Published:Updated:

புத்தம் புது காலை : ரஜினி, விஜய், தனுஷ் எப்படி ஸ்லிம்மாகவே இருக்கிறார்கள்... உடல் எடை கூடாதது ஏன்?

தனுஷ், ரஜினி, விஜய்
தனுஷ், ரஜினி, விஜய்

ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மை கொண்டது. எப்படி ஒவ்வொருவரின் கைரேகையும் ஒவ்வொரு விதமோ அதேபோல, அவரவர் உடல்வாகும் தனித்துவம் மிக்கது. ஆனால், பொதுவாக எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கொண்டு உடல்வாகை மூன்றாகப் பிரிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"ட்ரெட் மில்லைக் கண்டுபிடித்தவர் 54 வயதிலேயே மரணமடைந்தார். ஜிம்னாஸ்டிக்ஸை அறிமுகப்படுத்தியவர் 57 வயதிலும், உலக உடற்கட்டமைப்பின் முன்னோடி 41 வயதிலும், கால்பந்து வீரரான டியாகோ மரடோனா 60 வயதிலும் மரணமடைந்தனர். ஆனால், கேஎஃப்சியின் நிறுவனர் தனது 94 வயது வரை வாழ்ந்தார் என்றிருக்க, சிகரெட் தயாரிப்பாளரான வின்ஸ்டன் 102 வயது வரையும், ஓபியம் போதை மருந்தைக் கண்டறிந்தவர் 116 வயது வரையும் வாழ்ந்தனர். ஆகவே, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என உடலை வருத்திக் கொள்ளாமல், நினைத்ததை சாப்பிட்டு நீண்டகாலம் வாழுங்கள்!”

இப்படி ஒரு வாட்ஸ்அப் ஃபார்வேட் மெசேஜ் நேற்று நண்பரிடமிருந்து வந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் மற்றொரு நண்பரிடமிருந்து, பிறகு இரண்டு தோழிகளிடமிருந்து, அதன்பிறகும் இரண்டு மூன்று குரூப்பில்...

எவ்வளவு வேலையிருந்தாலும் காலையில் எழுந்து வாக்கிங் போவது, யோகா செய்வது என் வழக்கம் என்பதால் நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்யத்தான் அனுப்புகிறார்கள் என்பது புரிந்தாலும் இந்தச் செய்தி உண்மையா என்று தெரிந்துகொள்ள முயன்றபோது, தினேஷ் மோகன் என்ற 60 வயது தாண்டிய சூப்பர் மாடல் ஒருவரின் பேட்டியைப் பார்த்தேன்.

"எனது 44 வயதில், ஒரு அழுகிய தக்காளியைப் போல் நான் இருப்பதைப் உணர்ந்தேன். எனது 130 கிலோ உடல் எடையை என்னால் தூக்க முடியாமல், மற்றவர்களின் உதவியுடன் மட்டுமே நடமாட வேண்டியிருந்தது. பலநாட்கள் நோயுடன் படுக்கையில் படுத்துக்கிடக்கவும் வேண்டியிருந்தது" என்று கூறும் இந்த தினேஷ், ஹரியானா மாநிலத்தின் கல்வித்துறையில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

தினேஷ் மோகன்
தினேஷ் மோகன்

ஆரம்ப நாட்களில் அளவான எடையுடன் இருந்தபோதிலும் எப்போதும் மீட்டிங், மீட்டிங் என நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பணியை செய்துவந்ததால், பணியின் அழுத்தத்தை உணவில் காட்டத் தொடங்கியுள்ளார் தினேஷ். நினைத்த நேரத்தில் பரோட்டா, பக்கோடா, சமோசா, நெய், கேக், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் என ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அவரது பணியிடத்தில் ஒரு உணவுத் தொழிற்சாலையே இயங்கி வந்துள்ளது. இடையில் இதெல்லாம் ஜீரணமாக அவ்வப்போது சூடான சர்க்கரை மிகுந்த டீ வேறு.


ஒருகட்டத்தில் வேலைக்குப் போகப்பிடிக்காமல், கட்டாய பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தபோது நிலைமை இன்னும் மோசமாகிப் போயிருக்கிறது. பொழுதுபோக்கே உண்பது என்று மாறிப்போய்விட்டது. எட்டு வருடங்களில் எடை 130 கிலோவைத் தாண்டத் துவங்கியிருந்தது. "ஃப்ரிட்ஜில் வைத்த உணவையெல்லாம் காலி செய்யத் துவங்கியிருந்த என்னை, எனது சகோதரிதான் மாற்றினார்" என்று கூறும் தினேஷ், சகோதரி சொன்னதற்காக 2014-ம் ஆண்டு எடையைக் குறைக்க ஒரு ஜிம்மிற்கு போக ஆரம்பித்ததுதான் தன்னை மாற்றியது என்கிறார்.


நான்கு வருடங்கள் தொடர் பயிற்சி, சரியான உணவு என 50 கிலோ எடையைக் குறைத்து இன்று தனது 62 வயதில் இந்தியாவின் சிறந்த சூப்பர் மாடல்களில் ஒருவராக வலம் வருவதுடன்... இந்தி, மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்தும் வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"தினமும் 40 நிமிடங்கள் கார்டியோ, 20 நிமிடங்கள் எடைப் பயிற்சி, 50 புஷ் அப்ஸ், அத்துடன் காய்கறி, பழங்கள் நிரம்பிய அளவான சரிவிகித உணவு... இவைதான் என்னுடைய வெற்றிக்கான மந்திரங்கள். அன்று உதவாக்கரை என்று சொன்ன பலரும் இன்று என்னை மோட்டிவேட்டர் என்கிறார்கள். வாருங்கள் முறையான உடற்பயிற்சி செய்து நீங்களும் மோட்டிவேட்டராய் மாறுங்கள்” என்கிறார் இந்த சூப்பர் மாடல்.

தினேஷ் மோகன் சொல்வது போல நாமும் தினசரி உடற்பயிற்சியை ஆரம்பித்துவிடலாம். ஆனால், முறையான உடற்பயிற்சி என்கிறாரே அவர். அதென்ன முறையான உடற்பயிற்சி? அதற்கு உடல்வாகு பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் நாம்.

ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மை கொண்டது. எப்படி ஒவ்வொருவரின் கைரேகையும் ஒவ்வொரு விதமோ அதேபோல, அவரவர் உடல்வாகும் தனித்துவம் மிக்கது. ஆனால், பொதுவாக எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கொண்டு உடல்வாகை உடற்பயிற்சி மருத்துவர்கள் (Physical Medicine Physicians) மூன்றாகப் பிரிக்கிறார்கள். Ectomorph (எக்ட்டோமார்ஃப்), Mesomorph (மீஸோமார்ஃப்) மற்றும் Endomorph (எண்டோமார்ஃப்) என்று மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

விஜய்
விஜய்

இவர்களில் எக்ட்டோமார்ஃப் என்பவர்கள் Pencil frame ரக மனிதர்கள். ஒல்லியாக, உயரமாக, நீண்ட கால்களும், சதைப்பற்றில்லாத உடலும் கொண்டவர்கள். இவர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறைகளைப் பரிந்துரைக்கும் இந்த மருத்துவர்கள், எக்டோமார்ஃப்களுக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்கும், தடகளப்போட்டிகள், நீச்சல், சைக்ளிங், டென்னிஸ் ஆகிய உடற்பயிற்சிகள் சரியானவை என்கிறார்கள். அதேசமயம் உடற்பயிற்சியின்போது உடலின் எடையைக் குறைக்கும் ஏரோபிக் பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.

கூடவே, எக்டோமார்ஃப்களுக்கு இன்சுலின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்பதால், அதிகக் கலோரிகள் கொண்ட மாவு உணவையும் (45%) அதனுடன் புரதங்கள் நிறைந்த மீன், இறைச்சியையும் (35%), அதேசமயம் பால் மற்றும் கொழுப்பு வகைகள் மிதமாகவும் உட்கொள்ள அறிவுறுத்துகின்றனர். அத்துடன் எக்டோமார்ஃப்கள் பரிந்துரைக்கப்பட்ட கலோரிகளுக்கு மேலாகவும் உணவை உட்கொள்ளலாம் என்பது இவர்களுக்கு டயட்டில் ஒரு போனஸ்.

உலகளவில் பிராட் பிட், ப்ரூஸ் லீ, கேட் மாஸ், எட்வர்ட் நார்டன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நம்ம ஊர் தனுஷ் மற்றும் விஜய் போன்றவர்கள் எக்ட்டோமார்ஃப்கள் உடல்வாகிற்கு சிறந்த உதாரணங்கள்.

பிரபு
பிரபு

அடுத்து வருவது, எண்டோமார்ஃப்கள். எக்டோமார்ஃப் உடல்வாகுக்கு நேர் எதிரான உடல்வாகு கொண்ட இந்த எண்டோமார்ஃப்கள், பொதுவாக குறைந்த உயரத்துடனும், உடலின் மத்தியப்பகுதியில் அதிக சதைப்பிடிப்புடனும் இருப்பவர்கள். பொதுவாக எண்டோமார்ஃப்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு கூடுதல் என்பதால் மாவு உணவு குறைவாகவும், தானியங்கள் மற்றும் பயிறு வகைகள் சற்று கூடுதலாகவும், காய்கறிகள் மிக அதிகமாகவும் பரிந்துரைக்கும் உணவு வல்லுனர்கள், தேவையைவிட 200-500 கலோரிகள் குறைந்த உணவே இவர்களுக்கு ஏற்புடையது என்கிறார்கள்.

அதேசமயம் இந்த எண்டோமார்ஃப்கள், முதலில் சாதாரண ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு பிறகு தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கிறார்கள். அத்துடன் உடலின் வலிமையையும், சக்தியையும் காட்டும் பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள்தான் ஜொலிப்பார்கள் என்கிறார் பேராசிரியர் மார்கோ. உலக அளவில் ஜெனிஃபர் லோபஸ், ஓப்ரா வின்ஃப்ரே, பீயான்ஸும் நம் ஊரில் பிரபு, ஜிப்ரான் மற்றும் மறைந்த எஸ்.பி.பி அவர்களும், இந்த தினேஷ் மோகன் கூட சில பிரபலமான எண்டோமார்ஃப்கள் எனலாம்.

மூன்றாவது வகை இந்த எக்ட்டோ எண்டோமார்ஃப் உடல்வாகுக்கு இடையில் இருக்கும் மீசோமார்ஃப்கள். இயற்கையிலேயே விளையாட்டு வீரர்கள், எளிதில் தசைவலிமை பெறுபவர்கள் என்பதுடன் எதையுமே சிறப்பாகச் செய்பவர்கள் என்று இவர்களைச் சொல்லும்போது புகழ்ந்து சொல்கிறார் பேராசிரியர் மார்கோ.

மீசோமார்ஃப்காரர்கள் மாவுச்சத்து, புரதச்சத்தும் கூடுதலாகவும், கொழுப்பு மிதமாகவும் உண்ணவேண்டும் என்பதுடன், அதிலும் ஒவ்வொரு முறையும் கையளவு உணவு, கலோரியின் தேவைக்கேற்ற உணவு என்பதே சிறந்தது என்கிறார்கள் வல்லுநர்கள்.

தசையை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளையும், மூச்சை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளையும் சமவிகிதத்தில் மீசோமார்ஃப்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவ அறிவியல், இவர்கள் கிரிக்கெட், டென்னிஸ், ரக்பி, எடை தூக்குதல் என எல்லாவற்றிலும் கலக்குவார்கள் என்கிறது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

சில்வஸ்டர் ஸ்டாலோன், புரூஸ் வில்லீஸ், அன்னா கோர்னிகோவா... நம்மூரில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என இந்தவகை உடல்வாகு கொண்ட எல்லோருமே மீசோபார்ஃப்கள்தான். ஆக, நமது உடல்வாகு என்ன வகையானது என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப உணவுப்பழக்கத்தையும் மாற்றியமைத்து செய்யும் உடற்பயிற்சியே, முறையான உடற்பயிற்சி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆனால், எல்லா உணவையும் உட்கொண்டு, எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாமல் அதிக நாள் வாழலாம் என்று வாட்சப் சொல்லும்போது இதெயெல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா?

உண்மையில் எப்போதும் போல, அந்த வாட்சப் செய்தி பொய் என்பதுடன், மாரடோனா தொடங்கி இளம் வயதில் மரணத்திவர்களுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

உண்மையில் முறையான உடற்பயிற்சிதான் நம்மை நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழவைக்கும். அதைத்தான் தனது வாழ்க்கை மூலமாகப் புரிய வைக்கிறார் தினேஷ் மோகன் எனும் சூப்பர் மாடல்!

ஆம்... வியர்வையைக் காட்டிலும் அழகானதொரு உடை வேறொன்றும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு