COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணம்; ஆனால் காரணம் அனபிலாக்ஸிஸ் அல்ல... மருத்துவ விளக்கம்!

அனபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டால்தான் அது தடுப்பூசியால் உருவான பிரச்னை என்று அர்த்தம். இதுவரை உலகளவிலும் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் இதுபோன்ற தீவிர ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டதாகத் தரவுகள் இல்லை
கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை முதல் நாடெங்கும் நடைபெற்று வருகிறது. இதில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் நூற்றுக் கணக்கானவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சாதாரண பக்கவிளைவுகளே.
மூன்று பேர் மட்டுமே கூடுதல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றி வந்த 46 வயதான மஹிபால் சிங் என்பவர், தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை மதியம் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்த அவர், திடீரென உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்குப் பிறகுதான் அவரது உடல்நிலை மோசமானது என்று புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த மஹிபால் சிங்கின் உடற்கூறாய்வின் முடிவில் இதய நோயின் காரணமாகத் தீவிர தொற்று உருவாகி, ரத்தத்தில் நச்சேற்றம் இருந்துள்ளது. அதன் காரணமாக ஏற்படும் `செப்டிசீமிக் ஷாக்' (septicemic shock) என்ற பிரச்னையால் உடனடியாக உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் பணியாற்றும் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, ``மஹிபால் சிங்கின் மரணத்துக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட அதே தினமே அவர் இரவுப் பணிக்காக மருத்துவமனைக்கு வந்தார். இரவுப் பணியை முடித்துவிட்டுதான் வீட்டுக்குப் போயிருக்கிறார். அப்படிப் பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்டிருக்க வேண்டும். அடுத்த நாள் மதியம்தான் நெஞ்சு வலிப்பதாகக் கூறியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் இரண்டு நுரையீரல்களிலும் சீழ் பிடித்திருந்ததாகவும், இதயத்தின் வலது வென்ரிக்கிள் பகுதியிலிருந்த ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருந்ததாகவும், இதயத்தின் அறைகளிலும், பிரதான ரத்தக்குழாயிலும் அதிக அளவு ரத்தம் தேங்கியிருந்ததாகவும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது நுரையீரல், இதயம் மற்றும் ரத்த மாதிரிகள் அனைத்தும் கூடுதல் பரிசோதனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊடகங்களிடம் பேசிய மஹிபால் சிங்கின் மகன் விஷால் சிங், ``என் அப்பா இறப்புக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் காரணம். தடுப்பூசி போடும் விஷயத்தில் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்த பிறகு, அவருக்கு மூச்சுத்திணறல் இருந்தது. தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அவருக்கு லேசான நிமோனியா காய்ச்சலும், சளி இருமல் பிரச்னையும் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொண்டற்குப் பிறகு அவரது நிலை மோசமாகியது" என்கிறார்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுகொள்வதற்கு முன்பு மஹிபால் சிங்குக்கு போதிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச அரசும் தடுப்பூசிக்கும் அவர் இறப்புக்கும் தொடர்பில்லை என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது. சனிக்கிழமை மட்டும் அம்மாநிலத்தில் 317 மையங்களில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என 22,643 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறை ஊழியர் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரைச் சேர்ந்தவரும் அம்மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்தருமான 43 வயது ஆண் ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். திங்கள்கிழமை காலை வழக்கம் போல் வேலைக்கு வந்திருக்கிறார். காலை 9.30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாகக் கூறிய நிலையில் சரிந்து கீழே விழுந்திருக்கிறார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 24 மணி நேரத்துக்குப் பிறகும் அவருக்கு எதுவும் பிரச்னை ஏற்படவில்லை. மாரடைப்பினால்தான் அவர் உயிரிழந்திருக்கிறார். இது முற்றிலும் தற்செயல் நிகழ்வுதான் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உயிர் போகும் அளவுக்கு ஆபத்தானதா?
தடுப்பூசி போடுவது உயிர் போகும் அளவுக்கு ஆபத்தானதாக அமையுமா என்று தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்.
``தடுப்பூசி போட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதால், தடுப்பூசி போட்டதும் லேசான காய்ச்சல், சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற சிறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது ஒரு தற்செயல் நிகழ்வுதான். இறந்தவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்கெனவே இருந்திருக்கிறது. செப்டிசீமிக் ஷாக் என்பதும் தீவிர தொற்று பாதிப்பினால்தான் ஏற்படும்.

அதனால்தான் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிட் தடுப்பூசியை மட்டுமல்ல எந்தத் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
அனபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டால்தான் அது தடுப்பூசியால் உருவான பிரச்னை என்று அர்த்தம். இதுவரை உலகளவிலும் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் இதுபோன்ற தீவிர ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டதாகத் தரவுகள் இல்லை" என்கிறார்.
புதிய அறிவுறுத்தல்கள்
நாடு முழுவதும் திங்கள் கிழமை மாலை வரை 3,81,305 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணிகளில் 61 சதவிகிதம் டார்கெட் எட்டப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பு மருந்தை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.

நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் (Immuno suppressive) மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்,
ரத்தக்கசிவு குறைபாடு உடையவர்கள் அல்லது ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள்,
தீவிர நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், காய்ச்சல் இருப்பவர்கள்,
ஏதேனும் ஒவ்வாமை பாதித்த வரலாறு இருப்பவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மது வேண்டாம்!
கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த 45 நாள்களுக்கு மது அருந்த வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தடுப்பூசியின் செயல்பாட்டை மது தடுக்கும் என்பதால் அதைத் தவிர்க்க அறிவுறுத்துகின்றனர்.