Published:Updated:

என்ன சாப்பிடலாம்... என்ன சாப்பிடக் கூடாது? - ஒரு FAQ

வெயிட்லாஸ் முதல் ஆரோக்கியம் வரை

பிரீமியம் ஸ்டோரி
‘வொர்க் ஃப்ரம் ஹோமி’ல் பலருக்கும் ஏற்படக் கூடிய முதல் பிரச்னை, உடல்நலம் சார்ந்ததே. ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலை செய்வது, தாமதமாகச் சாப்பிடுவது, நொறுக்குத்தீனிகளை அதிகம் கொறிப்பது, உணவைத் தவிர்ப்பது என ஆரோக்கியத்தை ஒவ்வொரு நொடியும் தவறவிட்டுக்கொண்டிருக்கிறோம்.

இதன் காரணமாக உடல் எடையில் தொடங்கி உறுப்புகள் செயலிழப்புவரை எத்தனையோ பாதிப்புகள்.

WFH-ல் நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க அவள் விகடன் சார்பில் ‘வெயிட்லாஸ் முதல் ஆரோக்கியம் வரை’ என்ற `வெபினார்' ஒன்று நடத்தப்பட்டது. இதில் பிரபலங்களின் டயட்டீஷியனான ஷைனி சுரேந்திரன் கலந்துகொண்டு வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். நிகழ்ச்சியில் வாசகர்களால் கேட்கப்பட்ட ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள் அற்றும் டயட்டீஷியன் அளித்த பதில்களிலிருந்து...

 ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

சப்பாத்தி சாப்பிடுவதால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளதா?

அரிசி சாதத்துடன் ஒப்பிடும்போது சப்பாத்தியை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க ஓரளவு உதவும். தினமும் ஒருவேளை சேர்த்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் இதை அதிக அளவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்களின் உடல் எடைக்கேற்ப இரண்டோ, மூன்றோ எடுத்துக்கொள்ளலாம். கோதுமைக்குப் பதில் சிறுதானியங்களிலும் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

தினமும் பால், டீ, காபி அருந்தலாமா?

தினமும் பால் அருந்துவதால் பிரச்னை ஏற்படாது. டீ, காபியைத் தவிர்க்க முடிந்தவர்கள் தவிர்த்துவிடலாம். தவிர்க்க இயலாதவர்கள் அதிகபட்சம் தினமும் இரண்டு வேளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு மேல் டீ, காபி அருந்துவதால் சிலருக்குத் தூக்கம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. அதனால் மாலை 4 மணிக்குப் பிறகு டீ, காபி அருந்துவதைத் தவிர்க்கவும்.

வெள்ளை சர்க்கரையை ஒருநாளைக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்?

வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பது நாம் அறிந்ததே. இதைத் தவிர்க்க முடியாதவர்கள் மட்டும் ஒருநாளைக்கு இரண்டு டீஸ்பூன் (10 கிராம்) அளவில் டீ, காபியில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

என்ன சாப்பிடலாம்... என்ன சாப்பிடக் கூடாது? - ஒரு FAQ

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் காய்கறிகள், பழங்கள், கீரை மற்றும் பருப்பு வகைகளை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுதானியங்களைக் கூழ் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். ரசம், மோர் அருந்தலாம், உணவில் அதிக காரம், உப்பு, எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை ஜூஸ் செய்து அருந்தாமல், அப்படியே சாப்பிடலாம். சோயா உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. எப்போதாவது ஒருபிடி வேர்க்கடலை எடுத்துக்கொள்வதில் பிரச்னை இல்லை.

ஒரு பங்கு சாதம் மீதி மூன்று பங்கு காய்கறி என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் உங்களது தினசரி உணவு. தினமும் யோகாசனம் செய்யுங்கள். முடிந்தால் தினமும் பத்தாயிரம் அடிகளாவது நடப்பது தைராய்டு காரணமாக கூடிய உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?

குழந்தைகள், வளரும் இளைஞர்கள் ஒருநாளைக்கு இரண்டு, மூன்று முட்டைகள் கூட சாப்பிடலாம். நடுத்தர வயதினர், வயதானவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. முடி நன்றாக வளரும். முட்டையை அவித்தோ அல்லது கேரட், குடமிளகாய் சேர்த்து ஆம்லெட்டாகவோ சாப்பிடலாம்.

இறைச்சியை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாமா?

இறைச்சி புரதச்சத்து மிகுந்த உணவு. இளைஞர்கள், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் கால் கிலோ அளவுக்கு இறைச்சியைச் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக அனைவரும் வாரத்தில் ஒரு நாளைக்கு சிக்கனும், பத்து நாள்களுக்கு ஒருமுறை மட்டனும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று முறை சிக்கன், இரண்டு முறை மட்டன் கொடுக்கலாம். வயதானவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வேறு ஏதாவது உடல்நல பிரச்னை உள்ளவர்கள் அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவரின் ஆலோசனையின்படி இறைச்சியை உணவில் சேர்ப்பதைப் பற்றி முடிவெடுக்கலாம்.

என்ன சாப்பிடலாம்... என்ன சாப்பிடக் கூடாது? - ஒரு FAQ

உடலுக்கு வைட்டமின்-டி கிடைக்கச் சிறந்த வழி என்ன?

சூரிய ஒளி மூலம் வைட்டமின்-டி நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. தினமும் அரை மணிநேரம் நம் உடலில் சூரிய ஒளி படும் விதத்தில் வெயிலில் நிற்கவோ அல்லது நடக்கவோ செய்யலாம். 6-10 மணியிலான காலை வெயில் அல்லது 4.30-6 மணியிலான மாலை வெயில் சிறிது நேரம் உடலில் படும்படி பார்த்துக்கொண்டாலே போதுமான அளவு வைட்டமின்-டி நமக்குக் கிடைத்துவிடும். இதைத் தவிர்த்து பால், மீன், காளான் போன்ற உணவுப்பொருள்களில் வைட்டமின்-டி நிறைந்துள்ளது.

தும்மல் பிரச்னை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வழிகள் உள்ளனவா?

ஒருவருக்குப் பல்வேறு காரணங்களால் தும்மல் பிரச்னை ஏற்படலாம். வீட்டைச் சுற்றி உள்ள செடிகளில் இருந்துவரும் வரும் மகரந்தம், செல்லப்பிராணிகள், வீட்டில் படிந்திருக்கும் தூசு, நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருள்கள், வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் கிருமிநாசினிகள் கூட தும்மல் பிரச்னையை ஏற்படுத்தலாம். சிலர்க்கு வேர்க்கடலை, சோயா, முட்டை, நண்டு, இறால் போன்ற உணவுப் பொருள்கள் கூட தும்மல் ஏற்படக் காரணமாகலாம். இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முதலில், உங்களுக்கு எதனால் தும்மல் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அவற்றிலிருந்து விலகி இருங்கள். பிறகு அதற்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் தொப்பையை எப்படிக் குறைக்கலாம்?

குழந்தை பிறந்த பிறகு பெரும்பாலான பெண்களுக்குத் தொப்பை ஏற்படுகிறது. உடற்பயிற்சி மூலமே இதைச் சரிசெய்ய இயலும். அதனால் பிரசவத்தால் தொப்பை ஏற்பட்டுள்ள பெண்கள் உடனடியாக ஒரு பிசியோதெரப்பிஸ்டை அணுகி தொப்பையைக் குறைக்கத் தகுந்த உடற்பயிற்சியைக் கேட்டு அவற்றைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு மேற்கொள்ளுங்கள். இது தவிர உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நிறைய காய்கறிகள், பருப்பு சேர்த்துக்கொள்ளலாம். சாதம், சப்பாத்தி போன்றவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நொறுக்குத்தீனிகளை அவசியம் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில் நிறையப் பழங்கள் சாப்பிடலாம்.

நீரிழிவு உள்ளவர்களுக்கான டயட் எப்படி இருக்க வேண்டும்?

தினமும் காலையில் டீ, காபி அருந்தும் போது சர்க்கரை சேர்க்க வேண்டாம். முதல் நாள் இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதை மறுநாள் காலையில் எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் ஐந்து பாதாம் சாப்பிடலாம். காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். மதிய உணவுக்கு முன்பாக ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம். மதிய உணவில் சாதம் குறைவாகவும், காய்கறிகளும் பருப்பும் அதிகமாகவும் இருக்க வேண்டும். சுட்ட அப்பளம் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் கூடாது. மீனைக் குழம்பாக வைத்துச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு உள்ளவர்கள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய உருளை, கேரட், பீட்ரூட் போன்ற கிழங்குகள், காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது. 20-50 வயதுக்குள் இருப்பவர்கள், தங்களுக்கு எந்த உடல்நல குறைபாடும் இல்லை என்றால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். குழந்தைகளுக்குத் தினமும் வாழைப்பழம் கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடற்பயிற்சி செய்வதற்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். இரவு வாழைப்பழம் சாப்பிடுவது மறுநாள் காலையில் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

உடல் எடையை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்?

புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் தசை வளர்ச்சி நன்றாக இருக்கும். வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாம். காய்கறிகளை நெய்யில் தாளித்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம். இறைச்சி, முட்டையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மோர், இளநீர் போன்ற நீர்மங்களுக்கு (Liquid) பதிலாக ஜூஸ், மில்க் ஷேக் போன்ற கூழ்மங்களை (Semisolid) அருந்தலாம். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். கட்டாயம் எட்டு மணிநேர உறக்கம் அவசியம். சரியாகத் தூங்கினாலே போதுமான அளவு வளர்ச்சி ஹார்மோன்கள் உடலில் சுரந்து உடல் எடை அதிகரிக்கும். சத்துமாவு கஞ்சி உடல் எடையை அதிகரிக்க ஏற்ற ஒன்று.

சமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது?

சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் எல்லாமே சமையலுக்கு உகந்தவைதாம். எப்போதும் ஒரே எண்ணெயைப் பயன்படுத்தாமல் கூட்டு, பொரியல், குழம்பு ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வகையான எண்ணெயைப் பயன்படுத்திச் சமைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு