Published:Updated:

இளைஞர்களைப் பாதிக்கும் 'ஸ்டெமி'... முதியோரைப் பாதிக்கும் 'என்ஸ்டெமி' மாரடைப்பு என்றால் என்ன?

நவாஸ் ஷெரீஃபுக்கு 'என்ஸ்டெமி' மாரடைப்பு... அத்தனை ஆபத்தானதா? மருத்துவ விளக்கம்.

நவாஸ் ஷெரீஃப்
நவாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மிகவும் கவலைக்கிடமான நிலையில் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் 2018-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இரவு உணவு உண்ட பிறகு அவரின் உடல்நிலை மோசமடைந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

ஆரோக்கியமான மனிதர்களுக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கும். ஆனால், நவாஸ் ஷெரீஃப் உடம்பில் தட்டணுக்களின் எண்ணிக்கை, 2000-ஆகக் குறைந்துவிட்டது. சிறுநீரகமும் செயலிழந்துவருகிறது. மேலும், என்ஸ்டெமி (NSTEMI) வகை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"நவாஸ் ஷெரீஃப் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. ஒருவேளை அவரை நாம் இழந்துவிட நேரிடும்" என்றும் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரீஃபுக்கு ஏற்பட்டிருக்கும் என்ஸ்டெமி மாரடைப்பு என்பது என்ன... யாருக்கெல்லாம் இது ஏற்படும் என்று ஊடுருவு சிகிச்சை இதய மருத்துவர் சம்பத்குமாரிடம் கேட்டோம்.

இதய மருத்துவர் சம்பத்குமார்
இதய மருத்துவர் சம்பத்குமார்

"இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பினால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் அடைப்பு, ரத்தக்குழாய்களில் எத்தனை சதவிகிதம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கண்டறியப்படும். இதயத்தின் துடிப்பைப் பரிசோதிக்கும் ECG பரிசோதனையில் தெரியும் முடிவைக்கொண்டு, அது ஸ்டெமி (ST-Elevation Myocardial Infarction - STEMI) அல்லது என்ஸ்டெமி (Non-ST Segment Elevation Myocardial Infarction - NSTEMI) என்று பிரிக்கப்படும். ரத்தக்குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு ஏற்பட்டு, இறுக்கமான நிலையில் இருந்தால், அது ஸ்டெமி என்று கூறப்படும். 90 அல்லது 95 சதவிகித அடைப்பு ஏற்பட்டிருந்தால், அது என்ஸ்டெமி என்று கூறப்படும்.

மாரடைப்பு ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்கு வரும்பட்சத்தில், ஸ்டெமியாக இருந்தாலும் என்ஸ்டெமியாக இருந்தாலும் உடனடியாக ரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே பாதிப்பு கண்டறியப்பட்டால், ஸ்டெமியாக இருக்கும்பட்சத்தில் உடனடியாகவும், என்ஸ்டெமியாக இருந்தால் சில நாள்கள் கழித்தும் சிகிச்சை செய்யலாம். என்ஸ்டெமி நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டால், அவர்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

மாரடைப்பு முதலுதவி
மாரடைப்பு முதலுதவி

மாரடைப்புக்கான அறிகுறிகள் தோன்றி, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் 6 மணி நேரம் கழித்து ஒரு நோயாளி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரின் இதயத் தசைகள் அனைத்தும் சேதமடைந்திருக்கும். அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாக அனைத்து சேதங்களும் ஏற்பட்டு முடிந்திருக்கும். அதற்குப் பிறகு சிகிச்சையளித்தாலும் உயிரைக் காப்பாற்ற முடியாது.

என்ஸ்டெமி நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டால், அவர்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதய மருத்துவர் சம்பத்குமார்.

என்ஸ்டெமி என்றால் முழுமையாக சேதம் ஏற்பட்டிருக்காது. சிறிதளவேம் ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் இருக்கும். அதனால் மாரடைப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டு, தாமதித்து மருத்துவமனைக்கு வந்தாலும் சிகிச்சையளிப்பதற்கான நேரம் கிடைக்கும். ரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்கிவிட்டால், பிரச்னை சரியாகி, நோயாளிகள் இயல்புக்குத் திரும்பிவிடுவார்கள். என்ஸ்டெமி நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டால், அவர்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்" என்றார்.

Vikatan
இளம்வயதில் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு ஸ்டெமி வகையான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சம்பத்குமார்

இரு வகை மாரடைப்புகளுக்கும் சிகிச்சை முறையில் மாற்றம் இருக்குமா?

"இந்த இரு வகை பாதிப்புகளுக்கும் சிகிச்சை என்பது ஒன்றுதான். பாதிப்பு சிறியதாக இருந்தால், மருந்து மாத்திரையில் அடைப்பை நீக்க முயற்சி செய்யப்படும். பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும்போது, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் ரத்தக்குழாய்க்குள் பலூன் போன்ற ஒன்றைச் செலுத்தி, அதன் வழியாக அடைப்பு ஏற்பட்டிருக்கும் பகுதியில் வலைக்குழாய் (Stent) பொருத்தப்படும். மூன்றாவது மற்றும் இறுதி சிகிச்சை என்பது பைபாஸ் அறுவைசிகிச்சை மூலம் பாதிப்பை நீக்குவதுதான்" என்றார்.

ஸ்டெமி, என்ஸ்டெமி வகையான மாரடைப்புகள் பொதுவாக யாருக்கு ஏற்படும் என்று கேட்டதற்கு, "இந்த இரு வகை மாரடைப்புகளில், என்ஸ்டெமி வகைதான் அதிகமானோருக்கு ஏற்படுகிறது. பொதுவாக இளம்வயதில் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு ஸ்டெமி வகையான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், இவர்களுக்கு இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு சட்டென்று ஏற்பட்டுவிடும்.

இதய நலன்
இதய நலன்

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கெல்லாம் ரத்தக்குழாய்களில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொழுப்பு படியும். இதய ரத்தக்குழாயில் 90 சதவிகிதம் அடைப்பு ஏற்பட்டிருக்கும்போதே அதற்கான அறிகுறிகள் வெளியே தெரியத் தொடங்கிவிடும். அதனால் ரத்தக்குழாயில் முழு அடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக சிகிச்சை பெற்றுவிடுவார்கள்" என்றார் மருத்துவர் சம்பத்குமார்.