Published:Updated:

ஐந்து வருடங்களுக்கு முன்பே கொரோனாவைக் கணித்த பில்கேட்ஸ்... அடுத்தது என்ன? #FightCovid19

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

"எதிர்காலத்தில், மனித குலத்தின் பேரழிவு என்பது அணுகுண்டு தாக்குதல்களாலும், போர்களாலும் நேரிடாது... கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தாக்குதல்களால் மட்டுமே நேரிடும்" இந்த வார்த்தைகள் எபோலா பரவிய நேரத்தில் பில்கேட்ஸ் கூறியது.

மாற்றங்கள் மனிதனில் தேவை!

ஒரு பெரிய பிசினஸ்மேன்...

ஐந்து வருடங்களுக்கு முன்பே, எதிர்காலத்தில் கொரோனா போன்ற ஒரு நோய் வரும் என்று யூகிக்கிறார். தனது குடும்பம் மற்றும் தன் பணியாளர்களுக்கு அப்படி ஒரு நோய் வந்தால், அதை எப்படி எதிர்கொள்வது என்று வகுப்புகள் நடத்துகிறார். அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயலும் தன்னார்வ நிறுவனங்களுக்குப் பொருளாதார உதவிகளைச் செய்கிறார். மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடித்தால், அவரே விற்கவும்கூட செய்யலாம்.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

ஆம். அந்த பிசினஸ்மேன், மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்தான். ஆனால், அதைப் பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை. நமது கவலையெல்லாம் வேறு.

இப்படி ஐந்து வருடங்களுக்கு முன்பே யூகித்த வியாபாரி ஒருவரே, இதற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்கிறாரே. அந்த வைரஸ் உருவாகி, உருப்பெற்று, உலகமெல்லாம் சுற்றி, உயிர்களைக் காவுவாங்கி, தங்கள் கதவைத் தட்டும்போதுதான் அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கும் மற்ற அறிவியல் அறிஞர்களும் அரசுகளும், கொரோனாவிற்கான மருந்தை எப்போது கண்டுபிடித்து... எப்படி நம்மை காக்கப் போகிறார்கள் என்ற பயம் இயல்பாக ஏற்படுகிறதல்லவா...

`அமெரிக்கா மோசமாகச் செயல்பட்டது. ஆனால் சீனா..?’ - சர்வதேச வைரஸ் பரவல் குறித்து பில்கேட்ஸ்

ஏன் இந்தத் தாமதம்? அதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

"எதிர்காலத்தில், மனித குலத்தின் பேரழிவு என்பது அணுகுண்டு தாக்குதல்களாலும், போர்களாலும் நேரிடாது... கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தாக்குதல்களால் மட்டுமே நேரிடும்" என்று எபோலா பரவிய நேரத்தில் பில்கேட்ஸ் கூறியது, சரியாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு அப்படியே வரிக்கு வரி உண்மையாகி, இன்று மனித குலத்தையே அழித்துக்கொண்டிருக்கிறது, கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்கிருமி.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உண்மையிலேயே அவ்வளவு பலசாலியா இந்த வைரஸ்கள் என்றால், இவற்றின் எடை வெறும் 0.85 ஆட்டோகிராம்.

அதாவது 10^-18 கிராம் மட்டுமேயாம்.

அதிலும், ஒரு மனிதனை வீழ்த்த வெறும் 0.0000005 கிராம் அளவு வைரஸ் மட்டுமே போதும் என்பதும், இன்று சராசரி 70 கிலோ எடையுள்ள 35 லட்சம் பேரைத் தாக்கி, இரண்டரை லட்சம் பேரைக் கொன்று, மொத்த உலகையும் முடக்கி, உலகப் பொருளாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் தலைகீழாக மாற்றியுள்ள இந்த வைரஸ்களின் மொத்த எடை ஒரு கிராம்கூட இல்லை என்றால், உங்களால் நம்ப முடிகிறதா..?!

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எந்தெந்த உறுப்புகளை எல்லாம் தாக்கும்? - நிபுணர்களின் விளக்கம் 

ஆம், இந்த ஒரு கிராம் கொரோனா வைரஸை ஒழிக்கத்தான் இப்போது உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. இது போதாதென்று, உலக சுகாதார நிறுவனமும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கவும், மருந்துகளைக் கண்டறியவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் பல்வேறு நாடுகளின் பல்வேறு அறிவியல் அறிஞர்களை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பந்தயத்தில் முதலாவதாக, கொரோனாவிற்கான சரியான மருந்தைக் கண்டுபிடிக்கும் பணி, மலேரியா காய்ச்சலுக்கான குளோரோகுவின், தொண்டைவலிக்கு பரிந்துரைக்கப்படும் Azithromycin, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியான HCQS, ஹெச்ஐவி நோய்க்கான மருந்துகள், செல் வீக்கத்தைத் தவிர்க்கும் ஸ்டீராய்டு மருந்துகள், புதிய வைரஸுக்கு எதிரியான Favipiravir என கிட்டத்தட்ட 20-க்கும் மேலான மருந்துகளை மருத்துவர்களும் மருந்தாளுநர்களும் தங்கள் அனுபவ அறிவையும், நோயாளிகளின் தன்மையையும் வைத்து ஒருபுறம் முயன்றுவருகின்றனர்.

எட்வர்டு ஜென்னர்
எட்வர்டு ஜென்னர்

இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கான சரியான குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்க முயலும் அதே நேரத்தில், மற்றவர்கள் நோயை எதிர்கொள்ள அவர்களின் நோயெதிர்ப்புத் திறனை செயற்கையாக அதிகரிக்க முயல்கின்றனர், மருத்துவ ஆய்வாளர்கள்...

அவற்றில் முக்கியமான வழிதான் கொரோனாவைத் தடுக்கும் தடுப்பூசிகள்.

1796-ம் ஆண்டு, அம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்டு ஜென்னர் என்ற மருத்துவ மாமேதை கண்டுபிடித்தபோது, மாடுகளிலும், பறவைகளிலும் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள். அவற்றைத் தயாரிக்க காலதாமதம் ஆனதால், பிறகு ஆய்வகங்களுக்கு மாறி தற்போது அதிலும் வேகமாக Genetic Engineering முறையில் Recombinant vaccine-களாகத் தயாரிக்கப்படுகின்றன.

முடங்கிக் கிடக்கும் தடுப்பு மருந்து நிறுவனம்...

அதிலும் இந்தக் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி Subunit vaccine என அழைக்கப்படும், வைரஸின் ஒரு பகுதியான S protein மட்டுமே!

வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல், இந்த வைரஸை வைரஸ் கொண்டே அழிப்பதற்கு, கொரோனாவில் துருத்தியபடி நீட்டிக் கொண்டிருக்கும் அந்த S protein கால்களை மட்டும், அடினோ வைரஸ் என்ற மற்றொரு வைரஸிற்குள் பொருத்தி, பயன்படுத்தும் முறைதான், இந்த ஜெனிடிக் இன்ஜினீயரிங் முறையாகும்..

அதிலும் இதே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் ஆகிய வைரஸ்களுக்கு எதிரான recombinant தடுப்பூசிகள் ஏற்கெனவே தயாராக இருக்கும்போது, நாம் இந்த கொரோனாவுக்கான தடுப்பூசி ஆய்வில் பாதி கட்டத்தைத் தாண்டியாகிவிட்டது.

அதாவது, பிள்ளையார் சுழியிலிருந்து கொரோனா தடுப்பூசியை ஆரம்பிக்க வேண்டாம் என்ற நிலையில் இருக்கும்

போதும், ஏன் இவ்வளவு தாமதம் என்பதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைக் கூறுகிறது CDC என்ற சர்வதேச நோய்க் கட்டுப்பாடு வாரியம்.

பன்றிக்காய்ச்சல்...
பன்றிக்காய்ச்சல்...

நமக்கெல்லாம் ஏற்கெனவே பரிச்சயமான கொரோனா குடும்பத்தின் ஒரு வைரஸ்தான் கோவிட் 19 என்பதால், முந்தைய வைரஸ்களின் குணங்களை வைத்து, குணமாக்கும் மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ, a+b என சுலபமாகச் செய்துவிட முடியும். என்றாலும், அதை முறையாக மிருகங்களுக்கும், அதன் பிறகு மனிதர்களுக்கும் கொடுத்து, அந்த மருந்து முற்றிலும் பாதுகாப்பானதுதானா என்பதையும், அதனால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பதையும் உறுதிசெய்தபிறகுதான் தடுப்பூசியை வெளிக் கொணர முடியும் என்பதே நடைமுறை சிக்கல்.

Vaccine trial என அழைக்கப்படும் இதில் முதலாவது கட்டமாக, ஆய்வகத்தில் மிருகங்களின் மீது சோதனை மேற்கொள்ளும்போது, அதன் நோயெதிர்ப்பை உறுதிசெய்வதுடன், மருந்தினால் பக்கவிளைவுகளோ அல்லது தீவிர நோய் பரவுவதற்கான வாய்ப்புகளோ ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதுடன், மிருக வதையை எதிர்க்கும் அமைப்புகளுக்கும் பதில் கூறவேண்டிய கட்டாயத்தில் மருத்துவ ஆய்வாளர்கள் இருப்பதால், முதல் மூன்று நான்கு மாதங்களோடு இந்த ட்ரையல் நின்றுவிடுகிறது.

கொரோனா இல்லை... ஆனால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது... ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்!

இதில் எந்த பாதிப்பும் இல்லை என்று திருப்தி அடைந்த பிறகே, கிளினிக்கல் ட்ரையல் எனும் மனிதர்கள் மீதான நேரடிச் சோதனை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக, ஆரோக்கியமான 5 முதல் 10 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசியைச் செலுத்தி, அதன் நோயெதிர்ப்புத் திறனைக் கண்டறிவதுடன், அந்த மருந்தின் அளவையும், வீரியத்தையும் கணக்கில் கொண்டு அதனால் அவர்களுக்கு பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுகின்றனவா என்பதை, குறைந்தது மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை கண்காணிக்கின்றனர்.

மருத்துவர் சசித்ரா தாமோதரன்
மருத்துவர் சசித்ரா தாமோதரன்

இது திருப்தியான பிறகே, சோதனையின் அடுத்த கட்டமாக 50-100 நபர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்தி, மூன்று மாதங்கள் கண்காணிக்கின்றனர்.

இதிலும் திருப்தியான பிறகு, இறுதிக்கட்டமாக வெவ்வேறு வயது, வெவ்வேறு சூழல், வெவ்வேறு தட்பவெப்பம் மற்றும் வெவ்வேறு நிலப்பரப்பில் வாழும் இனமக்கள் என அனைத்து நாடுகளையும் சார்ந்த, குறைந்தது 1000 பேருக்காவது இந்த மருந்து வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

`எல்லாம் தயார்.. சோதனை மட்டும் வெற்றிபெற்றால் ரூ.1,000-க்கு தடுப்பூசி’- இந்தியாவின் `சீரம்’ நிறுவனம்

இதில், பரிசோதனைக்கான காலம் ஒரு வருடம். இந்தப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் அல்லது ஆயிரத்து நூறு பேருக்கும் இந்தச் சோதனை முறையை விளக்கி, அவர்களுக்கு தடுப்பூசி பற்றிய முழுமையான புரிந்துணர்வைக் கொடுத்து, அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கான அந்தக் காலகட்டம் தாமதமாவதையும் கவனிக்க வேண்டும்.

2010-ம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட்டபோது, அதனால் உயிரிழப்புகள் நிகழ்ந்ததையும் நினைவில் கொண்டு, இப்போது இந்த கிளினிக்கல் சோதனைகளின்போது அந்த மனிதர்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால், அது புதிதாகத் தரப்பட்ட மருந்தின் காரணத்தினாலா அல்லது வேறு காரணங்களாலா என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிய வேண்டும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதற்கெல்லாம் மேலாக, இதுவரை மனிதர்கள் நோயின்றி வாழ, பிறந்தது முதல் 10 வயதிலான குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், முதல்முறையாக கொரோனாவிற்குத்தான் வளர்ந்தவர்கள் மற்றும் வயதானவர்களுக்கென தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது என்பதும், மற்ற வைரஸ்கள் போலில்லாமல் கொரோனா என்ற இந்த ஆர்என்ஏ வைரஸ், இடத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப தன்னை வடிவம் மாற்றிக்கொள்ளும் ஆற்றலும் கொண்டது என்பதும்தான், இதன் தயாரிப்பில் ஒரு மருந்தே எல்லோருக்கும் பொருந்துமா என்ற சந்தேகத்தை உண்டாக்கி மேலும் தாமதத்தை ஏற்படுத்திவருகிறது.

வைரஸ் எதிர்ப்பு கார்... சீனாவின் முயற்சி பயனளிக்குமா? #ExpertOpinion

ஆக, சாதாரணமாக ஒரு தடுப்பு மருந்து என்பது இத்தனை சோதனைக் கட்டங்களையும் தாண்டி, பொது மக்களுக்கு பரிந்துரை செய்ய, ஐந்திலிருந்து பத்து வருடங்கள் ஆகும் எனும்போது, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை ஒரு வருடத்தில் கொண்டு வருகிறோம் என்று சொல்வதே மிகக் குறுகிய காலகட்டம்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிலும், Rhesus Macaque வகை குரங்கினத்தில் சோதனை செய்யப்பட்டு, வெற்றிகண்டுள்ள கொரோனா தடுப்பூசியை, தற்சமயம் 1112 மனிதர்களுக்கு வழங்கப்பட்டு, முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது மருத்துவ அறிவியல்.

பிளாஸ்மா
பிளாஸ்மா

அதேநேரம், இந்த இடைப்பட்ட கால அவகாசத்திலும் Passive immunity எனப்படும் ரெடிமேடு நோயெதிர்ப்பை, பிளாஸ்மா சிகிச்சையின் மூலமாக முயற்சி செய்கின்றனர் சில ஆய்வாளர்கள்.

இந்த பிளாஸ்மா முறையில், கொரோனா பாதித்து குணமடைந்த நபர்களது ரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல்கொண்ட ஆன்டிபாடிகளைச் சேகரித்து, தீவிர கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து சிகிச்சையளிக்கின்றனர். இந்த சிகிச்சை முறையில், ஒரு சிலருக்கு ஒவ்வாமையும் அரிதாக உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என்பதால் பிளாஸ்மா சிகிச்சையும் எக்ஸ்பெரிமென்டல் நிலையில்தான் உள்ளது எனலாம்.

பிளாஸ்மா தெரபியில் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? - விளக்கும் ரத்த மாற்று சிகிச்சை நிபுணர்

அடுத்த கட்டமாக, Herd immunity. அதாவது தொற்றுநோயை மக்களிடையே பரவச் செய்து, காலப்போக்கில் மக்களிடையே பெறப்படும் கூட்டு நோயெதிர்ப்பு சக்தி.

(Infection induced Immunity) முறை...

இதை முயன்று பார்த்ததில் இங்கிலாந்து

அதிகப்படியான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்திக்க நேர்ந்ததால், இதுவும் தற்சமயம் கைவிடப்பட்டுள்ளது.

யோசித்துப் பார்த்தோமேயானால்,

கொரோனா என்ற ஒரு வைரஸ்,

ஆட்டோகிராம் அளவிலான மிகச் சிறிய வைரஸ்.

அதிலும் மிக எளிதில்...

சோப், சானிடைஸர், பிளீச்சிங் பவுடர் மற்றும் சுடுநீரில் அழியக்கூடிய ஒரு சாதாரண வைரஸ்.

சுத்தமான இடங்களிலும், ஆரோக்கியமான உடல்களிலும் உள்ளே நுழையத் தயங்கும் கண்ணுக்குத் தெரியாத, அறிவொன்றும் இல்லாத ஒரு நுண்ணுயிரே, தான் அழிந்து போகாமலிருக்க, சூழலுக்கு ஏற்ப இவ்வளவு நுணுக்கமாக தன்னைத்தானே மாற்றிக் கொண்டு, தனது மரபியலையும் மாற்றிக்கொண்டு உயிர் வாழ்கிறது என்றால்...

அதனைவிட பன்மடங்கு பெரியதான, அதிபுத்திசாலியான மனிதர்கள் இன்னும் எவ்வளவு நுணுக்கமாக வாழ வேண்டும்..?

கொரோனா
கொரோனா

"மனிதர்களே...

கொரோனா என்ற இந்த நுண்ணுயிரி இப்போதும் கருணை மிகுந்ததுதான். அதனால்தான் இன்னும் காற்றில் பரவாமல் இருக்கிறது. எதிர்காலத்தில் வரும் வைரஸ்கள் இதைவிடக் கொடியவையாக இருக்கக்கூடும்...

ஆரோக்கியப் பாதையை நோக்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால்,

இதைவிட கொடியதான பல நோய்களையும்,

இதைவிட அதிகமான பேரிழப்புகளையும் நீங்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்" என்ற மிகப் பெரிய பாடத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளது கொரோனா.

ஆக,

மரபியலின் மூலமாக, நோய்களே ஏற்படாமல் இருக்கும் நுணுக்கமான தொழில்நுட்பத்தையோ

அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையோ மனிதன் மேற்கொள்ளவேண்டிய மிக முக்கியத் தருணம் இது!

ஆம்.

மாற்றங்கள் மட்டும்தான் மனிதனில் இப்போது தேவை.

அடுத்த கட்டுரைக்கு