Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் ப்ளீடிங்; அபார்ஷன் அறிகுறியாக இருக்குமா?

கர்ப்பிணி (Representational Image)

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் ப்ளீடிங்; அபார்ஷன் அறிகுறியாக இருக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
கர்ப்பிணி (Representational Image)

கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்படுவது சாதாரணமானதா... கருச்சிதைவின் அறிகுறியாக இருக்குமா?

- மிருதுளா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``கர்ப்ப காலத்தில் 10 முதல் 15 சதவிகிதப் பெண்களுக்கு ப்ளீடிங் ஏற்படுகிறது. கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஏற்படுவது, கர்ப்பத்தின் இறுதிநாள்களில் ஏற்படுவது என கர்ப்ப கால ரத்தப்போக்கை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முதல் வகை ரத்தப்போக்கு கர்ப்பத்தின் முதல் 13 வாரங்களுக்குள் ஏற்படுவது. இப்படி கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஏற்படுகிற ரத்தப்போக்கு எல்லாமே ஆபத்தானவை அல்ல.

ஆபத்தில்லாத ப்ளீடிங்கில் `இம்ப்ளான்ட்டேஷன் ப்ளீடிங்' என்பது ஒருவகை. கருவாக உருவான முட்டையானது குழாயிலிருந்து நகர்ந்துசென்று கர்ப்பப்பைக்குள் ஊன்றி வளரும்போது சிலருக்கு லேசான ரத்தக் கசிவு இருக்கும். இது வழக்கமாக இரண்டு, மூன்று நாள்களில் சரியாகிவிடும் என்பதால் இது குறித்து பயப்படத் தேவையில்லை. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியான செர்விக்ஸில் புதிதாக நிறைய ரத்த நாளங்கள் உருவாகும். அப்படி உருவாகும்போதும் சிலருக்கு சில நேரம் ப்ளீடிங் இருக்கலாம். இதுவும் பயப்படத் தேவையில்லாதது.

கர்ப்பப்பைக்குள் கரு உருவாகாமல் கருக்குழாயிலோ, வேறு பகுதிகளிலோ கரு உருவாவதை `எக்டோபிக் பிரெக்னென்சி' என்கிறோம். இதில் வயிற்றுவலியுடன் தலைச்சுற்றலும், தோள்பட்டை வலியும், ப்ளீடிங்கும் இருக்கும். இது சற்றே ஆபத்தான விஷயம். கரு வளர, வளர கருக்குழாய் வெடித்து தாய்க்கு ஆபத்து நேரலாம். இதற்கு உடனே மருத்துவரை அணுக வேண்டும். எளிமையான ஸ்கேன் மூலம் இது சாதாரண கர்ப்பமா, கருக்குழாய் கர்ப்பமா என்று தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து அபார்ஷனின் அறிகுறியாகவும் ரத்தப்போக்கு இருக்கலாம். முதல் 3 மாதங்களில் 10 சதவிகிதப் பெண்களுக்கு கரு கலையலாம். இதில் வயிற்றுவலியுடன் அதிக அளவிலான ரத்தப்போக்கும் இருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பத்திலும் இதுபோன்று ரத்தப்போக்கு ஏற்படலாம் என்பதால் இதற்கும் மருத்துவ ஆலோசனை அவசியம்.

கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் ஏற்படும் ரத்தப்போக்கு கொஞ்சம் ஆபத்தானதாகவே இருக்கும். பிரசவத்துக்குப் பிறகு பிரிய வேண்டிய நஞ்சு, தாயின் உயர் ரத்த அழுத்தம் காரணமாக முன்கூட்டியே பிரியலாம். அதன் விளைவாக அதிக வயிற்றுவலியும் ரத்தப்போக்கும் இருக்கலாம். ரத்த அழுத்தம் அதிகமுள்ள கர்ப்பிணி என்றால் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இவருக்கு உடனே டெலிவரி செய்ய வேண்டியிருக்கும்.

கர்ப்பிணி
கர்ப்பிணி

வழக்கமாக கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு அருகில் குழந்தையின் தலை கீழே இருக்க வேண்டும். அப்படியில்லாமல் நஞ்சு கீழே இருக்கும் `ப்ளசென்ட்டா ப்ரிவியா' நிலையிலும் ரத்தப்போக்கு இருக்கலாம். இவர்களுக்கு சுகப்பிரசவம் பார்க்க முடியாது. கர்ப்பத்தின் 34 - 35 வாரங்களில் லேசான ப்ளீடிங்கும் வயிற்றுவலியும் அல்லது சளியும் ரத்தமும் கலந்தது போன்றோ இருந்தால் குறைமாதப் பிரசவவலி ஏற்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

எனவே, எந்த மாதத்தில் ப்ளீடிங் ஏற்படுகிறது, அது பிரச்னைக்குரியதா, பிரச்னையற்றதா என்பதையெல்லாம் உங்கள் மருத்துவரால்தான் சரியாகச் சொல்ல முடியும். எந்த வகையான ப்ளீடிங்காக இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?