Published:Updated:

``நான் ஐஸ்வர்யா ராயின் மகன்...'' பரபரப்பை ஏற்படுத்திய நபரும் பின்னணியில் உள்ள உளவியல் சிக்கலும்!

சிலர் தங்களிடம் உள்ள சாயலை நடிகர்களிடமோ அல்லது மற்ற பிரபலங்களிடமோ காணும்போதும் அவர்களைத் தங்கள் சொந்தக்காரர்களாக எண்ணிக்கொள்வதுண்டு. இவர்களும் 'ஃபிரிகோலி டெலூஷன்' என்ற மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

உளவியல் சிக்கல்
உளவியல் சிக்கல்

'உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகன் நான்தான்' என்று கூறிக்கொண்டு வந்திருக்கிறார் 32 வயதான சங்கீத் குமார்! மங்களூரைச் சேர்ந்த இவர், தான் 1988-ல் லண்டனில் ஐவிஎஃப் (IVF) மூலம் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்குப் பிறந்தவர் என்றும், ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்கள் இரண்டு வயதுவரை தன்னை கவனித்துக்கொண்டதாகவும், பிறகு அவரை கைவிட்டுவிட்டு அவர் பிறப்பு பற்றிய அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டதாகவும் கூறி பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 1988-ல் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு வயது பதினைந்து!

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்
`ஓவர் திங்க்கிங் உடம்புக்கு ஆகாது பாஸ்’- அதீதமாகச் சிந்திப்பதால் வரும் பிரச்னைகளும் தீர்வுகளும்...

இது போன்ற செய்திகள் நமக்குப் புதிதல்ல. 'பிரபலங்களென்றாலே பிரச்னை வரத்தான் செய்யும்' என்பது போல் அரசியல், சினிமா போன்ற துறைகளில் உள்ள பிரபலங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் இதுபோன்று திடீர் திடீர் என்று தோன்றும் சொந்தங்கள். அருகிலேயே அம்மா, அப்பா இருக்கும்போது திடீரென்று தோன்றும் உறவுகள் "நீதான் என் மகன், மகள்" என்றும் அல்லது "நான்தான் உன் மகன்" என்றும் சண்டைக்கு வந்ததையும், "இதுதான் உன் குழந்தை" என்று தூக்கிக்கொண்டு வந்து பிரச்னை செய்ததையும் எத்தனையோ முறை பிரபலங்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம்.

அப்படி திடீரென்று தோன்றும் சொந்தங்கள் அந்தப் பிரபலங்களின் உண்மையான உறவுகள்தான் என்பதை நம்ப வைக்க நிறையவே மெனக்கெட்டுப் பல ஆதாரங்களையும் கொண்டு வருவார்கள். கடைசியில் ஆராய்ந்து பார்த்தால் அவர்களில் பெரும்பாலும் போலி உறவினர்களாகவே இருப்பார்கள். ஆனால், போலியை உண்மையென நம்பவைக்கப் பத்திரிகை, தொலைக்காட்சி செய்தி சேனல்களைக் கூட்டி அவர்கள் செய்யும் அலப்பறைகளைப் பார்த்துச் சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்குக் கோபம் மட்டும் அல்ல, அதீத மன அழுத்தமே வந்துவிடும். இது போன்ற பிரச்னைகளால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைந்த பிரபலங்களும் உண்டு!

உளவியல் சிக்கல்
உளவியல் சிக்கல்

பிரபலங்களின் உறவினர்கள் என்று கூறி வதந்தியைப் பரப்புவது எந்த மாதிரியான மனநிலை... இதுபோல் பொய் கூறி அவர்கள் சாதிக்க நினைப்பது என்ன... என்பது பற்றி மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடன் பேசினோம்.

"பிரபலங்களின் உறவினர்கள் என்று போலியாகக் கூறிக்கொண்டு வருபவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். பணம், பதவி போன்று தங்களின் காரியங்களுக்காகவும், தொலைக்காட்சி செய்திகளின் மூலம் பிரபலமடையவும் வதந்தி பரப்புபவர்கள் ஒருவகையினர். மற்றொரு வகையினர் `ஃபிரிகோலி டெலூஷன்' (Fregoli Delusion) என்ற மனநல பாதிப்பிற்கு உள்ளானவர்கள்.

இதில் முதல் வகையினரை எடுத்துக்கொண்டோம் என்றால், அவர்கள் பணம் மற்றும் தங்களுக்கு ஆதாயமான பொருள்களுக்காக வேண்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். எனவே, அவர்கள் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதால் தங்களுக்கு வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள போதிய முன்னெச்சரிக்கையுடனும் தயாரிப்புகளுடனும் இருப்பார்கள்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

ஆனால், இரண்டாம் வகையினர் அப்படி அல்ல. இவர்கள் `ஃபிரிகோலி டெலூஷன்' (Fregoli Delusion) என்ற மனநல பாதிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். `ஃபிரிகோலி டெலூஷன்' என்பது அரிதாக ஏற்படக்கூடிய மனநல பாதிப்புகளில் ஒன்று. ஒருவரின் குழந்தை பிறந்த உடனேயோ அல்லது சிறு வயதாக இருக்கும்போதோ காணாமல் போயிருக்கலாம். இது அந்த நபரின் ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். சில வருடங்கள் கழித்து ஏதேனும் ஒரு பிரபலத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது காணாமல் போன தன் குழந்தை நினைவிற்கு வந்து அந்தப் பிரபலத்தையே தம் மகனாகவோ அல்லது மகளாகவோ பாவித்து அவர்களைத் தேடியே சென்றுவிடுவார்கள். இதுதான் 'ஃபிரிகோலி டெலூஷன்' மனநிலை.

இந்த மனநிலையில் உள்ளவர்கள் பணம், பொருள்கள் வேண்டி பிரபலங்களை தங்கள் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு வருவதில்லை. இவர்கள் தாங்கள் நினைப்பதைத்தான் உண்மையென்று கருதிக் கொண்டிருப்பார்கள். அதை மற்றவர்களையும் நம்ப வைப்பார்கள்.

சிலர் தங்களிடம் உள்ள சாயலை நடிகர்களிடமோ அல்லது மற்ற பிரபலங்களிடமோ காணும்போதும் அவர்களைத் தங்கள் சொந்தக்காரர்களாக எண்ணிக்கொள்வதுண்டு. இவர்களும் `ஃபிரிகோலி டெலூஷன்' மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

உளவியல் சிக்கல்
உளவியல் சிக்கல்
அதிகம் பேசும் பெண்... அதை  விரும்பாத ஆண்... எது தவறு?! - ஓர் உளவியல் பதில்

இந்த மனநல பாதிப்பு உள்ளவர்களையும் ஏமாற்றுப் பேர்வழிகளாக நினைத்துக் கையாளும் போதுதான் பிரச்னை உருவாகிறது. தாங்கள் உண்மையென நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை மற்றவர்கள் மறுக்கும்போதும், மேலும் ஏமாற்றுக்காரர்களாக நினைத்து அவர்களைக் கையாளும் போதும் அவர்கள் மேலும் மன அழுத்தத்திற்குச் சென்றுவிடுவார்கள். இதனால் அவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, பிரபலங்களின் உறவினர்கள் என்று கற்பனையாகக் கூறிக்கொண்டிருப்பவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். அவ்வாறு அழைத்துச் செல்லும் போது `ஃபிரிகோலி டெலூஷன்' மனநல பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்படுவார்கள். இந்தப் பாதிப்பிற்குள்ளானவர்களுக்குச் சரியான மனநல மருத்துவச் சிகிச்சையை அளித்தால் அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்" என்றார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

mental health
mental health
pixabay

ஆக, பிரபலங்களின் சொந்தங்கள் எனத் திடீரென உருவெடுப்பவர்கள் அனைவரும் ஏமாற்றும் நோக்கம் உடையவர்கள் அல்ல. இப்படிக் கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு `ஃபிரிகோலி டெலூஷன்' என்ற மனநல பாதிப்பும் இருக்க வாய்ப்புள்ளது என்பதை மனதில் கொண்டு அவர்களுக்கு முறையான மனநல சிகிச்சை கிடைக்க வழிசெய்ய வேண்டும்.