Published:Updated:

வீட்டுக்குள்ளேயே வாழ்க்கை... அதிகரிக்கும் வைட்டமின்-டி குறைபாடு!

வைட்டமின்-டி
வைட்டமின்-டி

காலையில் 7 - 9 மணி வரையில் உள்ள சூரிய ஒளியில் வைட்டமின்-டி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் 5 வயது முதல் 65 வயதுவரை உள்ளவர்கள் தங்கள் உடலில் சூரிய ஒளி படும்படி 10 நிமிடங்களிலிருந்து 30 நிமிடம்வரை நின்றாலே போதும்.

வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று காலில் சக்கரத்தைக் கட்டி ஓடிக்கொண்டிருந்தவர்களை சில மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறது கொரோனா!

வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் வைட்டமின்-டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, நம் உடலுக்கு வைட்டமின்-டி கிடைப்பதற்கான முக்கிய வழி 'சூரிய ஒளி.' ஆனால், சூரிய ஒளி நம் உடலில்படும் வகையில் நாம் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறோம். இதனால் பெரும்பாலானோருக்கு வைட்டமின்-டி குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவர் சத்ய விக்னேஷ்
மருத்துவர் சத்ய விக்னேஷ்

வைட்டமின்-டி குறைபாடு ஏற்பட்டால் என்ன விதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும், உடலுக்கு வைட்டமின்-டி கிடைக்க என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து எலும்பு முறிவு அறுவைசிகிச்சை மருத்துவர் சத்ய விக்னேஷிடம் பேசினோம்.

வைட்டமின்-டி

Vitamin D
Vitamin D

"வைட்டமின்-டி நம் உடலின் வளர்சிதை மாற்றங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளை உறிஞ்சி எலும்பில் சேமித்து வைக்கவும், உடலின் வளர்ச்சிக்கும் வைட்டமின்-டி உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதிலும் வைட்டமின்-டி முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக கொரோனா போன்ற ஃப்ளு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நம் உடலைத் தாக்கும்போது வைட்டமின்-டி ஓர் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி விளைவை ஏற்படுத்துகிறது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு உடலில் ஏற்படும் 'சைட்டோகைன் புயல் (Cytokine Storm)' என்ற நிலை ஏற்படாமலிருக்க வைட்டமின்-டி உதவுகிறது.

காலை, மதிய, இரவு உணவு... இப்படி இருக்க வேண்டும்!

சைட்டோகைன் புயல்

வைரஸ் உடலில் நுழையும்போது அதைக் கண்டறிந்து, உடலில் உள்ள மேக்ரோபேஜ் எனும் வெள்ளை அணுக்கள் வைரஸுக்கு எதிராகச் சில புரோட்டீன்களை வெளியிடும். அதுவே சைட்டோகைன் எனப்படும்.

உடம்பில் ஓர் இடத்தில் வைரஸ் தாக்கும்போது இந்த சைட்டோகைன்கள் அந்த வைரஸை எதிர்த்துப் போரிடும். இது இதயத்துடிப்பு மற்றும் உடல் வெப்பத்தை அதிகரித்து, ரத்தக் கட்டுகளை ஏற்படுத்தி வைரஸ் தாக்குதலைப் பரவாமல் தடுக்கும்.

Corona virus
Corona virus
Unsplash

வைரஸ் தாக்குதலை வெற்றிகரமாக நிறுத்திவிட்டால் இந்த எதிர்வினைகள் நின்றுவிடும். ஆனால், சில நேரங்களில் இது போன்ற எதிர்வினை கட்டுப்பாடில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த நிகழ்வுதான் சைட்டோகைன் புயல் எனப்படுகிறது. இதில் தாக்கப்படுவது வைரஸ்கள் அல்ல. உடலின் உறுப்புகளே! இந்த சைட்டோகைன் புயலில் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். இந்த விபரீத விளைவைத் தடுக்கக் கூடிய முக்கியப் பொறுப்பை வகிக்கிறது வைட்டமின்-டி. எனவே, வைட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் உடலில் சைட்டோகைன் புயல் உருவானால் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின்-டி குறைபாடு

பொதுவாக 50-100 மைக்ரோ கிராம் அளவு வைட்டமின்-டி ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் இருக்க வேண்டும்.

காலையில் 7-9 மணி வரையில் உள்ள சூரிய ஒளியில் வைட்டமின்-டி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் 5 வயது முதல் 65 வயதுவரை உள்ளவர்கள் தங்கள் உடலில் சூரிய ஒளி படும்படி 10 முதல் 30 நிமிடங்கள்வரை நின்றாலே போதும். அவர்களின் உடலுக்குத் தேவையான வைட்டமின்-டி கிடைத்துவிடும்.

சூரிய ஒளி
சூரிய ஒளி

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள லாக்டௌன் காரணமாக வெளியில் எங்குமே செல்ல முடியாமல் இருப்பதனால் நமக்குச் சூரிய ஒளியின் வழியே வைட்டமின்-டி கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஒருவருக்குச் சூரியஒளி மற்றும் உணவு இரண்டின் வழியாகவும் வைட்டமின்-டி கிடைக்கவில்லை என்றால் அவருக்கு வைட்டமின்-டி குறைபாடு ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு வைட்டமின்-டி குறைவால் ரிக்கெட்ஸ் (Rickets) ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் கால் எலும்புகள் வளைந்துபோகும். இடுப்பு எலும்புகள் இயல்பான அகன்ற தோற்றத்தை இழந்து குறுகிக் காணப்படும்.

பெரியவர்களுக்கு வைட்டமின்-டி குறைவால் ஆஸ்டியோமலேசியா (Osteomalacia) என்ற குறைபாடு ஏற்பட்டு எலும்பு பலவீனமாகிறது. எலும்பு மூட்டு இணைப்புகளில் கீல்வாத நோயான ஆர்த்ரைடிஸ் ஏற்பட வைட்டமின்-டி குறைபாடு ஒரு முக்கியக் காரணம்.

நோய் எதிர்ப்புத்திறனைக் குறைத்து COVID-19-க்கு வழிவகுக்கும் புகைப்பழக்கம்!

தீர்வு என்ன?

Vitamin D
Vitamin D

உடலுக்கு வைட்டமின்-டி கிடைக்கச் சிறந்த வழி சூரியஒளி. தினமும் 7 - 9 மணி வரையில் காலை வெயில் உடலில்படும்படி 10-30 நிமிடங்கள் நடக்கலாம். வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை என்றாலும் மொட்டைமாடி, பால்கனி அல்லது வீட்டின் பின்புறம் என வெயில் வரும் இடங்களில் சிறிது நேரம் நிற்கலாம்.

இது தவிர, உணவுப்பொருள்களில் வெயில் படும்படி வளர்க்கப்பட்ட உணவுக்காளான்களில் ஓரளவுக்கு வைட்டமின்-டி நிறைந்துள்ளது. வைட்டமின்-டி சேர்க்கப்பட்ட பால், தயிர் பொருள்களும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இறால், சால்மன், மத்தி போன்ற மீன்கள் மற்றும் அவற்றிலிருந்து எடுக்கப்படும் கல்லீரல் எண்ணெய், பீஃப் லிவர் போன்றவற்றில் வைட்டமின்-டி உள்ளது.

வைட்டமின்-டி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பின் ஒரு மருத்துவரை அணுகி அவர் கூறும் ஆலோசனையின் அடிப்படையில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது" என்றார் மருத்துவர் சத்ய விக்னேஷ்.

அடுத்த கட்டுரைக்கு