Published:Updated:

அறை எண் 215ல் கொரோனா... ராஜீவ் காந்தி மருத்துவமனை நிலவரம் என்ன? #spotvisit

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில், கொரோனா நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அங்கு, தற்போது சூழல் எப்படி உள்ளது?

கடந்த சில நாள்களாக கொரோனாவின் தாக்கம் சீனாவில் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, ஓமனில் இருந்து சென்னை வந்த 45 வயது காஞ்சிபுரம் இன்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது.

கொரோனா
கொரோனா

இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரத்யேக சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டுமே கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க ஏதுவான கட்டமைப்புகள் உள்ளதாக, சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில், கொரோனா நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அங்கு, தற்போது சூழல் எப்படி உள்ளது?

கொரோனா
கொரோனா

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தோம்.

எப்போதும்போல பரபரப்பாகவே காணப்பட்டது மருத்துவமனை வளாகம். ஆனால், உள்ளே நுழைந்தவுடன் அங்கு ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கவனித்தோம். மருத்துவமனை வளாகத்தில், பிளாக் (1) ஒன்றுக்கு முன்னதாக 'தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவு - அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டிருந்த அந்த அறைதான், கொரோனா பரவல் அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கான முதல்கட்ட மருத்துவ உதவி அளிக்கப்படும் அறை.

நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர் ஒருவர், "கொரோனா நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனை வருவோரை முதலில் இங்குதான் அனுமதிப்போம். இங்கு வைத்து பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர், மேல் தளத்துக்குக் கொண்டுசெல்வோம். அங்குதான் கொரோனா நோய்க்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அறை எண் 215 சென்று பாருங்கள்" என்றார்.

101 வயது சீன முதியவரின் நம்பிக்கை... காணாமல்போன கொரோனா!

மருத்துவமனையின் தரைத்தளம் எப்போதும் போலவே காணப்பட்டது. மருந்துக்கும் மருத்துவத்துக்கும் வரிசைகட்டி காத்திருந்த மக்களைக் காணமுடிந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

படிக்கட்டுகள் ஏறி முதல் மாடிக்குச் சென்றதும், பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது. எங்கு பார்த்தாலும் முகக் கவசம் அணிந்துகொண்டு பரபரப்பாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள் மருத்துவர்கள். ஆனால், மருத்துவர்களைத் தவிர்த்து, அந்தத் தளத்தில் குழுமியிருந்த பொது மக்கள் யாருமே முகக்கவசம் அணியவில்லை, ஒரு சிலரைத் தவிர. அப்படி முகக் கவசம் அணிந்திருந்த சிலரிடம் பேசியதில், அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு அருகில்தான் கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதென்பதால், இந்த மாஸ்க் என்றார்கள்.

அந்த இரண்டு மூன்று பேரைத் தவிர அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்கள் அருகில்தான் கொரோனா சிகிச்சைப் பிரிவு இருக்கிறது என்பதே தெரியவில்லை. அதில் பலருக்கு கொரோனா என்றால் என்னவென்றே தெரியவில்லை.

கொரோனா வைரஸ் தீவிரத்தை அதிகப்படுத்தும் தவறுகள்! #VikatanPhotoCards

விவரம் தெரிந்தவர்கள், முகக்கவசம் அணிந்து அருகில் இருப்பவர்களிடமிருந்து சற்றே விலகி இருந்தனர். விவரம் தெரியாதவர்கள், அங்கேயே தரையில் உட்கார்ந்து கொண்டும் படுத்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர்.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் அறை எண் 215-ஐ யாரும் எளிதில் சென்றடைய முடியாத வகையில் தடுப்புகள் அமைத்திருந்தனர். குறிப்பிட்ட அந்த சிகிச்சைப் பிரிவு பகுதியில், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அப்படியே உள்ளே செல்லும் மருத்துவர்களும் முகக்கவசம், கையுறைகள் மற்றும் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பிரத்யேக ஆடைகள் போன்றவற்றை அணிந்த பின்னரே உள்ளே செல்கின்றனர்.

`கொரோனா பாதிப்பு; லீவ் வேண்டும்!' -தலைமை ஆசிரியைக்கு அதிர்ச்சிகொடுத்த சென்னை மாணவர் #Viral

நாம், அந்த கொரோனா சிகிச்சை அறையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, பெண் ஒருவரும் அந்த அறையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்ததைக் கவனித்தோம். அந்தப் பெண்ணுக்கும் அந்த அறைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது தெரிந்தது. அவரிடம் சென்று பேசினோம்.

அறை எண் 215ல் கொரோனா... ராஜீவ் காந்தி மருத்துவமனை நிலவரம் என்ன? #spotvisit

"என் கணவரை இங்கதான் அனுமதிச்சிருக்கோம். அவர் ஜவுளி வியாபாரி. அதனால அடிக்கடி மலேசியா போய்ட்டு வருவாரு. அந்த மாதிரிதான் இந்த முறையும் போய்ட்டு சென்னை வந்தாரு. ஆனா, வந்த கொஞ்ச நாள் கழிச்சு தொடர்ந்து இருமல், காய்ச்சல்னு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுச்சு. அதனால அவரை இங்க கொண்டுவந்தோம். ஆரம்பத்துல, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்குனு டாக்டர்கள் சொன்னாங்க. ஆனா இப்ப, ரிசல்ட் நெகடிவ்வாதான் வந்துருக்கு" என்றார்.

தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் பேசியதில், உள்ளே மொத்தம் மூன்று பேர் நோய் அறிகுறிகளுடன் இருப்பதாகக் கூறினார். அந்த மூன்று பேரில் ஒருவர், கொரியாவிலிருந்து வந்தவர் என்றும், மற்றொருவரைப் பற்றி தெரியவில்லை என்றும் கூறினார்.

எப்போதும் இரைச்சலுடன் காணப்படும் அந்தத் தளம், ஒருவித நிசப்தத்தின் நிழல் மூடிக் காணப்பட்டது.

டீன் டாக்டர் ஜெயந்தி
டீன் டாக்டர் ஜெயந்தி

மருத்துவமனையின் டீன், டாக்டர் ஜெயந்தியிடம் பேசினோம். "எங்கள் மருத்துவமனையில் இதுவரை இரண்டு பேர் கொரோனா நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு ஏற்கெனவே கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் உடல் நிலையும் சீராக உள்ளது.

ஒரு பக்கம் கொரோனா.. மறுபக்கம் பறவைக் காய்ச்சல்! - உஷார் நிலையில் நீலகிரி

மற்றொரு நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் நெகட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. அதனால் பயப்படத் தேவையில்லை. மற்றபடி, மக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை. இந்த நோய் குறித்த விழிப்போடு இருந்தால் மட்டும் போதும் " என்றார்.

இதற்கிடையே அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றிரவு ட்விட்டரில் கொரோனா தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

``நமது மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்வாக வந்துள்ளது. இந்த விரைவான மீட்பு சாத்தியமானது, தமிழ்நாடு சுகாதாரத்துறையின் துல்லியமான சிகிச்சை மற்றும் நிபுணத்துவத்தால் மட்டுமே. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு