Published:Updated:

Doctor Vikatan: 40 ப்ளஸ்ஸில் குறைந்துபோன செக்ஸ் ஆர்வம்; இது இயல்பானதா அல்லது ஏதேனும் குறைபாடா?

Couple (Representational Image
News
Couple (Representational Image ( Image by Free-Photos from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

என் வயது 43, என் கணவருக்கு 54... திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. கடந்த ஆறு மாதங்களாக என்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை. கணவர் விரும்பினாலும் என் உடல் ஒத்துழைக்கவில்லை... இது சாதாரண மாற்றம்தானா... அல்லது கவனிக்க வேண்டிய விஷயமா? வேறு ஏதாவது உடல்நலக் குறைவுக்கான அறிகுறியா? விளக்கம் தேவை.

- பிரியா குமார் (விகடன் இணையத்திலிருந்து)

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பாலியல் சிகிச்சை மருத்துவர் காமராஜ்.

``மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும். 40 வயது என்பது பெண்களின் வாழ்க்கையில் தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை மிக முக்கியமான காலகட்டம். பொதுவாக, பெண்கள் 35 வயதுக்குப் பிறகுதான் தாம்பத்திய உறவில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். திருமணம், கருத்தரித்தல், குழந்தைப் பிறப்பு, அதை வளர்ப்பது, அதற்குள் அடுத்த கர்ப்பம் என வழக்கமான பொறுப்புகளை முடிப்பதற்குள் அவர்களுக்கு 35 வயது தாண்டிவிடுகிறது. அதுவரை அவர்களால் தாம்பத்திய உறவில் பெரிய கவனத்தைச் செலுத்த முடியாமல் போயிருக்கும். 35 முதல் 45 வயதில்தான் செக்ஸ் உறவில் அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். செக்ஸ் உறவு சரியாக இல்லை... கணவர் தாம்பத்திய உறவை சீக்கிரமே முடித்துவிடுகிறார்... தனக்கு உச்சக்கட்டம் ஏற்படவில்லை என்றெல்லாம் அவர்களுக்குத் தோன்றும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

43 வயதில் உங்களுக்கு செக்ஸ் உறவில் ஆர்வமில்லாமல் போக பல காரணங்கள் இருக்கலாம். நிச்சயம் வயது அந்தக் காரணங்களில் ஒன்றல்ல. பல காரணங்கள் என்பதில் உடல்ரீதியான மற்றும் மனரீதியான காரணங்கள் அடங்கும். உடல்ரீதியாக ஹைப்போ தைராய்டு அல்லது ஹைப்பர் தைராய்டு, புரொலாக்டின் என்ற ஹார்மோன் அதிகமிருப்பது, மூட்டுவலி போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

குழந்தைகளை வளர்ப்பதில் தம்பதியருக்கிடையிலான கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள், தன்னை கணவர் சரியாக நடத்துவதில்லை என்ற எண்ணம், செக்ஸ் உறவில் தன் உணர்வுகளை கணவர் மதிப்பதில்லை... போன்ற மனரீதியான காரணங்களும் இதன் பின்னணியில் இருக்கலாம். மனைவி வேலைக்குப் போகாத பட்சத்தில் கணவர் தன்னை மதிப்பதில்லை, செக்ஸ் உறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கலாம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை என இரட்டைச் சுமைகளைச் சுமக்க வேண்டிய சிரமம், மாமியார், மாமனாரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு போன்றவை மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். கணவர் மீதான வெறுப்பு அல்லது வாழ்க்கையின் மீதான வெறுப்பு காரணமாக செக்ஸ் உறவில் அவர்களுக்கு ஆர்வமில்லாமல் போகலாம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Andrea Piacquadio from Pexels

காரணங்கள் எதுவாக இருந்தாலும் சரிசெய்யப்பட வேண்டும். வாழ்க்கையை வீணாக்குவது சரியானதல்ல. மூட்டுவலியோ வேறு உடல்ரீதியான பிரச்னையோ வந்தால் அதைச் சரிசெய்துகொண்டு தொடர்ந்து வாழ்க்கையை வாழ்கிறோம். அதுபோலதான் தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்னைகளையும் சரிசெய்துகொண்டு ஆரோக்கியமான, முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டும். கை, கால்களில் எலும்பு முறிவு, காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் நீங்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், செக்ஸ் உறவில் பிரச்னை என்றால் உங்கள் கணவரும் சேர்ந்து பாதிக்கப்படுவார். எனவே, நீங்கள் மருத்துவரை அணுகி உடல் மற்றும் மனரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கவுன்சலிங், தெரபி என உங்கள் பிரச்னைக்குப் பல தீர்வுகள் உள்ளன. லேட்டஸ்ட்டாக லேசர் சிகிச்சை மூலம்கூட செக்ஸில் ஆர்வமின்மை பிரச்னையை சரிசெய்ய முடியும். பெண்ணுறுப்பில் வலி என்பது இந்த வயதில் முக்கியமான பிரச்னையாக இருக்கும். அது தாம்பத்திய உறவுக்குத் தடையாக இருக்கலாம். அந்தப் பிரச்னையையும் சரிசெய்ய முடியும். எந்தக் காரணத்தையும் மருத்துவரீதியாக சரிசெய்து 70 - 80 வயதுவரை தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும். கவலை வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?