கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளில் கறுப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு அடுத்து புதிதாக Bone death என்ற பக்கவிளைவு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோவிட் நோயாளிகளுக்கு இந்தப் பிரச்னை ஏன் ஏற்படுகிறது, அதன் தீவிரம், சிகிச்சை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவரிக்கிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தினேஷ் சௌத்ரி.
``Death என்ற வார்த்தை வருவதால் இந்தப் பிரச்னை வந்தால் உயிரிழப்பு ஏற்படும் என்ற பயம் வேண்டாம். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. இடுப்பு எலும்புப் பகுதியில்தான் Bone Death பிரச்னை பெரும்பாலும் ஏற்படும். மிக அரிதாக மூட்டு எலும்புகள், பிற சிறிய எலும்புகளிலும் ஏற்படலாம்.
இடுப்பு எலும்புக்கு வரும் ரத்த ஓட்டம் குறைந்தால் அல்லது தடைப்பட்டுவிட்டால் அது Bone Death என்று அழைக்கப்படுகிறது. எலும்பு அழுகிப்போய்விட்டது என்பார்கள். இதை மருத்துவச் சொற்களில் Avascular Necrosis என்பார்கள்.
ஏன் ஏற்படுகிறது?
எந்த உடலநலப் பிரச்னைகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வது, மரபணு காரணங்கள், அதீத மதுப்பழக்கம் உடையவர்கள் போன்றோருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். சிகிச்சையின்போது அதிகமாக ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு, கோவிட் தொற்றின் காரணமாக ரத்தம் உறையும் தன்மையில் ஏற்படும் மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் கோவிட் குணமடைந்தவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
இதில் Grade 1 - 4 என மொத்தம் 4 நிலைகள் உள்ளன. பாதிப்பு அதிகமாகி கிரேடு 3, 4 ஆகிய நிலைகளுக்குச் சென்றுவிட்டால் எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படுகிறதோ அந்தப் பகுதியில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதுதான் தீர்வாக அமையும். முதல் இரண்டு நிலைகளில் கண்டறிந்துவிட்டால் சில மருந்துகளின் மூலம் குணப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்தப் பிரச்னை ஆரம்ப நிலையிலிருக்கும்போது அறிகுறிகள் பெரும்பாலும் வெளியே தெரியாது.
எப்படி ஏற்படுகிறது?

ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு அதீத மதுப்பழக்கம், ரத்தம் உறைதல் குறைபாடு உடையவர்கள், ரத்த ஓட்டத்தில் பிரச்னை உள்ளவர்கள், அதிக உடல்பருமன் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம் கோவிட் தொற்றுதான். மீதமுள்ள காரணிகள் அதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.
கோவிட்- 19 தொற்று பாதித்தவர்களுக்கு உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தம் உறையும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் ரத்த உறைவு மூளைக்குச் சென்றால் பக்கவாதம், இதயத்துக்குச் சென்றால் மாரடைப்பு ஏற்படுகிறது. அதே உறைவு எலும்புக்குச் செல்லும்போது ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு Bone death ஏற்படுகிறது.
Bone death பிரச்னைக்கு உரிய நேரத்தில் மருத்துவ கவனம் கொடுக்கப்படாவிட்டால் வலி தீவிரமாகி, மூட்டுத் தேய்மானம், எலும்புப் பகுதி, குருத்தெலும்பு உள்ளிட்டவை அழுகத் தொடங்கிவிடும். அதன் காரணமாக நடக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, கோவிட் குணமாகிய பிறகு, இடுப்பெலும்பில் வலி, மூட்டில் வலி, நடக்கும்போது மூட்டு, இடுப்பில் வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இந்தப் பாதிப்பை ரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியாது. நோய் தீவிரமான நிலை என்றால் எக்ஸ்-ரேயில் கண்டுபிடிக்கலாம். ஆரம்ப நிலையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலமாகக் கண்டறியலாம்.
கோவிட் தொற்றால் தீவிர பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஸ்டீராய்டு மருந்துகளால் சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. அறிகுறிகளற்ற, லேசான பாதிப்புள்ளானவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு குறைவும். இருந்தாலும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வராமல் தடுக்க முடியுமா?
ஸ்டீராய்டு மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நோயாளிகளுக்குக் கொடுக்கக்கூடாது. இந்த விஷயத்தில் மருத்துவர்கள்தான் கவனமாகச் செயல்பட வேண்டும். கோவிட் வந்துவிட்டாலே நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடாது. வழிகாட்டு நெறிமுறைகளின்படி யாருக்கு எந்த அளவு தேவையோ அதை மட்டுமே கொடுக்க வேண்டும்.

தமிழத்தில் இன்னும் இந்தப் பிரச்னை கண்டறியப்படவில்லை. மும்பையில் ஒரு சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அறிகுறிகள் தெரியத் தொடங்கி, நோயாளிகள் மருத்துவரை அணுகத் தொடங்கும்போதுதான் வெளியே தெரியவரும். தமிழகத்தில் பாதிப்பு எத்தனை பேருக்கு உள்ளது என்பது வெளியே தெரிவதற்கு 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம்" என்றார்.