40+ வயதில் ஏற்படும் மிட்லைஃப் க்ரைசிஸ்... எப்படிக் கடப்பது? - மனநல மருத்துவர் ஆலோசனை

`மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னைக்கான முக்கியக் காரணம், மனநலனில் கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருத்தல்தான்.’
நம் அனைவருக்குமே, நம் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில், வாழ்தலின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியான நேரத்தில், `என்ன ஆனாலும் சரிப்பா, வாழ்ந்து பார்த்துடறேன்' என உற்சாகத்துடன் சொல்லி, வழக்கத்தைவிடவும் அதிக புத்துணர்ச்சியோடு செயல்பட்டிருப்போம்.

அந்த நேரத்தில், வாழ்வில் நடக்கும் எந்த விஷயத்துக்குமே துவண்டு போகாமல், சுற்றிச்சுழன்று கொண்டிருந்திருப்போம். அப்படியான தருணங்களில், நம்மையே அறியாமல், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகக்கூட இருந்திருப்போம்!
ஆனால், அப்போதான் வரும் அந்த யூ-டர்ன்... வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நமக்குப் புரியவைப்பதற்கு.

காரணமே இல்லாமல், `என்ன வாழ்க்கைடா இது' எனத் துவண்டுபோவது, எப்போது யாரைப் பார்த்தாலும் `மனசு சரியில்லப்பா' என்று சொல்லி, பார்க்கும் எல்லாவற்றின் மீதும் கவலைகொள்வது என மனநிலையில் தடுமாற்றம் ஏற்படத் தொடங்கும். வாழ்வின் மீதுள்ள பிடிப்பு மொத்தமும் போய், `இனி என்ன செய்யுறது' எனப் புரியாமல் திகைத்து திக்கற்று நிற்போம். அடுத்தது என்ன என்ற கேள்வியும், அது தரும் பயங்களும் மட்டுமே நிறைந்ததுபோல வாழ்க்கை தெரியும்.
வெயிட். இதுவும் தற்காலிகமானதுதான். இதுவும் ஒரு கட்டத்தில் கடந்து போகும்.
விஷயம் என்னவென்றால், மேற்சொன்ன இந்த இரண்டு நிலைகளுமே, வெவ்வேறு படிநிலைகளைக் கொண்டவை. வாழ்க்கையை எந்த நிலையில், எப்படியான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நம்மோடு பயணிக்கும் மனிதர்கள் எப்படியானவர்கள், அவர்கள் மூலம் நாம் அன்றாடம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என்னென்ன போன்றவற்றையெல்லாம் பொறுத்துதான் இவையாவும் அமையும். 'இந்தப் பட்டியலில், அவரவரின் வயதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளனர் மருத்துவ ஆய்வாளர்கள். ஆம், காரணமே இல்லாமல் ஒருவர் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு, அவரின் வயதும் ஒரு காரணமாம். இந்த வகையில், நடுத்தர வயதிலுள்ளவர்களுக்கு, அவர்களின் வயதின் காரணமாக `காரணமே இல்லாமல்' அதீத சோகம் அல்லது பயம் அதிகம் ஏற்படுகிறதாம். இந்த நிலை, `மிட் லைஃப் க்ரைசிஸ்' எனக் குறிப்பிடப்படுகிறது.

'மிட்லைஃப் க்ரைசிஸ்' பற்றி மேற்கொண்ட ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் இங்கே.
எந்த வயதிலுள்ளவர்களுக்கு, மிட்லைஃப் க்ரைசிஸ் பாதிப்பு அதீத தீவிரத்தன்மையுடன் இருக்கிறது என்பது குறித்து, `பாங்க் ஆஃப் இங்கிலாந்தின்' முன்னாள் பொருளாதார வல்லுநர் டேவின் ப்ளான்ச்ஃப்ளவர் (David Blanchflower) தலைமையில் ஆய்வுக்குழுவொன்று செயல்பட்டது. ஏறத்தாழ 132 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் அந்த ஆய்வில், மிட்லைஃப் க்ரைசிஸால், 47 வயதை ஒட்டியவர்களே தீவிரமாக பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்தது. இந்த ஆய்வு குறித்து, மனநல மருத்துவர் வசந்திடம் பேசினோம்.

ஆய்வுக்காக ஒவ்வொரு நாட்டிலும், வயது அடிப்படையில் அங்குள்ள மக்களின் மகிழ்ச்சி அளவுகோல் குறித்த தகவல்கள் பெறப்பட்டன. உடன், 'எந்த வயதில் எவ்வளவு சோகமாக இருந்தீர்கள், எப்போது பயத்தோடு இருந்தீர்கள்' என்பது குறித்த தகவல்கள் யாவும் பெறப்பட்டன. இதில், `47 வயதில் அதீத மிட்லைஃப் க்ரைசிஸ் ஏற்படுகிறது' என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த ஆய்வு குறித்து, மனநல மருத்துவர் வசந்திடம் பேசினோம்.

``மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னைக்கான முக்கியக் காரணம், மனநலனில் கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருத்தல்தான். 30களின் இறுதியிலேயோ 40களின் தொடக்கத்திலேயோகூட ஒருவருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டுவிடலாம் என்பதால், முப்பதை தாண்டிய பின்னரே மனநலனில் கவனமாக இருக்கத் தொடங்க வேண்டும். இங்கு, 30களைத் தாண்டிய பின்னர் நம் வாழ்க்கை அலுவலகம், வேலை, குடும்பம் என ஏதோவொன்றின் பின்னே பின்னப்பட்டுவிடுகிறது.
மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னைகளைத் தடுக்கச் சிறந்த வழி, திட்டமிடுதல்மனநல மருத்துவர் வசந்த்
அதற்கிடையில், நமக்காகவும் நாம் இயங்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம் என்பதுதான் பிரச்னை. அனைத்து வயதினருமே, தங்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, மனநலனில் கூடுதல் அக்கறை காட்டவேண்டியது அவசியம். மனநிறைவான வாழ்க்கையை முன்னெடுத்தால் மட்டுமே மிட்லைஃப் க்ரைசிஸை முழுமையாக வரும் முன் தடுக்கமுடியும்.

`என்னால் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்போது மிட்லைஃப் க்ரைசிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது' என்பவர்கள், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மனநலப் பிரச்னைகள் அனைத்துமே, முறையான ஆலோசனை மூலம் சரிசெய்ய முடிபவைதான் என்பதால், பிரச்னை குறித்த பயம் அறவே வேண்டாம். ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான் என்ற உத்வேகத்துடன் இருக்கப் பழகுங்கள். உங்களை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றைச் செய்து வாருங்கள்..
மகிழ்ச்சியான வாழ்க்கையை, வாழ்வியலை தினந்தோறும் முன்னெடுங்கள். உங்களுக்கென பிரத்யேக நேரத்தைச் செலவிடத் தொடங்குங்கள்
40 வயதென்பது, ஒருவர் புரொஃபஷனலாகத் தன்னுடைய பெஸ்ட்டைக் கொடுத்துவிட்டு சற்றே பெருமூச்சுவிடத் தொடங்கும் தருணம் என்பதால், வேலையைச் சற்று சோர்வுடனோ அலட்சியத்துடனோ அணுகும் மனநிலை இருக்கும். அப்படியான நேரத்தில் மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னையும் ஏற்பட்டால், வருங்காலம் குறித்த பயம் ஏற்படத் தொடங்கும். இப்படியான சிக்கல்களையெல்லாம் தடுக்கச் சிறந்த வழி, திட்டமிடுதல்தான்.

வாழ்வில் எதன் மீதெல்லாம் உங்களுக்கு பயம் இருக்கிறதோ, அவற்றில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை முன்கூட்டியே அனுமானித்து, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளைச் செய்து வாருங்கள். முன்பே சொன்னதுபோல, ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான். தினமும் போகின்ற போக்கில் வாழாமல், வாழ்க்கையை நேர்த்தியான திட்டமிடலோடு வாழ்ந்து வாருங்கள். முக்கியமாகப் பொருளாதார தேவைகள் குறித்து தகுந்த நபரோடு ஆலோசித்து சரியாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்" என்கிறார் அவர்.