Published:Updated:

Black fungus தொற்றுநோய்: கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவது ஏன்?

`Mucor' பூஞ்சையால் பரவும் தொற்றுநோய் நுரையீரல், கண்கள், மூக்கு, தாடை எலும்புகள் போன்ற இடங்களில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். கண்களில் பூஞ்சை தொற்று ஏற்படக் கண்களையே அகற்றிவிடக்கூடிய நிலைமை வரலாம்.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முதல் அலையைவிட இரண்டாம் அலையில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில்தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களிடம் புதிதாக `Black fungus' தாக்குதல் தொடங்கியிருக்கிறது. இது `Mucormycosis' எனவும் அழைக்கப்படுகிறது.

Hospitalization/ Representation Image
Hospitalization/ Representation Image
Pixabay

மும்பையிலிருக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக 25 வயது பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததற்கு மூன்று வாரங்களுக்கு முன்புதான் கொரோனா தொற்றிலிருந்து அவர் மீண்டிருக்கிறார். மூக்கில் பூஞ்சைத் தொற்று பரவியிருப்பது தெரியவர அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சையைச் செய்திருக்கிறார் மருத்துவர். அவர் கடுமையான பூஞ்சைத்தொற்றுக்கு உள்ளாகியிருந்தது அறுவை சிகிச்சையின்போது தெரியவர, பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதே பெரும்பாடாக மாறியிருக்கிறது. அந்தப் பெரும்பாட்டில் கண்ணை அகற்றித்தான் பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் மருத்துவர்.

`Mucor' எனும் பூஞ்சையால் ஏற்படும் தொற்று மூக்கு, கண் மட்டுமல்லாது மூளைவரை சென்று தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் வலிமை படைத்தது என்பது இதன்மூலம் தெரியவந்திருக்கிறது. இந்த Mucormycosis பூஞ்சைத்தொற்று எப்படிப் பரவுகிறது மற்றும் இதன் தீவிரத்தன்மையை பற்றி அறிந்துகொள்ள இதய ரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவர் கோவினி பாலசுப்பிரமணியைத் தொடர்பு கொண்டோம்.

``Mucor எனப்படும் ஒருவகை பூஞ்சைகள் தாவரங்கள், அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகள், சேமிக்கப்பட்ட தானியங்கள், பால் பொருள்கள் மற்றும் விலங்குகளின் சாணத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. மாட்டுச் சாணம், அழுகிய தாவரங்கள், பழங்கள் போன்றவற்றை உரத்துக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் இந்த வகைப் பூஞ்சைகள் மண்ணில் சர்வசாதாரணமாகவே காணப்படுகின்றன.

கூடவே, காற்றிலும் `Mucor' பூஞ்சை நுண்ணுயிரிகள் பரவிக்கிடக்க இவற்றை சுவாசிக்கும் போது நாம் இயல்பாக உள்ளிழுக்கவே செய்கிறோம். மேற்கத்திய நாடுகளைவிட இந்தியாவில் `Mucor' பூஞ்சைகள் அதிகம். இந்தப் பூஞ்சைகளால் ஏற்படும் தொற்று `Mucormycosis' என்றும் `Black fungus' என்றும் அழைக்கப்படுகிறது" என்று தொடங்கி தெளிவான விளக்கமளித்தார் அவர்.

கோவினி பாலசுப்பிரமணியன்
கோவினி பாலசுப்பிரமணியன்

``இயல்பாகவே, `Mucor' பூஞ்சைகள் காற்றிலும் மண்ணிலும் விரவிக்கிடக்கின்றன என்றால் இத்தனை காலமாக உயிரைக் கொல்லும் பாதிப்பாக இவை ஏன் செயல்படவில்லை என்ற கேள்வி சரியானது. ஏற்கெனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டுடன் மக்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதுதான் `Mucor' பூஞ்சைகள் திடீரென விஸ்வரூபம் எடுப்பதற்கு முக்கிய காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்கெனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்க, கோவிட் தொற்றாலும் பாதிக்கப்பட அவர்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கோவிட் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள ஸ்டீராய்டு மருந்துகளைப் போட்டுக்கொள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. அதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதில்லை.

Diabetic medicines
Diabetic medicines

கொரோனா இரண்டாவது அலையில் பலர் மருத்துவர் வழிகாட்டுதல்களின்றி ஸெல்ஃப் கிட்டை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் உபயோகப்படுத்தவே கூடாது. ரத்தத்தில் சர்க்கரையை எந்த அளவில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எந்த அளவில் ஸ்டீராய்டு டோஸேஜ் எடுக்க வேண்டும் போன்றவற்றை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகளவில் இருப்பதாலும், அவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவதாலும், அதனால் ஸ்டீராய்டு மருந்துகள் எடுப்பதாலும்தான் இந்தப் பிரச்னை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள்தாம் `Mucormycosis' தொற்றுக்கு முதலாவதாக ஆளாகிறார்கள். அதற்கடுத்ததாக அதிக பருமன் உடையவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் என வரிசையாக டார்கெட் செய்கிறது இந்தத் தொற்றுநோய்.

`Mucor' பூஞ்சையால் பரவும் தொற்றுநோய் நுரையீரல், கண்கள், மூக்கு, தாடை எலும்புகள் போன்ற இடங்களில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். கண்களில் பூஞ்சை தொற்று ஏற்படக் கண்களையே அகற்றிவிடக்கூடிய நிலைமை வரலாம். இது எலும்பு வரையில் பரவிவிட்டால் குணப்படுத்துவது மிகவும் கடினம். என்னதான் வைத்தியம் பார்த்தாலும் கொடுக்கும் மருந்துகளால் எலும்புகள் வரை ஊடுருவிச் சென்று பாதிப்பை குணப்படுத்த முடிவதில்லை. அதனால் அறுவைசிகிச்சை அளவுக்கு வரை இந்த நிலை செல்லலாம்.

இந்தப் பூஞ்சைகள் நுரையீரலைப் பாதிக்குமானால், நுரையீரல் முழுக்க பரவி ஒரு கூடு போலக் கட்டி அதில் குழியை உருவாக்கும். அந்தக் குழி உருவாகிவிட்டால் குருவிக் கூடு கட்டுவதுபோல அதைச் சுற்றி பூஞ்சைகள் ஒரு வளையத்தை உருவாக்கிக்கொள்ளும். அந்த வளையத்தில் இனப்பெருக்கத்தை அதிகரித்துக்கொண்டே போகும். இப்படி அதிகமாகிக்கொண்டே போனால் ஒருகட்டத்தில் அது வெடித்துவிடக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. சில வேளைகளில், ரத்த நாளங்களில்கூட இவை அரிப்பை ஏற்படுத்திவிடும். இது மிக ஆபத்தானது. அப்படி நிகழ்ந்தால் ரத்த வாந்தியே எடுத்துவிடுவார்கள், இறப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவிட் சிகிச்சை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ!

அப்படியென்றால் `Mucormycosis' தொற்றிற்கு மருந்தே கிடையாதா? சில ஆன்ட்டி ஃபங்கல் ட்ரீட்மென்ட்கள் இதற்கு இருக்கின்றன. ஆனால் அவை விலையுயர்ந்தவை. Lyophilized amphotericin b மற்றும் posaconazole மருந்துக் கலவைதான் ஆரம்ப சிகிச்சையாகக் கொடுக்கப்படுகிறது. இந்த மருத்துவம் ஆரம்ப நிலையில்தான் கைகொடுக்கும். ஒருவேளை நுரையீரலில் குழி உருவானாலோ எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அதைக் கட்டுப்படுத்துவது மிக சிரமம்" என்கிறார் இதய ரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவர் கோவினி பாலசுப்பிரமணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு