா
வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மா

``இந்த விஷயத்தில், இந்தியா என்றில்லாமல் உலகம் முழுக்க என்ன நடந்திருக்கிறது - எதையெல்லாம் நாம் கடந்து வந்துள்ளோம் எனப் பார்ப்பது சரியாக இருக்கும். , வருங்காலம் எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்ளும் முன், கடந்துவந்த பாதையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நோய்ப் பரவத்தொடங்கியது டிசம்பர் இறுதியிலிருந்துதான் என்பதால், ஜனவரியிலிருந்து விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* ஜனவரி மாதம் முழுக்க, நோய் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டிருந்தன. அப்படியான ஒன்றுதான், கொரோனா பரவுதலின் முதல் நிலையான சர்வதேசப் பயணிகள் மீதான கண்காணிப்புகள்.

கொரோனா உலக நாடுகள்
கொரோனா உலக நாடுகள்

* அத்தனை கண்காணிப்புகளுக்குப் பிறகும், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நோய்ப் பரவத்தொடங்கியது. எப்படியாவது பரவுதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் அனைவரும் இறங்கினோம். டெஸ்டிங் - நோய் பரவும் விதம் மற்றும் விகிதம் போன்றவை ஒவ்வொன்றாகத் தெரியவந்தன.

* முற்றிலும் புதிய வைரஸ் என்பதால், பல நாடுகளும் தொடக்ககால முயற்சியில் சில முன்னெச்சரிக்கை விஷயங்களைத் தவறவிட்டன. அவற்றின் விளைவாக, நோய் பேண்டெமிக்காகி (உலகளாவிய பெருந்தொற்று) மார்ச் - ஏப்ரல் மாதத்தில் முந்தைய காலத்தைவிட வேகமாகப் பரவியது. மார்ச் மாதத்தின் இரண்டாவது - மூன்றாவது வாரங்களில், `ஃப்ளாட்டனிங் தி கர்வ்' மற்றும் `டபுளிங் ரேட்' எனப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கும் காலம் பற்றி மருத்துவர்களும் அறிவியலாளர்களும் தெரிந்து கொண்டனர்.

#FlattenTheCurve
#FlattenTheCurve

குறிப்பாக ஒரே நேரத்தில் நோயாளிகள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தால் மருத்துவச் சிக்கல்கள் எந்தளவுக்கு ஏற்படும் என்ற புரிந்துணர்வு கிடைத்தது. ஆகவே, மார்ச் இறுதி நாள்கள் முதல் மே தொடக்க நாள்கள் வரை முழுக்க அதைச் சாத்தியப்படுத்துவதை நோக்கிச் செயல்பட்டோம். அதற்காக, இந்தியா மேற்கொண்டதுதான் தொடர் லாக்டௌன்.

இது, நாம் கடந்து வந்த விஷயங்கள்.

சரி, இனி நம் வருங்காலத்தைப் பற்றிப் பார்க்கலாம். வருங்கால விஷயத்தில், இந்தியாவை முன்னிறுத்தி சூழல்களை அணுகுவது சரியாக இருக்குமென்பதால், அதுகுறித்து மட்டும் சொல்கிறேன். இனி சொல்லப்போவதெல்லாம் கணிப்புகள்தான் என்பதால், மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் புரிந்துகொள்ளுங்கள்..

`ஃப்ளாட்டனிங் தி கர்வ்
`ஃப்ளாட்டனிங் தி கர்வ்
#FlattenTheCurve: கொரோனாவை இன்னும் கட்டுக்குள்தான் வைத்திருக்கிறதா இந்தியா?

மே - ஜூன் மாதங்களில், இதுவரை நாம் மேற்கொண்ட லாக்டௌனின் விளைவாக நோய்ப்பரவல் கட்டுக்குள் வருவதைப் பார்க்கலாம். குறிப்பாக நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பது மற்றும் இரட்டிப்பாகும் காலம் தாமதப்படுவது போன்ற விஷயங்கள் நடக்கக்கூடும்.

இந்த இரண்டு பலன்களையும் நாம் உணரும் நேரமும், லாக்டௌன் தளர்வு அமலுக்கு வந்து இரு வாரங்கள் முடியும் நேரமும் ஏறத்தாழ ஒத்துப்போகும். இருவாரம் என்பது, கோவிட் - 19 கொரோனாவுக்கான நோயரும்புக்காலம். இந்த இரண்டு வார இடைப்பட்ட காலத்தில், லாக்டௌன் தளர்வு காரணமாக வைரஸ் மீண்டும் பரவக்கூடும். அந்த அதிகரிப்பின் விளைவு, பாசிட்டிவ்வாகவும் இருக்கலாம் நெகடிவ்வாகவும் இருக்கலாம். இரண்டுக்குமே நாம் தயாராக இருக்க வேண்டும்.

லாக்டௌன்
லாக்டௌன்

நெகடிவ்வாக என்ன நடக்கலாம்?

மார்ச் - ஏப்ரல் நோயாளிகளின் அதிகரித்ததைப்போல நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரிக்கலாம். இப்படி அதிகரிக்கும்போது, மருத்துவச் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியொரு நிலை ஏற்பட்டால், நிலைமையைப் பொறுத்து மீண்டும் ஆங்காங்கே லாக்டௌனுக்குள் நாம் செல்லக்கூடும். ஏற்கெனவே நீண்ட லாக்டௌனை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனவே சாமானியர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம்.

பாசிட்டிவ்வாக என்ன நடக்கலாம்?

நாள்பட்ட காரணத்தினால் (*வைரஸ் ஜனவரி இறுதியிலிருந்தே இந்தியாவில் இருக்கிறது என்ற அடிப்படையில் சொல்லப்படும் கருத்து இது) வைரஸானது, தனது வீரியத்தைக் குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி நிகழ்ந்தால், நோய்த்தொற்று ஏற்பட்டாலும்கூட, சம்பந்தப்பட்ட நபருக்கு இப்போது இருக்கும் அளவுக்குத் தீவிரமான பாதிப்பு ஏற்படாது. ஆகவே குணப்படுத்துவது எளிமையாக மாறலாம்.

ஹெர்டு இம்யூனிட்டி - குழு நோய் எதிர்ப்பு சக்தி
ஹெர்டு இம்யூனிட்டி - குழு நோய் எதிர்ப்பு சக்தி

இது இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன. ஒன்று பாதிப்பு எப்படியும் அதிகரித்திருக்கும் - குணப்படுத்தும் விகிதமும் அதிகரித்திருக்கும். இது, ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் குழு நோய் எதிர்ப்பு சக்தியை மக்களுக்குத் தந்திருக்கும். அதாவது, நோய்க்கு எதிரான ஆன்டிபாடியைப் பெரும்பாலான மக்கள் பெற்றிருப்பர். அப்படி நடந்துவிட்டால், மக்கள் அனைவரும் தங்களை மட்டுமன்றிச் சுற்றி இருப்பவர்களையும் தற்காத்து விடுவர். காரணம் பெரும்பாலானோர் நோய்க்கான எதிர்ப்பு சக்தியைப் பெறும்போது, சமூகப்பரவல் தடுக்கப்பட்டுவிடும். நோய் மேலும் பரவாது, பரவினாலும் சிக்கல் இல்லை.

`ஹெர்டு இம்யூனிட்டி' கோட்பாடு... இந்தியா வென்ற நோய்கள் முதல் பிரிட்டன் செய்த கொரோனா பிழைவரை!

இதில், குழு நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் எப்படிப் பெறுகின்றனர் என்பதைப் பொறுத்து பின்விளைவுகள் ஏற்படலாம். குழு நோய் எதிர்ப்பு சக்தியை நாம் இயற்கையாக உருவாக அனுமதிக்கிறோமா (மக்களில் பெரும்பாலானோரை நோயைப் பெறவிட்டு, அவர்களை குணப்படுத்தி அந்த நோய்க்கு எதிரான ஆன்டிபாடியைப் பெற அனுமதிப்பது) அல்லது செயற்கையாக உருவாக்கி மக்களுக்குத் தருகிறோமா (தடுப்பு மருந்து உருவாக்கி, அதைப் பெரும்பாலான மக்களுக்குத் தருகிறோமா) என்பதைப் பொறுத்துதான் பின்விளைவுகள் அமையும்.

தடுப்பூசி
தடுப்பூசி

செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு தடுப்பூசியாகத் தரப்பட்டால் பின்விளைவுகள் மிகமிகக் குறைவு - பலன்கள் மிகவும் அதிகம். ஆனால் இயற்கையாக உருவானால், அவை எத்தனை நாள்களுக்கு நீடித்த பலனைத் தரும் என நமக்குத் தெரியாது. நீடித்த பலனைத் தராத ஆன்டிபாடிகள், மீண்டும் தொற்று ஏற்படும் சூழலை ஏற்படுத்திவிடலாம். அப்படி நடந்துவிட்டால், மீண்டும் நோய்ப்பரவுதல் வேகமாகும். இருப்பினும், வைரஸ் குறைவான வீரியத்தையே வெளிப்படுத்தும் என நாம் எதிர்பார்ப்பதால், அப்படி மீண்டும் நோய் பரவினால் நன்மைகளை நாம் எதிர்நோக்கலாம்.

இவை அனைத்திலும் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல், நாள்படும்போது வைரஸ் தனது தீவிரத்தன்மையையும் தாக்கத்தையும் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதுதான். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த தாக்கத்தோடுதான் பரவுகிறது என்கின்றன மேல்நாட்டுத் தரவுகள். அமெரிக்காவில் (அங்குதான் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது என்பதால் அதை உதாரணத்துக்கு எடுக்கிறோம்) இருக்கும் கொரோனா வைரஸின் அமைப்பு மற்றும் இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸின் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்தத் தரவு சொல்லப்படுகிறது.

கொரோனா தீர்வு
கொரோனா தீர்வு

ஆகவே வருங்காலங்களில் (ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு) பரவும் கொரோனா குறைந்தளவு தீவிரத்தன்மையோடே இருக்குமென பாசிட்டிவ்வாக நினைப்போம். இப்படிக் குறைந்த தீவிரத்தோடு பரவும் கொரோனாவினால், இறப்பு விகிதமும் குறைவாக இருக்கும். அப்படியிருக்கும்பட்சத்தில், இயற்கையாக மக்கள் குழு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது எந்த விதத்திலும் பிரச்னையாக இருக்காது.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, காலம். காலம், எளிய தீர்வொன்றை நமக்கு நிச்சயம் காட்டும். அது தடுப்பூசியாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை. இயற்கையாக, எளிமையான விஷயங்களை காலம் நமக்குக் காண்பிக்கலாம். இதற்கான சிறந்த உதாரணமாக, டெங்குவைக் குறிப்பிடலாம். காரணம், டெங்குவுக்கு இறப்பு விகிதம் உண்டு - ஆனால் தடுப்பு மருந்தோ சிகிச்சை மருந்தோ கிடையாது.

டெங்கு
டெங்கு

ஆனால், கொசுவை ஒழித்தால் டெங்குவிலிருந்து மக்களைத் தற்காக்கலாம் எனக் காலம் நமக்கு உணர்த்தியது. அதைநோக்கி நாம் செயல்பட்டால், நோயைத் தடுத்துவிடலாம் எனும்போது, அதை விரைவுபடுத்தினோம். அப்படியான ஒரு பாசிட்டிவ் விஷயம், கோவிட் - 19 கொரோனாவுக்கும் தெரியவரலாம்" என பாசிட்டிவாக முடிக்கிறார் வைராலஜிஸ்ட் ஜெயஶ்ரீ ஷர்மா.

காலம் எல்லா பிரச்னைகளுக்குமான பதில்களோடு காத்திருக்கிறது. கொரோனா மட்டும் விதிவிலக்காகிவிடுமா என்ன?!
வைராலஜிஸ்ட் ஜெயஶ்ரீ ஷர்மா
நம்புவோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு