Election bannerElection banner
Published:Updated:

டெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஓர் அலெர்ட் #DoubtOfCommonMan

Dengu
Dengu ( pixabay )

டெங்கு பாதித்த முதல் நாள் பொதுவான அறிகுறிகளான சளி, காய்ச்சல், தலைவலி, உடல் வலி இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் அடுத்த இரண்டு நாள்களில் காய்ச்சல் கடுமையாகும். கண்களுக்குப் பின்னால் தாங்கமுடியாத வலி, எழமுடியாத அளவுக்கு உடம்புவலி இருக்கும்.

தமிழகத்தில் ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கு சென்னையைச் சேர்ந்த சிறுமி உட்பட மூன்று பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஆனால், ``டெங்கு நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. உரிய சிகிச்சைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் டெங்குவிலிருந்து தப்பிக்க முடியும்'' என்கின்றனர் மருத்துவர்கள்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் முத்துராமன் என்கிற வாசகர், `அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க எளிதான உஷார் நடவடிக்கைகள் என்னென்ன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 #DoubtOfCommonMan
#DoubtOfCommonMan

டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகளை விளக்குகிறார் பொது நல மருத்துவர் சோம சேகர்.

``டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். இதில் `டென்- 1 (DENV-1)' உட்பட நான்கு வகை உண்டு. நல்ல தண்ணீரில் `ஏடிஸ் ஏஜிப்தி(Aedes Aegypti)' வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும். இந்த வகை கொசுக்கள் மூன்று வாரங்கள் வரை வாழும். பகலில் மட்டுமே கடிக்கும். வீடுகளில் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் மூடப்படாத டிரம், காலிமனைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கப்புகள், நீண்ட நாள்களாகச் சுத்தம் செய்யப்படாத குடிநீர்த் தொட்டிகள் போன்றவற்றில் இந்தக் கொசுக்கள் முட்டையிடும். இது டெங்கு பாதிப்புள்ளவரைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

mosquitoes
mosquitoes

70 நாள்களுக்கு இந்த வைரஸ் உயிர் வாழும். 500 மீட்டர் தூரம் வரை பரவும் தன்மை உடையது. ஒரு கொசு இருந்தால் அது ஆயிரம் முட்டைகள் வரை இடும். அது பல்கிப் பெருகும். அதேபோல சுத்தமான தண்ணீரில்தான் முட்டையிடும்.

டெங்கு பாதித்த முதல் நாள் பொதுவான அறிகுறிகளான சளி, காய்ச்சல், தலைவலி, உடல் வலி இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் அடுத்த இரண்டு நாள்களில் காய்ச்சல் கடுமையாகும். கண்களுக்குப் பின்னால் தாங்கமுடியாத வலி, எழமுடியாத அளவுக்கு உடம்புவலி இருக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல் மொத்தமாக முடக்கிப் போட்டுவிடும். முகமே கண்ணாடி போல டெங்கு பாதிப்பைக் காட்டிக் கொடுத்துவிடும். முகம் வீங்கியிருக்கும். உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுவது டெங்குவின் முக்கிய அறிகுறி.

mosquitoes
mosquitoes

மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் `என்.எஸ்.ஐ ஆன்டிஜென்(NS1 Ag)', `டெங்கு ஐ.ஜி.எம்(Dengue IGM )', `டெங்கு ஐ.ஜி.ஜி(Dengue IGG)' உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம். ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை 20,000-க்கும் கீழே குறைந்துவிடலாம். ஆகவே, ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக சிகிச்சை கிடையாது, அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்படும். அதனால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதே சிறந்தது" என்றார்.

டெங்குவில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!

* டெங்கு காய்ச்சலைத் தடுப்பதில் தனி மனிதனாக ஒவ்வொருவருக்குமே பொறுப்பு இருக்கிறது. தனி மனித சுகாதாரம் என்பது அவசியம்.

* கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது மூலமாக கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும். அதுவே டெங்கு காய்ச்சல் வரும் முன் காக்கச் சிறந்த வழி.

Dengu virus
Dengu virus

* வீட்டைச் சுற்றி நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருள்களை போட்டுவைக்கக் கூடாது. இவற்றில் நீர் தேங்குவதற்கு வாய்ப்பு இருப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.

* தண்ணீர்ப் பிரச்னை காணப்படும் இடங்களில் அதைச் சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. அவ்வாறு சேமித்து வைக்கும் தண்ணீரை மூடாமல் திறந்து வைத்தால் அதில் கொசுக்கள் முட்டையிடும். எனவே, தண்ணீர் நிரம்பிய வாளி, குடம், தண்ணீர்த் தொட்டி போன்றவற்றை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan
  • குளிர்சாதனப்பெட்டி, பூந்தொட்டிகள், குழிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

  • தேங்காய் சிரட்டை, மட்டைகள், டயர் போன்றவற்றை சாலையோரங்களில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • ஈரப்பதம் இருந்தாலே கொசு முட்டையிட்டுவிடும். எனவே, கழிவறைகளைச் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும்.

Doctor R.Somasekar
Doctor R.Somasekar

* கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் ஏஜிப்தி கொசுவானது பகலில்தான் கடிக்கும் என்பதால் பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வகுப்பறைகள், அலுவலக ஜன்னல்களில் கொசுவலை அமைப்பது அவசியம். * நிலவேம்புக்குடிநீர், பப்பாளிச் சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவற்றைப் பருகுவதும் நல்லது.

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு