Published:Updated:

மனிதன் ஏன் திடீரென யோசிக்காமல் முடிவெடுக்கிறான்… எமோஷனல் ஹை ஜாக்கும், அமிக்டலாவும் செய்வதென்ன?

அமிக்டலா- எமோஷனல் ஹை ஜாக்
அமிக்டலா- எமோஷனல் ஹை ஜாக்

புத்தம் புது காலை தொடரின் இன்றைய பகுதி அமோஷனல் ஹை ஜாக் குறித்தும், மூளையில் முக்கியமான இடத்தை வகிக்கும் அமிக்டலா பற்றியும் பேசுகிறது.

பன்னெடுங்காலமாக யோசிப்பதற்காகவே பரிமாண வளர்ச்சி அடைந்திருக்கும் நமது மூளையில், யோசிக்காமல் முடிவெடுப்பதற்கென்றும் ஒருபகுதி இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா… ஆனால், அதை நம் மூளை அப்படியே பாதுகாக்க ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே?!

அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், கடந்த ஞாயிறன்று மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு பகிர்கிறேன்.

மனிதன் ஏன் திடீரென யோசிக்காமல் முடிவெடுக்கிறான்… எமோஷனல் ஹை ஜாக்கும், அமிக்டலாவும் செய்வதென்ன?

"மேடம்... ப்ளஸ் 2 படிக்கிற பொண்ணு ஒன்னு, துணிக்குப் போடுற நீலத்தைக் குடிச்சுட்டானு கொண்டு வந்திருக்காங்க. எமெர்ஜென்சில படுக்க வைச்சிருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் வாங்க" என்று செவிலியர் எனக்கு அழைத்தபோது இரவு மணி பத்து. அந்தப் பெண்ணின் கைகளிலும், உதட்டிலும் நீலம் படிந்திருந்தது. அவளது பல்ஸ், பிபி, ஆக்சிஜன் அளவு எல்லாம் நார்மலாக இருக்க, பரிசோதிக்க வாயைத் திறக்கச் சொன்னவுடன் பயந்தபடி… "என்ன பண்ணுவீங்க டாக்டர்... எனக்கு மூக்குல ட்யூப் போடுவீங்களா, ஊசி போட வேண்டியிருக்குமா?" என்று கேட்கும்போதே அவளது கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது.

"என்னம்மா… ஏதோ ப்ளூ சேலஞ்சுன்னு எல்லாரும் புளூ கலர் டிரஸ் போட்டுட்டு ஃபோட்டோ போடுற மாதிரி, நீயும் ஒரு புளூ சேலஞ்ச் பண்ணிட்டு வந்து நிக்கறே?" என்று சிரித்தபடி கேட்டதும்தான் சற்று இயல்பானாள்.

"டாக்டர்... கடைசியா நடந்த சயின்ஸ் டெஸ்ட்ல நான் ஃபெயிலாயிட்டேன். அதுக்கு எங்கப்பா பயங்கரமா திட்டினதோட அடிக்கவும் வந்துட்டாரு. பக்கத்து வீட்டுல எல்லாம் தெரிஞ்சு ஒரே ஷேம் ஆயிடுச்சு. அந்த கோபத்துலதான் பக்கத்துல இருந்த நீலத்தை எடுத்துக் குடிச்சுட்டேன். ஆனா, குடிக்கும்போதே தப்பு பண்றோம்னு தோணினதும் ரொம்ப கம்மியா தான் டாக்டர் குடிச்சேன்’’ என்றாள்.

இப்போது வைத்தியம் யாருக்கு செய்வது என்று புரியாமல் அவளைத் தட்டிக்கொடுத்து, "அதுக்காக இதையெல்லாம் பண்ணாதம்மா… நீ குடிச்ச நீலத்தால எதனாச்சும் பாதிப்பு வந்தா யாருக்கு சிரமம்?" என்று கேட்டபடி வயிற்றுப்புண் மற்றும் அலர்ஜி ஏற்படாமல் தவிர்க்கும் மருந்துகளை அப்பெண்ணுக்கு வழங்குமாறு செவிலியரிடம் சொன்னேன். வெளியே வந்தால் அப்பெண்ணின் அப்பா கையைப் பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.

மனிதன் ஏன் திடீரென யோசிக்காமல் முடிவெடுக்கிறான்… எமோஷனல் ஹை ஜாக்கும், அமிக்டலாவும் செய்வதென்ன?

"ஏதோ கோபத்துல திட்டிட்டேன் டாக்டர். உடனே இப்படி பண்ணிட்டா... எதும் பிரச்னையில்லையே" என்று பதற்றத்துடன் கேட்டார்.

"ஒன்னும் பயப்பட வேண்டாங்க... இருந்தாலும் கொஞ்ச நேரம் அப்சர்வேஷன்ல மட்டும் இருக்கட்டும்" என்று அவரை தைரியப்படுத்தினேன்.

அப்பா பெண் இருவருமே இப்போது கலங்கி நின்றாலும், இரண்டு பேரும் உணர்ச்சி வசப்பட்டு யோசிக்காமல் செய்ததன் விளைவுதான் இது. இதை ‘எமோஷனல் ஹை-ஜாக்’ என்று சொல்வார்கள்.

எமோஷனல் ஹை-ஜாக்

இன்றைய சூழலில், நம் எல்லோரிடையேயும் காணப்படும் பயம், பதற்றம் போன்ற உணர்வுகள்… கோபம், கொந்தளிப்பு போன்ற சமயங்கள்… அத்துடன் மகிழ்ச்சி, வெற்றி, கொண்டாட்டங்கள் ஆகிய வேளைகளில் யோசிக்காமல் சில கணநேர முடிவுகளை நாம் எடுப்பதைத்தான் எமோஷனல் ஹை-ஜாக் என்று அழைக்கிறோம். ஆனால், பக்குவமடைந்த பொறுமைசாலி மனிதன்கூட இப்படி யோசிக்காமல் சிலவற்றைச் செய்துவிடுகிறானே... அதற்கு என்ன காரணம்?

இதற்கெல்லாம் காரணம் நமது மூளையின் ‘அமிக்டலா’ (amygdala) என்ற பகுதியும், அங்கு ஏற்படும் மாற்றங்களும்தான் என்கிறது மருத்துவ அறிவியல். உண்மையில், எமோஷனல் ஹை-ஜாக் என்பதை தனது ‘Emotional Intelligence: Why it can matter more than IQ?’ புத்தகத்தில், ‘அமிக்டலா ஹைஜாக்’ என்றே குறிப்பிடும் டேனியல் கோல்மேன் என்ற மனவியல் நிபுணர், ஒரு விமானத்தை கடத்தல்காரர்கள் கடத்திச் செல்வது போல, நமது சிந்தனைகளை இந்த அமிக்டலா கடத்திச் சென்றுவிடும் என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது என்ன அமிக்டலா?

எப்படி அதனால் நமது உடலுக்குள் இருந்தபடியே நாம் சிந்திப்பதை சில கணங்கள் மழுங்கடித்து விட முடிகிறது என்பதற்கு மனிதனின் பரிணாம உயிரியல் பதிலளிக்கிறது.

காட்டில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த அன்றைய மனிதனுக்கு, அந்த விலங்குகளால் ஆபத்து ஏற்படும்போது உருவானதுதான் Fight or Flight Reflex உணர்வுகள். ஒரு விலங்கு தன்னைத் தாக்கும் முன், ‘தாக்கு அல்லது ஓடு’ என்ற கணநேர முடிவுகளை யோசிக்காமல் எடுக்க வேண்டி, மனித மூளையின் அடிப்பகுதியில், இருபக்கங்களிலும் ஆயிரக்கணக்கான நரம்பு செல்கள் ஒன்றுகூடி உருவானதுதான் இந்த ‘அமிக்டலா’.

அமிக்டலா
அமிக்டலா

"மனிதன் ஒரு சிந்திக்கும் மிருகம்’’ என்கிறார் அரிஸ்டாட்டில். மனிதனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதே அவனது சிந்தித்து செயல்படும் திறன்தான். IQ என்ற மனிதனின் தனித்துவமான சிந்தனை மற்றும் புத்திசாலித்தனத்தை கட்டுப்படுத்துவது மூளையின் முன்பக்கமாக பரந்து விரிந்து காணப்படும் அவனது ஃப்ரான்ட்டல் கார்டெக்‌ஸ் பகுதியாகும்.

எல்லா நேரங்களிலும் பொறுமையாக முடிவெடுக்கும் ஐக்யூவைக் காட்டிலும், விரைந்து செயல்படும் இம்பல்ஸும் சில சமயங்களில் மனிதனுக்குத் தேவைப்பட, அந்த மாதிரி தேவைகளுக்கென மூளைக்குள்ளேயே உருவானதுதான் இந்த அமிக்டலா.

அமிக்டலா என்றால் கிரேக்க மொழியில், (almond) பாதாம் கொட்டைகள் என்று பொருளாம். வெறும் பாதாம் கொட்டை அளவு இருக்கும் இந்த அமிக்டலாவின் இரு பகுதிகள், இருவகையான திறனமைப்பு கொண்டது என்று கூறப்படுகிறது. இதில் வலது பக்க அமிக்டலா அச்சம், கோபம், விறுவிறுப்பு போன்ற மனிதனின் எதிர்மறை உணர்ச்சிகளின் கிடங்கு என்றும், இடது பக்க அமிக்டலா திருப்தி, மகிழ்ச்சி, வெற்றி போன்ற தன்னிறைவு உணர்ச்சிகளை உள்ளடக்கியது என்றும், ஆண்-பெண் மூளை வித்தியாசங்கள் அமிக்டலாவிலும் காணப்படுகிறது என்கிறார்கள்.

ஆனால், சீட் ஆஃப் எமோஷன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த அமிக்டலாவின் இருபக்கங்களிலும் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒன்றேதான். கோபம், அச்சம், வெற்றி போன்ற அதீத உணர்வுகளின் போது, அமிக்டலா ஊக்கப்படுத்தப்பட்டு, அதன் நரம்புகளில் இருந்து நார் அட்ரீனலின், அசிடைல்கோலின் போன்ற நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் வெளிப்பட்டு, அட்ரீனல் சுரப்பி உள்பட மற்ற நாளமில்லா சுரப்பிகளை ஊக்கப்படுத்தி, உடலெங்கும் Fight or Flight Reflex ரியாக்‌ஷனை உண்டாக்குகிறது.

அந்த சமயத்தில் சில நிமிடங்கள் வரை, ஃப்ரான்ட்டல் கார்டெக்ஸின் நரம்புகளை மூளையிடம் இருந்து கடத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறதாம் இந்த அமிக்டலா.

இதன் காரணமாகத்தான், பரீட்சையில் தோற்ற மகளை தந்தை அடிப்பதும், அதற்கு மகள் நீலம் குடிப்பதும் என, யோசிக்க விடாத இந்த Reflex சமயங்களில் சில வலிமையான உணர்வுகளை உண்டாக்குவதன் மூலம் சில உடனடியான, முரண்பாடான முடிவுகளை இந்த அமிக்டலா தனது ஹைஜாக்கிங் மூலமாக எடுக்க வைத்து, பிற்பாடு ஆற அமர யோசிக்கும்போது மூளை அதற்காக வருந்தும்படியும் செய்துவிடுகிறது.

மனிதன் ஏன் திடீரென யோசிக்காமல் முடிவெடுக்கிறான்… எமோஷனல் ஹை ஜாக்கும், அமிக்டலாவும் செய்வதென்ன?

எளிதில் கூற வேண்டுமென்றால் ஆதிமனிதனின் உணர்வுகள், 2,00,000 ஆண்டுகளாக இன்னும் புதுப்பிக்கப்படாமல் இருப்பதே அமிக்டலா ஹைஜாக் என்று சொல்லிவிடலாம்.

அதுமட்டுமின்றி ADHD, (anxiety) பதட்டநிலை, (panic) பீதி, Bipolar disorders போன்ற மன நோய்களுக்கும் அமிக்டலா மற்றும் லிம்பிக் சிஸ்டம் தான் காரணம் என்று சொல்லும் அறிவியல் விஞ்ஞானிகள், தமது சமீபத்திய அமிக்டலா பற்றிய ஆய்வுகளில், இந்த கோவிட் பெருந்தொற்றின் போது மன அழுத்தத்தில் மனிதர்களுக்கு அமிக்டலாவின் நரம்பூக்கிகள் அதிகப்படியாக சுரந்ததை ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.

ஆனால், இந்த எமோஷனல் ஹைஜாக்குகளுக்கும், மற்ற மன நோய்களுக்கும் மருந்து என்பது பாசமானவர்களின் ஆதரவு வார்த்தைகளும், பதட்டமான சமயத்தில் அரவணைப்பும் தான். அடிக்கடி இதனால் பாதிக்கப்படுவர்களுக்கு மனவியல் ஆலோசனைகளும், மைண்ட்ஃபுல் மெடிட்டேஷன் என்ற தியானங்களும் மற்றும் SSRI என்ற மன அமைதியை ஏற்படுத்தும் மன நோய் மருந்துகளும் தேவைப்படுகிறது.

அனைத்துக்கும் மேலாக, எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பவர்களுக்கு, உடனிருந்து மற்றவர்கள் அளிக்கும் ஆறுதல், அவர்களது மனதின் வெறும் நீலத்தை வண்ணமயமான வான வில்லாக்கும் என்பதே உண்மை.

ஆம்... நீலம் என்பது சில சமயங்களில் வெளியில் மட்டும் காணப்படுவதில்லை!

#EmotionalRelearning

அடுத்த கட்டுரைக்கு