Published:Updated:

கோவிட்-19: இந்தியா முதல் அலையிலிருந்து மீண்டுவிட்டதா?

கோவிட்-19 முதல் அலையில் நிகழ்ந்தது போலவே மீண்டும் மருத்துவமனைகள் நிரம்புகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடு முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயம், `கொரோனாவின் இரண்டாம் அலை' குறித்ததாகவே இருக்கிறது. சில நிபுணர்கள் இரண்டாவது அலை ஏற்படாது என்றும் சிலர் கட்டாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா எனும் நாட்டை மொத்தமாக எடுத்துக்கொண்டால் அக்டோபர் மாதத்திலிருந்து அனுதினம் கண்டறியப்படும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நோய்த்தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஆனால் புதுடெல்லி, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொற்று வேகமெடுத்துப் பரவி இரண்டாவது அலையைச் சந்திக்கத் தொடங்கிவிட்டன.

தமிழகத்தின் நிலை என்ன?

இருப்பினும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா புள்ளிவிவரங்களை நோக்கும்போது கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருவதைக் காண்கையில் நாம் முதல் அலையில் இருந்து மீண்டிருப்பது தெரிகிறது. இரண்டாவது அலை ஏற்படாமல் தடுப்பதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளைத் தமிழக சுகாதாரத்துறை செய்து வருகிறது.

A Madrid Emergency Service (SUMMA) health worker conducts a rapid antigen test for COVID-19 in the southern neighbourhood of Vallecas in Madrid, Spain
A Madrid Emergency Service (SUMMA) health worker conducts a rapid antigen test for COVID-19 in the southern neighbourhood of Vallecas in Madrid, Spain
AP Photo/Bernat Armangue
 1. புதிதாகக் காய்ச்சல், இருமல் போன்ற தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை உடனே கண்டறிந்து பரிசோதனை செய்வது.

 2. காய்ச்சல் பரவும் இடங்களில் உடனடியாக முகாம்கள் அமைத்து தொற்றுப்பரவலைத் தடுப்பது.

 3. ஆக்ஸிஜன் வசதியுடைய நோயாளிப் படுக்கைகளை அதிகமாக்குவது.

 4. கோவிட்-19 பிரத்யேக வார்டுகளை தொடர்ந்து பராமரிப்பது.

குறிப்பாக, தீவிர சிகிச்சை படுக்கைகள் கொண்ட வார்டுகளைத் தொடர்ந்து அதிகரிப்பது என கோவிட்-19 முதல் அலைக்கு செய்யப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளைப் போலவே இரண்டாம் அலை நேர்ந்தால் அதை எதிர்கொள்ள, சுணக்கம் இன்றி தமிழக சுகாதாரத்துறையும் தயாராகவே இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆபத்தில் ஐரோப்பா?

ஐரோப்பிய யூனியன் நாடுகளை எடுத்துக்கொண்டால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அங்கு கொரோனாவின் முதல் அலை அடித்தபோது நாளொன்றுக்கு 35,000 முதல் 38,000 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வந்தார்கள். ஆகஸ்ட் மாதத்தில் அந்த எண்ணிக்கை 20,000 ஆக குறைந்தது. ஆனால், தற்போது தினசரி இரண்டரை லட்சம் தொற்றாளர்கள் அங்கு கண்டறியப்பட்டு வருகிறார்கள். இத்தகைய திடீர் மாற்றத்தை ஐரோப்பிய யூனியன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

முதல் அலையில் நிகழ்ந்தது போலவே மீண்டும் மருத்துவமனைகள் நிரம்புகின்றன. ஐ.சி.யு படுக்கைகள் நிரம்புகின்றன. இதைச் சமாளிக்க பிரான்ஸ் அரசாங்கம் டிசம்பர் 1-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசு டிசம்பர் 2-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. மூன்று மாதங்கள் இரண்டாம் அலைக்கான எந்த அறிகுறியும் தென்படாமல் கடந்த ஒரு மாதத்துக்குள் தொற்று எண்ணிக்கை இத்தனை உயர்ந்தது குறித்து பல கருத்துகள் நிலவி வருகின்றன.

அவற்றில் சில...

ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தில் குளிர்காலம் நிலவி வருகிறது. குளிர்காலத்தில் வைரஸ்கள் நீண்ட நாள்கள் உயிர்ப்புடன் இருக்கும். வெளியே உறையவைக்கும் குளிர் நிலவும் என்பதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே அதிக நேரத்தைச் செலவழிப்பார்கள். இதனால் வீடுகளுக்குள் தொற்று எளிதில் பரவும்.

ஐரோப்பாவில் வெயில் காலம் நிலவிய ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முதல் அலை ஓய்ந்திருந்ததால், மக்கள் அண்டை நாடுகளுக்கு அதிகம் சுற்றுலாப் பயணம் செய்தனர். குறிப்பாக, ஜூலை மாதம் மட்டும் ஸ்பெயினுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 25 லட்சம். அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் ஒருவர்கூட அங்கு செல்லவில்லை.

Dr.Farook Abdullah
Dr.Farook Abdullah

கொரோனா வைரஸ் மீது அச்சம்கொண்டு 2020-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முறையாக மாஸ்க் அணிந்து வந்த மக்களுக்கு ஆகஸ்ட்டுக்கு பின் சுணக்கம் ஏற்பட்டது.

பொது இடங்களில் பலரும் மாஸ்க் அணிவதைத் தவிர்த்துவிட்டனர். ஸ்பெயினில் செய்யப்பட்ட வைரஸ் மூலக்கூறு குறித்த ஆய்வில் கொரோனா வைரஸ் தன்னகத்தே புதிதாக உருமாற்றம் (Mutation) அடைந்திருப்பதையும், அந்த உருமாற்றம்தான் வைரஸ் வீரியமாகப் பரவுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற ரீதியில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இருப்பினும் இந்தக் கருத்து உறுதிசெய்யப்படவில்லை. உருமாற்றம் பெற்ற வைரஸ் குடும்பத்துக்கு 20.A EU1 என்று பெயர் வைத்துள்ளனர். பலரும் இது ஆபத்தற்ற உருமாற்றம் என்றே தற்போது கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றும் ஏனைய கடந்த கால பெருந்தொற்றுகள் போலவே அலை அலையாக வந்து தாக்கும் என்பதில் எந்த விந்தையும் இல்லை. 1918-ல் தாக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூகூட இதே போன்று மூன்று அலைகளாகத் தாக்கிய பின் விடைபெற்றது. மேற்கண்ட கருத்துகள் வழியாக நாம் சில விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

இந்தியா தற்போது அதிகபட்ச தளர்வுகளுடன் ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகிறது. எனினும், நம் மக்களிடையேவும் முகக்கவசம் அணிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதைத் தெளிவாகக் காண முடிகிறது. மேலும், பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவை ஈடுசெய்ய மக்கள் தொழில்முறையாகப் பல பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர்.

A man wearing a face mask as a precaution against the coronavirus carries a child and walks past a graffiti in Kochi, Kerala
A man wearing a face mask as a precaution against the coronavirus carries a child and walks past a graffiti in Kochi, Kerala
AP Photo/R S Iyer

உலகத்திலேயே மிக அதிகமான உள்நாட்டு புலம்பெயர்தல் நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே, ஓரிடத்தில் இருக்கும் தொற்று எளிதில் பல இடங்களுக்குப் பரவும் வாய்ப்புண்டு.

மத்திய அரசின் கொரோனா தொற்று கட்டுப்படுத்துதல் குழுவின் தலைவரும் நிதி ஆயோக் குழு உறுப்பினருமான வி.கே.பால், ``இந்தியாவின் 90 சதவிகித மக்களுக்கு இன்னும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் இரண்டாம் அலை ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது" என்று எச்சரித்திருக்கிறார். இதே நேரத்தில் முகக்கவசம் அணிவதை முறையாகக் கடைப்பிடித்து வரும் ஆஸ்திரேலியா இரண்டாம் அலையை வெகுவாகக் கட்டுக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இரண்டாம் அலை ஏற்படுமா, ஏற்படாதா என்ற கேள்விக்கான பதில்தான் என்ன? இரண்டாம் அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால், அதைக் கட்டுக்குள் வைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்களாகிய நாம் ஒன்றிணைய வேண்டும்.

 • முகக்கவசம் அணிவதை சமுதாயத்துக்கு நன்மை செய்யும் பொது நலக் காரியமாக எண்ணி கட்டாயம் அணிய வேண்டும்.

 • தொற்று அறிகுறி இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 • கைகளை அவ்வப்போது சோப் போட்டுக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

 • இயன்றவரை கூட்டம் போடுவதைத் தவிர்த்து தனிமனித இடைவெளியை அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

 • தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.

 • வீட்டில் இருக்கும் முதியோர் மற்றும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற தொற்றா நோய்களுடன் வாழும் உறுப்பினர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களுடன் முடிந்தவரை நெருக்கமான தொடர்புகளைத் தவிர்த்தல் நலம்.

 • அவர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே பரிசோதனைசெய்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும்.

A student uses hand sanitizer in a class as schools in north-eastern Assam state reopen after being closed for months due to the coronavirus pandemic in Gauhati, India
A student uses hand sanitizer in a class as schools in north-eastern Assam state reopen after being closed for months due to the coronavirus pandemic in Gauhati, India
AP Photo/Anupam Nath
கோவிட்-19: இரண்டாம் அலை ஏன் இன்னும் ஆபத்தாக இருக்கலாம்? விளக்கும் மருத்துவர்

கொரோனா பெருந்தொற்று குறித்து அலட்சியம் இன்றி பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டால், இரண்டாம் அலை ஏற்பட்டாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் சென்றுவிடும்.

நம்பிக்கை கொள்வோம். உடல்களாகத் தனித்திருந்தாலும், மனங்களால் ஒன்றிணைந்து கொரோனாவைத் தடுப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு