
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதனால் ஏற்படும் மரணம் அல்லது முழுமையாகக் குணமடைதல் என்ற இரண்டு துருவங்களைத் தவிர மூன்றாவதாக ஒரு பகுதி இருப்பதை தற்போது நம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது மருத்துவ உலகம்.
``கொரோனா வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்... வந்தால் இறந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது..." என்று ஒருபுறம் அச்சுறுத்தல் பதிவுகளைப் பார்ப்பது போலவே...
மறுபுறம்,
``வந்தால் பயப்படத் தேவையில்லை... கொரோனாவை தைரியமாக எதிர்கொள்ளலாம் வாருங்கள்..!"
என உற்சாகப்படுத்தும் பல பதிவுகளையும் நாம் அன்றாடம் காண்கிறோம்.
ஒரு சாதாரணர் அல்லது ஒரு பிரபலத்தின் இத்தகைய பதிவுகள் தரும் பயம் அல்லது தைரியத்தைத் தாண்டி, ``இவ்வளவுதானா இந்தக் கொரோனா, இதற்கா இவ்வளவு பயப்பட்டோம்?" என்று கொரோனாவை சுலபமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு நாம் அனைவரும் இப்போது வந்தாகிவிட்டோம்.
ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதனால் ஏற்படும் மரணம் அல்லது முழுமையாகக் குணமடைதல் என்ற இரண்டு துருவங்களைத் தவிர மூன்றாவதாக ஒரு பகுதி இருப்பதை தற்போது நம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது மருத்துவ உலகம்.
உண்மையில் மழைவெள்ளம் வடிந்த பின்பும் வெகுகாலம் அதன் பாதிப்புகள் இருப்பதைப்போல கொரோனாவில் குணமடைந்தவர்கள் வீடு திரும்பிய பிறகும், அவர்களுக்குத் தொடரும் சிக்கல்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றன சமீபத்திய புள்ளிவிவரங்கள்...
அந்தப் பெண்மணியின் பெயர் ஆனி.
வயது 50...
இங்கிலாந்தின் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் மனநல ஆலோசகராகப் பணிபுரியும் இவருக்கு, ஐந்து மாதங்களுக்கு முன் கோவிட் நோயின் பாதிப்பு ஏற்பட, இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையினரைப் போலவே எளிதாக அதிலிருந்து வெளிவந்தார் ஆனி.
``தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு மணிநேர உடற்பயிற்சி.
பிறகு சமைத்து, குளித்து, கணவரை பணிக்கு அனுப்பிய பிறகு எனது பணிக்கு புறப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஐந்து மாதங்களாக என்னால் முடிந்த ஒரே உடற்பயிற்சி, படுக்கையிலிருந்து சமையலறைக்குச் செல்வதும், பின்பு மீண்டும் படுக்கையில் வந்து ஓய்வெடுப்பதும்தான். உடலின் ஒவ்வொரு தசையும் ரணம் போல் வலிக்கிறது. அவ்வப்போது மூச்சுத்திணறலும் தொடர்கிறது. இதன் காரணமாகக் கொரோனா குணமான பின்பும் என் மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இன்னும் தொடர்கின்றன" என்கிறார் ஆனி.
பித்தப்பை அறுவைசிகிச்சைக்குப் பிறகு, வீடு திரும்பிய லாராவுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் தொண்டைவலி ஏற்பட, தன் மருத்துவரைச் சந்தித்த லாராவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பரிசோதனையில் தனக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, உடனடியாக சிகிச்சையும் வழங்கப்பட்டது. ஆனால், குணமடைந்து மீண்டும் வீடு திரும்பிய பின்னும் லாராவுக்கு கொரோனாவின் அறிகுறிகள் அனைத்தும் தொடர்ந்தன.

``கடந்த நான்கு மாதங்களாக எனக்கு காய்ச்சலும் தலைவலியும், மூச்சுத் திணறலும், உடல் அசதியும் குறையவே இல்லை" என்று கூறும் லாரா இன்னமும் நுரையீரல், இதய நோய், குடல் நோய், நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதுடன், அதற்கான சிகிச்சைகளையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
ஜூன் மாதம் நாக்பூர் மருத்துவமனையில் கோவிட் நோய்க்கு சிகிச்சைபெற்று வீடு திரும்பிய 40 வயது கணேஷுக்கு மீண்டும் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் வறட்டு இருமல் காரணமாக அவர் மருத்துவமனைக்குத் திரும்ப, தற்சமயம் வீட்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்.
உண்மையில் இவை ஆனி, லாரா மற்றும் கணேஷின் பிரச்னைகள் மட்டுமல்ல... உலகெங்கிலும் இந்தக் கொடூர நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோரின் குரலும் இதையொத்துதான் இருக்கிறது.
உலகளவில் 2 கோடி மக்களைப் பாதித்துள்ள இந்த கோவிட் நோய், நுரையீரலை அதிகம் பாதிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால், நுரையீரல்களை மட்டுமன்றி இதயம், மூளை, சிறுநீரகங்கள், கல்லீரல், ரத்த நாளங்கள் என உடலின் அனைத்து உறுப்புகளையும் இந்த வைரஸ் பாதிப்பதால், post covid effect எனப்படும், கொரோனாவுக்குப் பின்பான இதன் பின்விளைவுகளை மருத்துவ உலகம் தற்சமயம் கவலையுடன் கவனித்து வருகிறது.
சமீபத்திய ஜெர்மானிய மருத்துவ ஆய்வு (JAMA) ஒன்றில் கொரோனா நோயிலிருந்து குணமடைந்த 78 சதவிகிதத்தினருக்கு சிறியது முதல் பெரியது வரையிலான இதய பாதிப்புகள் காணப்படுகின்றன என்றும், இதில் 60 சதவிகிதம் பேருக்கு இதயத் தசைகளில் வீக்கம் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதய பாதிப்பைத் தவிர ரத்தக்குழாய் உறைதலில் ஏற்படும் பிரச்னைகள், பக்கவாதம், சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்புகள், இவையனைத்துக்கும் மேலாக மன அழுத்தமும் அதிகம் காணப்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.

இதுபோலவே இத்தாலி நாட்டின் ஓர் ஆய்வில் குணப்படுத்தப்பட்ட 600 கோவிட் நோயாளிகளைத் தொடர்ந்து கவனித்ததில், அவர்களில் 50 சதவிகிதத்தினருக்கு நுரையீரல் பிரச்னைகளும், 10 சதவிகிதத்தினருக்கு இதயநோயும்,10 சதவிகிதத்தினருக்கு நரம்புத் தளர்ச்சியும், 9 சதவிகிதத்தினருக்கு தசைகளில் தொடர்வலியும் இருப்பது கண்டறியப்பட்டது. சதவிகித அளவுகளில் இவை அவரவர் உடல் ஆரோக்கியத்திற்கேற்ப வெவ்வேறு அளவுகளில் இருந்தாலும், எபோலா, ஹெச்ஐவி போலவே,
``நாட்பட்ட கோவிட் நோய்" (Post Covid Syndrome) என்ற புதியதொரு பரிமாணத்தைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது இந்தக் கொரோனா.
எனவே, லேசான நோய் அறிகுறிகளுடன் உடனடியாக நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டு வீடு திரும்புபவர்கள் ஒருபுறமும், நுரையீரல் மற்றும் மற்ற உறுப்புகளின் பாதிப்புகளால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மறுபுறமும் என, இதுநாள் வரை இந்த நோயை இருமுனைகளைப் பற்றியே பேசி வந்த நாம்... இப்போது, இந்த இரண்டு வகையான நோயாளிகளிடமும் நோய் குணப்படுத்தப்பட்ட பின்பு காணப்படும் சில அறிகுறிகள் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம்.
Pulmonary Fibrosis எனப்படும் நுரையீரல் சுருக்கமும், ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும் இந்த நாட்பட்ட கோவிட் நோய்க்கு முக்கியக் காரணிகளாக உள்ளன என்பதுடன்
தொடரும் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல், வறட்டு இருமல், மூட்டுவலி, தூக்கமின்மை, தலைச்சுற்றல், ஞாபகமறதி, படபடப்பு, மன அழுத்தம் ஆகிய அனைத்தும் கொரோனாவுக்குப் பின்னும் தொடரும் போஸ்ட் கோவிட் அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ்கள் நுரையீரலை பெருமளவு பாதிப்பதால் நோய்க்குப் பின்பும் நுரையீரல் விரிவடையும் தன்மை குறைவதன் (pulmonary fibrosis) காரணத்தால் நாட்பட்ட நுரையீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும், இந்தப் பாதிப்பாளர்களில் பலருக்கு உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை (hypoxia) ஏற்படுவதால் தொடர் ஆக்ஸிஜன் சப்போர்ட் தரவேண்டிய நிலைக்கும் இது கொண்டு சென்றுவிடுகிறது.
இதைப்போலவே, இதயத் தசைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளும், பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து சிலருக்கு இதய நோய் மற்றும் மாரடைப்பு வரை ஏற்படவும் ஏதுவாகிறது.

இது மட்டுமல்லாமல், கணையத்தில் இன்சுலின் சுரப்பி செல்களை கொரோனா வைரஸ் தாக்குவதால், ஏற்கெனவே சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், இதுவரை சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் புதிதாக சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பை உருவாக்குகிறது இந்தக் கொரோனா.
ஆக...
வைரஸ் ஒன்றுதான் என்றாலும் பலதரப்பட்ட நோய்களை, பல்வேறு வகையான மக்களிடம் ஏற்படுத்துகிறது இந்த கோவிட் எனும் கொடிய நோய். இதுவரை, இந்த வைரஸால் உலகளவில் கிட்டத்தட்ட 2 கோடி பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 7.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதோடு இந்த எண்ணிக்கை நிற்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், இப்போதைய புது வரவாக post covid syndrome எனும் கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகள் வேறு இப்போது நம்மைப் பெரிதும் அச்சுறுத்துகின்றன.
குணமடைந்தவர்கள் உண்மையில் வெற்றி கொண்டது அவர்களது உடலுக்குள் நுழைந்த கொரோனா வைரஸை மட்டுமே. அது நம் உடலில் ஏற்படுத்திய சிக்கல்களிலிருந்து அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொண்டு நமது ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது இங்கு அவசியமாகிறது.
மேலும் மருத்துவ உலகின் வலியுறுத்தலின் பேரில் உலகெங்கிலும் கொரோனாவுக்குப் பிந்தைய புனரமைப்பு மையங்களை உலக நாடுகள் நிறுவி வருவதுடன், இவற்றை எதிர்கொள்ள மனநல ஆலோசனை மையங்களையும் ஏற்படுத்தி வருவதைப் போலவே, நமது அரசாங்கமும் இவற்றுக்கான வழிமுறைகளை எய்ம்ஸ் போன்ற முக்கிய மருத்துவமனைகளில் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
அரசுகள் இதைச் செய்யும் அதே நேரத்தில் தனிமனிதனாக நாம் செய்ய வேண்டியது என்ன?
``கொரோனாவுக்கான நிரந்தர நோயெதிர்ப்பு வரும்வரையில், அதாவது, தடுப்பூசி அல்லது herd immunity எனப்படும் கூட்டு நோயெதிர்ப்பு சக்தி ஏற்படும்வரை, ஒருமுறை இந்த நோய் நம் உடலுக்குள் நுழைந்துவிட்டால் குணமடைந்தாலும், சிறியளவிலோ, பெரியளவிலோ பாதிப்புகள் உறுதி என்பதால், இந்த வைரஸின் வீரியத்தை தயவுசெய்து குறைவாக மதிப்பிடாதீர்கள்..!" என்பதே மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய வேண்டுகோள்.
எனவேதான் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும், அதை மீறி நோய் வரும்போது, ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர் மருத்துவர்கள்.

இன்றைய காலகட்டத்தில் இந்த நாள்பட்ட சிக்கல்களைத் தவிர்க்க வேண்டுமென்றால், நோய் வராமலே பாதுகாத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.
ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி, நல் உறக்கம் ஆகிய வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்பதுடன் தனித்திருத்தல், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை முறையாகக் கழுவுதல், மாஸ்க் அணிதல் என ஆரம்பகட்டத்தில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டிய தருணம் இது என்பதுதான் இன்றளவும் உண்மை நிலையாகும்.
சிறிது அச்சுறுத்துவது போலத் தோன்றினாலும் உண்மையில் இந்தக் கட்டுரையின் நோக்கம், கொரோனாவுடன் வாழப் பழகுதல் என்பது, அதைப் பற்றி அலட்சியமாக இருக்க வேண்டியது அல்ல... அதன் பாதிப்புகளை அறிந்து அதை விட்டு விலகி வாழ அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை மறுபடி ஒருமுறை உணர்த்துவதுதான்..!