Published:Updated:

மூளையில் ரத்தக்கசிவு; காட்டிக்கொடுக்குமா காதுகள்? `தர்பார்' காட்சியின் பின்னணி என்ன? #ExpertOpinion

தர்பார்
தர்பார்

மூளையில் ரத்தக்கசிவு சிறிய அளவு இருந்தால், அவர்களால் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்க முடியும்.

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது, `தர்பார்' திரைப்படம். படத்தில் ஒரு காட்சியில், விபத்தில் சிக்கும் ரஜினியின் மகள் நிவேதா தாமஸின் காதில் ரத்தக்கசிவு ஏற்படும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பரவி வருவது கண்டறியப்படும்.

நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ்
`மக்கள் ஏன் அப்படி அழைக்கிறார்கள் எனத்  தெரியவில்லை’- `தர்பார்' மேடையில் மனம் திறந்த ரஜினி

அதனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் உயிரிழப்பார் என்று மருத்துவர் எச்சரிப்பதைப் போன்று காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

உண்மையிலேயே, மூளைக்கும் காதுகளுக்கும் தொடர்பிருக்கிறதா... மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டவர்கள் உயிரிழந்துவிடுவார்களா என்று விபத்து மற்றும் அவசர கால மருத்துவர் தவப்பழனியிடம் கேட்டோம்.

"விபத்துக்குப் பிறகு, காதிலிருந்து ரத்தம் கசிவது என்பது மண்டை ஓட்டில் அடிபட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி. மண்டை ஓட்டில் தீவிரமான காயம், மூளையின் ரத்தக்குழாய்களில் கட்டுப்படுத்த முடியாத அளவு ரத்தக்கசிவு, மூளையில் அழுத்தம் ஏற்படுதல், மூளையில் ரத்தக்கசிவுக்கு சிகிச்சை அளிக்காமல் இருத்தல் ஆகிய காரணங்களால் உயிரிழப்பு ஏற்படும்.

Dr.Davapalani
Dr.Davapalani

மூளையின் ஓரிடத்தில் மட்டுமே ரத்தக்கசிவு என்றால் அறுவைசிகிச்சையின் மூலம் உயிரைக் காப்பாற்றிவிட முடியும். பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தீவிரமடைந்தால் உயிரிழப்பு ஏற்படும். மேலும், மூளையில் ரத்தக்கசிவு சிறிதளவு மட்டுமே இருந்தால், அவர்களால் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்க முடியும். தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க கைகால்கள் இழுத்துக்கொள்வது, சுயநினைவை இழத்தல் போன்றவை ஏற்படும்.

பொன்னான நேரம் என்று அழைக்கப்படும் விபத்து ஏற்பட்டு ஒருமணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துவந்துவிட்டால், உயிரைக் காப்பாற்ற வாய்ப்புகள் அதிகம்.
மூளை நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்
இந்தியர்களின் மூளை, ஐரோப்பியர், சீனர்களின் மூளையைவிடச் சிறியது! - ஐ.ஐ.டி ஆய்வில் தகவல்

காதில் ரத்தக்கசிவு ஏற்படும் அனைவரும் உயிரிழந்துவிடுவார்கள் என்பது இல்லை. ஆனால், ரத்தக்கசிவு இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே ஸ்கேன் செய்து காரணத்தைக் கண்டறிந்து, சிகிச்சையைத் தொடங்க வேண்டும்" என்றார்.

தினம் பல நூறு உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கும் சாலை விபத்துகளில் சிக்கும் சிலர், இதுபோன்ற தீவிர பிரச்னைகளுக்கு ஆளாகிவிடுவார்கள். சாலை விபத்துகளால் மூளைக்கு ஏற்படும் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் என்ன என்று மூளை நரம்பியல் மருத்துவர் பாலமுருகன் விளக்குகிறார்.

Accident
Accident
pixabay

"உடலிலுள்ள ரத்த ஓட்டத்தில் 30 சதவிகிதம் மூளைக்குத்தான் செல்கிறது. அதனால் தலையில் அடிபடும்போது மூளைப் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரத்தக்குழாய்கள் சேதமடைந்து ரத்தக்கசிவு, மண்டை ஓடு உடைந்து ஏற்படலாம். மண்டை ஓடு உடைந்து அதிலிருந்து ஒரு சின்ன எலும்பு சென்று மூளையில் குத்தினாலும் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மூளைக்கும் மண்டைஓட்டுக்கும் நடுவே உள்ள பகுதியில் ரத்தம் உறைவதற்கு வாய்ப்புள்ளது. ரத்தம் உறைவது மூளையின் உட்பகுதியிலும் இருக்கலாம், வெளிப்பகுதியிலும் இருக்கலாம்.

சில நேரங்களில், பின்தலையில் சிறுமூளைப் பகுதியில் ரத்தம் உறைவதற்கும் வாய்ப்புள்ளது. ரத்த உறைவு சிறிய அளவில் இருந்தால், மாத்திரைகளிலேயே அதைச் சரிசெய்துவிட முடியும். தீவிரம் அதிகமாக இருந்தால், அதாவது 35 மில்லிக்கு மேல் ரத்தம் தேங்கிவிட்டால், அறுவைசிகிச்சை செய்துதான் உறைவை அகற்ற வேண்டியிருக்கும்.

நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்
நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்

அறிகுறிகள்

தலையில் அடிபட்டவுடன் சுயநினைவில்லாமல் இருப்பது, வலிப்பு வருவது, காது அல்லது மூக்கிலிருந்து ரத்தக்கசிவு, கண்ணின் வெள்ளை நிறப் பகுதியில் ரத்தம் உறைவது போன்றவை மூளையில் அடிபட்டிருப்பதற்கான அறிகுறிகள். தலைப்பகுதியில் அடிபட்டால் மண்டை ஓட்டுக்குள் உருவாகும் அழுத்தம், ரத்தக் கசிவினால் தலைக்குள் தேங்கும் ரத்தம் ஆகிய இரண்டு காரணங்களால், சிலருக்குத் தலையில் அடிபட்டதும் முதல் அறிகுறியாக வாந்தி ஏற்படும். மூளையில் 35 மில்லிக்கு மேல் ரத்தம் தேங்கினால், உடனடியாக சுயநினைவை இழக்கும் நிலை ஏற்படும்.

எனவே, விபத்து ஏற்பட்ட பிறகு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், மூளைப் பகுதியில் காயம் பட்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், பொன்னான நேரம் என்று அழைக்கப்படும் விபத்து ஏற்பட்டு ஒருமணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து வந்துவிட்டால், உயிரைக் காப்பாற்ற வாய்ப்புகள் அதிகம். மூளையில் காயம், ரத்தக்கசிவு, ரத்த உறைவு போன்ற பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை செய்து மீண்டவர்களுக்குப் பின்னாளில் நினைவு குறைதல், உடலின் ஒரு பக்கம் செயலிழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கும் தற்போது பல்வேறு தெரப்பிகள், பிஸியோதெரபி சிகிச்சைகள் போன்றவை தீர்வாக உள்ளன.

brain
brain
Pixabay

எத்தனை மருத்துவத் தீர்வுகள் இருந்தாலும் வருமுன் காப்பதுதான் நல்லது. மோட்டார் சைக்கிள், கார் என எந்த வாகனத்தில் சென்று சாலை விபத்துக்குள்ளானாலும், இதுபோன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு