குறட்டையை நிறுத்த முடியுமா... இயற்கையா, செயற்கையா? #DoubtOfCommonMan

இவ்வாறு குறட்டை விடுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குறட்டையைத் தவிர்க்கலாம். மேலும் அதனால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் நிரந்தர தீர்வு காணலாம்.
"உறங்கும் போது மனிதனுக்கு ஏற்படும் குறட்டையால் அருகில் உறங்கும் பலரது தூக்கம் கெடுவது உண்மையான ஒன்று. அதே போல் குறட்டை விடுவதால் கணவன் அல்லது மனைவி மற்றொரு தரப்பினரிடமிருந்து விவாகரத்து கோரும் வரை மனித வரலாற்றில் குறட்டை பிரச்னை நீண்டிருக்கிறது. இவ்வாறு வரும் குறட்டை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியுமா? மருத்துவம் என்ன சொல்கிறது?" என விகடனின் டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் தேடும் வகையில் மருத்துவர் அஸ்வின் கருப்பனைத் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து அவர் கூறுகையில், "குறட்டை விடுவதற்கான முக்கிய காரணம் இரவு வேளைகளில் நமது சுவாச பாதையில் ஏற்படும் அடைப்பே ஆகும். இதனால்தான் குறட்டை வரும். இதற்கு பொதுவாக மூக்கு தண்டு வளைந்திருத்தலும் காரணமாக இருக்கும். மூக்கு தண்டு வளைந்து இருப்பதால் அதன் வழியாக சரியாக சுவாசிக்க இயலாததால் குறட்டை தானாக வந்துவிடுகிறது.
இரண்டாவதாக உடல் பருமனாக இருப்பதால் குறட்டை வரும். இதற்கு Obstructive Sleep Apnea (OSA) சின்ட்ரோம் என்பது பெயர். சாதாரணமாக பருமனாக இருப்பவர்களுக்கு கன்னப் பகுதியில் இருக்கும் கொழுப்பானது அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் தூங்கும் போது நாக்கு பின்னால் போய் விழும். அதனால் அவர்களுக்கு குறட்டை ஒலி இயற்கையாகவே ஏற்படும். இதை தவிர மூச்சு விடும் குழாயில் அடைப்பு இருந்தாலோ,விசிங்க் இருந்தாலோ, மெய் மறந்து தூங்குவதாலோ இது ஏற்படும். இவற்றை எல்லாம் சரி செய்தால் குறட்டை வருவது நின்று விடும்.

மூக்கு தண்டு வளைந்திருப்பவர்களுக்கு அதை சரி செய்வதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குறட்டையை சரி செய்துவிடலாம். சில பேர் தைராய்ட், கொழுப்பு, நீரிழிவு ஆகிய காரணங்களால் பருமனாக இருப்பர். இதை உடற்பயிற்சி செய்து சரிசெய்வதன் மூலம் குறட்டை விடுவதைத் தடுக்கலாம். இதை தவிர பைபாப் (Bi Pap), சிபாப் (C Pap) என்னும் சாதனத்தை மேலைநாடுகளில் பயன்படுத்துகிறார்கள். நாமும் இப்போது அதை பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்.
இதை தூங்கும்போது மூக்கில் அல்லது வாயில் வைத்து தூங்கினால் காற்றை அழுத்தமாக வெளியிடும். இதனால் சுவாசம் சீராக இருக்கும். இதை அதிக பருமனாக இருப்பவர்களுக்கு நாம் பயன்படுத்துகிறோம். இவ்வாறு குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குறட்டை விடுவதை நிறுத்தலாம். இதை தவிர நாம் மிகவும் அசதியாக இருக்கும்போது குறட்டை வருவது இயற்கையான ஒன்றே. இவ்வாறு அசதியாக தூங்கும் போது உடலுக்கு அதிக சுவாசம் தேவைப்படும். அதை ஈடுகொடுக்கதான் குறட்டை ஏற்படுகிறது. இது வியாதியால் ஏற்படுவது அல்ல" என்றார்.

இவ்வாறு குறட்டை விடுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குறட்டையைத் தவிர்க்கலாம். மேலும் அதனால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் நிரந்தர தீர்வு காணலாம். கடைசியாக, உங்களுக்கு அருகில் உறங்குபவரும் தினமும் குறட்டைப் பற்றிய கவலையில்லாமல் நிம்மதியாக உறங்கலாம்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
